நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

22. பகைவர்களுக்கும் வாழ்த்து

தாயிப் என்னும் ஊரில் தக்கீப் என்னும் கூட்டத்தார் இருந்து வந்தார்கள். அவர்கள் முஸ்லிம்களின் பகைவர்கள் என்னும் பேராற்றல் படைத்தவர்கள். முஸ்லிம்களைப் பகைத்துப் போராடிய ஹலாஸீன் கூட்டத்தாரில் சிலர் தாயிப்புக்குச் சென்று அடைக் கலம் புகுந்தார்கள், அக்கூட்டத்தாரை விரட்டிச் சென்ற முஸ்லிம் படை தாயிப்பை முற்றுகையிட்டது. தக்கீப் கூட்டத்தார் தங்களைச் சரணடைந்தவர்களையும் சேர்த்துக் கொண்டு கோட்டைக்குள்ளே புகுந்து கொண்டார்கள்.ஓர் ஆண்டுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்திருந்ததால், முற்றுகையைப் பற்றிக் கவலைப் படாமல் அவர்கள் கோட்டைக்குள்ளே நெடுநாட்கள் ஒளிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போருக்கு வருவதாகத் தெரியாது போகவே, பெருமான் அவர்கள் நௌபல் என்ற பெரியவருடன் சேர்ந்து ஆலோசித்து, முற்றுகையைக் கைவிட்டுத் திரும்ப முடிவு செய்தார்கள்.

அவ்வாறு திரும்பும் போது, முஸ்லிம்களில் சிலர், பெருமானை அணுகி, அந்தக் கூட்டத்தாரைச் சபிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அதே தாயிப்பில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பெருமான் அவர் கள் இஸ்லாமிய நன்மார்க்கம் பற்றி விளக்கிப் பேசிக் கொண்டிருந்த போது, தாயிப் வாசிகள் பெருமான் அவர்கள் மீது கற்களை வீசிப் பலமான காயம் உண்டு பண்ணி விட்டார்கள். இரத்தக் காயம் ஏற்படுத்திய அத்தீயவர்களைக் சபிக்கும்படி முஸ்லிம்கள் ஒரு முகமாகப் பெருமானை வேண்டிக் கொண்டார்கள்.

ஆனால் பெருமானவர்கள் அவர்களைச் சபிக்கவில்லை. இறைவனை நோக்கி “ஆண்டவனே, தக்கீப் கூட்டத்தாருக்கு நல்லற வழியைக் காட்டு. என்னிடம் அவர்களை வரும்படி செய்.”  என்று வேண்டிக் கொண்டார்கள்.

அவர்களுடைய வேண்டுகோள் நிறைவேறியது. சிறிது காலத்திற்குப் பின்னர் அதே தக்கீப் கூட்டத்தார் தாமாகவே வந்து பெருமானின் ஆசியைப் பெற்று இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *