நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

12. விடுதலையின் விலை கல்வி

பத்ரு என்ற இடத்தில் குறைஷி இனத்தவர்கள் முஸ்லிம்களை எதிர்த்துப் போர் புரிந்தார்கள். ஆயிரம் போர் வீரர்களும் நூறு குதிரை வீரர்களும் அடங்கிய குறைஷிப் படையை இரண்டு குதிரை வீரர்கள் உட் பட முந்நூற்றுப் பதின் மூன்று பேரேயுடைய முஸ்லிம் படையினர் தோற்கடித்து வெற்றி பெற்றனர்.

அந்தப் போரில் தோற்றுப் பிடிபட்டு அடிமையான கைதிகளைப் பெருமானவர்கள் நடத்தியது போல் பெருந்தன்மையாக வேறு யாரும் நடத்தியிருக்க முடியாது, சஹாபாக்கள் என்ற தம் தோழர்களிடம் ஆளுக்கு இரண்டு அல்லது நான்கு கைதிகள் வீதம் ஒப்படைத்து நல்ல விதமாய் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாயகத்தின் சொற்களை மதித்து நடக்கும் அந்த நல்லன்பர்கள், தம்மிடம் இருந்த ரொட்டியை யெல்லாம் கைதிகளுக்கு சாப்பிடக் கொடுத்து, தாங்கள் பேரீச்சம் பழத்தைத் தின்று வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு இருந்தார்கள். கைதிகளுக்கு உடுக்க உடையில்லாமல் இருந்த போது அந்த சஹாபாக்கள் தங்கள் ஆடைகளை எடுத்துக் கொடுத்தார்கள்.

கைதிகளை என்ன செய்வது என்ற பிரச்சினை வந்த போது பெருமானவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.

பகைவர்கள் யாவரும் பழகியவர்களாகவும் உற வினராகவும் இருப்பதால்,ஏதாவது தொகை பெற்றுக் கொண்டு விடுவித்து விடலாம் என்று ஹஸரத் அபூ பக்கர் அவர்கள் கூறினார்கள். ஆனால் வீரமே மூச்சாகக் கொண்ட ஹஸரத் உமர் அவர்களோ, பகையென்று வந்தபின், உறவினன் அயலவன் என்று பார்த்துக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை; உற வென்று பாராமல் அவர்களைக் கொன்று விட வேண்டும் என்று கூறினார்கள்.

நபிபெருமானுக்கு இந்த வன்முறைச் செயல் பிடிக்கவில்லை. ஹஸரத் அபூபக்கர் அவர்கள் கூறிய அருள் வழியே ஒப்பத் தக்கதாயிருந்தது. எனவே, ஒவ்வொரு கைதியும், நாலாயிரம் திர்ஹம் கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறே பலர் பணம் கொடுத்து விடுதலையானார்

பணம் கொடுக்கும் வசதியற்ற படித்த மனிதர்கள் ஆளுக்குப் பத்துப் பிள்ளைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து விடுதலை பெறலாம் என்று ஒரு புது நிபந்தனை விதிக்கப்பட்டது. தாம் கல்லாதவரா யிருப்பினும், கல்வியின் அருமையை எவ்வளவு பெரிதாக மதித்தார்கள் பெருமானார் என்பதற்கு இது நல்ல சான்றாகும்.

பணவசதியும் இன்றிப் படிப்பறிவும் இன்றித் தம் நிலையாதாமோ என்று கலங்கிய கைதிகளை அவர் களிடமிருந்து எதுவும் பெறாமலே விடுதலை செய்து விடுமாறு பெருமானவர்கள் கட்டளையிட்ட வண்ணம் அனைவரும் விடுதலை பெற்றார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *