
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
18. நன்றி காத்த நல்ல மனிதர்
ஹனபாக் கூட்டத்தாருக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு சண்டை நடந்தது. அது சிறு சண்டைதான். அந்தச் சண்டையில், அக்கூட்டத்தின் தலைவரான “துமாமா’ என்பவர் பிடிப்பட்டார். முஸ்லிம்கள் அவரைப்பிடித்துக் கொண்டு வந்து பெருமானார் திரு முன் நிறுத்தினார் கள். பெருமான் அந்த மனிதரை நோக்கி, “நீர் எவ்விதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க் கிறீர்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தத் துமாமா என்ற நல்ல மனிதர் கூறிய பதில் இதுதான்.
“ஐயா, நீங்கள் என்னைக் கொலை செய்தால், முஸ்லிம்களைக் கொன்ற ஒருவனைப் பழிக்குப் பழி வாங்கியதாகும். ஆனால், இரக்கங்காட்டி என்னை விடுவித்தால், அதற்காக வாழ்நாள் முற்றும் நன்றியறிதலுள்ள ஒரு மனிதனைப் பெற்றதாகும் “
துமாமா என்ற அந்த நல்ல மனிதர் கூறிய பதில் நாயகத் திருமேனியவர்களின் நெஞ்சைத் தொட்டது. உடனே அந்த நல்லவரை விடுவிக்குமாறு கட்டளை யிட்டார்கள்.
விடுதலை பெற்ற துமாமா அங்கிருந்து ஒரு சிறிய ஊற்றுக்குச் சென்றார். அதில் குளித்து விட்டுப் பெருமானிடம் திரும்பி வந்தார்.
“ஐயா, நேற்றுவரை உங்கள் முகத்தை வெறுத்ததுபோல் உலகில் வேறு யாருடைய முகத்தையும் நான் வெறுத்ததில்லை. ஆனால் இன்றோ உங்கள் திருமுகத்தைப் போல் சிறந்தது எனக்கு வேறு எதுவும் இல்லை. நேற்றுவரை உங்கள் மார்க்கத்தை வெறுத்தது போல் வேறு எதையும் நான் வெறுக்கவில்லை. ஆனால் இன்றோ உங்கள் மார்க்கத்தை விடச் சிறந்தது எனக்கு வேறு எதுவும் இல்லை. கடவுள் சத்தியம்” என்று கூறினார்.
அவர்களின் உண்மை உணர்ந்து பெருமானார் அவரை இஸ்லாத்தில் ஏற்றுக் கொண்டார்.



