நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

4. கலகம் தீர்த்த காவலர்

மக்காவிலே கஅபா ஒரு புனிதமான திருத்தலம். இத் திருத்தலத்தின் சுற்றுமதில்கள் பழுது பட்டிருந்தன. அதனால், வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம் நீர் உட்புகுந்து கட்டிடத்தின் பிற பாகங்களையும் சேதப் படுத்தி வந்தது. மக்கா நகர் மக்கள், அக்கட்டிடத்தைப் புதுப்பிப்பதற்காகக் கூடிப் பேசினார்கள். கட்டிடத்தின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு கூட்டத்தார் கட்டிக் கொடுப்பதென்று ஏற்பாடாயிற்று. இந்த ஏற்பாட்டின் பேரில் கட்டிட வேலை பல பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு நடந்து முடிந்தது.

முக்கியமான பிரகாரத்தில் இருந்த ஹஜர் அஸ்வத் என்னும் புனிதச் சின்னம் கட்டிட வேலைக்காகப் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தது, அதை மீண்டும் நிலை நாட்ட வேண்டிய வேலை மீந்திருந்தது. விண் ணுலகச் சின்னமாகிய அதை நிலைநாட்டும் பேறு தமக்குக் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தார்கள். இதனால் பெரும் கலகமே ஏற்பட இருந்தது.

கலகம் ஏற்படாமல் தடுக்க ஒரு பெரியவர் முன் வந்தார். அவர், அப் புனிதச் சின்னத்தை அமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்ப தென்பதற்கு ஓர் ஆலோசனை கூறினார்.

புனிதத் திருத்தலமாகிய கஅபாவின் வாயில் வழியாக மறு நாள் காலையில் முதன் முதல் யார் வருவாரோ, அவர் கூறும் முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பெரியவர் கூறினார். எல்லோரும் பெரியவர் கருத்தை ஒப்புக்கொண்டனர்.

மறு நாள் காலையில் பெருமான் முஹம்மது அவர் களே எல்லோருக்கும் முன்னால் அங்கு வந்திருந்தார். எல்லோருக்கும் இனியவராகிய அவரின் முடிவை ஏற்றுக்கொள்ள மக்கா நகர் மக்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

பெருமானவர்கள், திருச்சின்னத்தை நிலை நாட்டும் பணியை நிறைவேற்ற யாரும் மனங்கோணாத ஓர் அரிய வழியைக் கண்டு பிடித்துக் கூறினார்கள்.

அகலமான ஒருகனத்த துணி கொண்டு வருமாறு கூறி, அதில் ஹஜர் அஸ்வத்தைத் தூக்கி வைத்தார் கள். ஒவ்வொரு கூட்டத்தாரினின்றும் ஒவ்வொரு தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து துணியைப் பற்றித் தூக்கி, திருச்சின்னத்தை அதற்குரிய இடத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கச் செய்தார்கள். அதைத் தம் கையால் உரிய இடத்தில் நிலைநாட்டினார்கள்.

இச் செயலால் எல்லாக் கூட்டத்தினரும் மன நிறைவு கொண்டார்கள். பெருமானைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *