சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

9. சுருட்டை மயிர்ப் பெண்

காலை நேரம். சூரிய ஒளி எங்கும் பரவியிருந்தது. அப்போது சுருட்டை மயிர்ப் பெண் ஒருத்தி சாலை வழியாக ஓடிக்கொண்டிருந்தாள். சிறிது தூரத்தில் அவளுடைய தோழிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடவே அவள் ஓடினாள்.

அப்போது, குறி சொல்லும் கிழவி ஒருத்தி எதிரே வந்தாள். அவள் அந்தப் பெண்ணிடம், ‘பாப்பா, எங்கே உன் கையைக் காட்டு; பார்க்கலாம்” என்றாள்.

உடனே அந்தப் பெண் நின்றாள். “என்கையைத்தானே பார்க்கவேண்டும்? இதோ என் கை” என்று கூறித் தன்னுடைய கையை விரித்துக் காட்டினாள்.

இதைச் சிறிது தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி பார்த்துவிட்டாள். உடனே அவள் மற்றவர்களிடம், “ஐயோ, நமது மர்ஜாவைப் பாருங்கள். அந்தக் குறிகாரியிடம் கையை நீட்டிக்கொண்டு நிற்கிறாள்!’ என்றாள். உடனே எல்லாரும் அந்தச் சுருட்டை மயிர்ப் பெண் நிற்கும் பக்கம் பார்த்தார்கள். ‘அடியே மர்ஜா, அந்தக் கிழடு ஏதாவது உளறும். அதைக் கேட்டுக்கொண்டு நிற்காதே! ஓடிவா, சீக்கிரம்’ என்று கத்தினார்கள்.

சுருட்டை மயிர்ப் பெண் அவர்களது பேச்சைக் கேட்கவில்லை. கையைக் காட்டிக்கொண்டே நின்றாள். கிழவி அவளது கை ரேகைகளைக் கூர்ந்து பார்த்து விட்டு, “எவ்வளவு அருமையான ரேகைகள்! நீ பெரியவளானதும் உனக்குப் பேரும் புகழும் பெருகி வரப் போகின்றன. நிச்சயமாகச் சொல்கிறேன்” என்றாள்.

இப்படி அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எல்லாரும் அவள் அருகில் வந்துவிட்டார்கள். தோழிகள் வந்து சும்மா நிற்கவில்லை. சுருட்டை மயிர்ப் பெண்ணைக் கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

“ஏண்டியம்மா, உனக்குப் பேர் வரப்போகிறதாம்; புகழ் வரப் போகிறதாம். அப்படியானால், நீ பெரிய சீமாட்டியாகி விடுவாயோ?” என்று கேலியாகக் கேட்டாள் ஒரு பெண்.

“இல்லையடி இல்லை. இவள் பட்டத்து ராணியாகப் போகிறாள். பார்த்துக்கொண்டே இரு” என்று இன்னொருத்தி கிண்டலாகக் கூறினாள்.

இதேபோல் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாகக் கூறிக் கேலி செய்தாள். ஆனால் எவளுமே, ‘இவள் பெரிய விஞ்ஞனியாகப் போகிறாள்!’ என்று சொல்லிக் கேலி செய்யவில்லை.அப்படி எவளாவது சொல்லியிருந்தால் அவள் வாய்க்குச் சர்க்கரை வாங்கிப் போட்டிருக்கலாம். ஏன் தெரியுமா?

அந்தச் சுருட்டை மயிர்ப் பெண் பெரியவளானதும் ஒரு பெரிய விஞ்ஞானியாகவே விளங்கினாள். ஆமாம்,இப்போது புற்றுநோயைக் குணப்படுத்தவும், வாந்திபேதி, எலும்புருக்கிக் காய்ச்சல் முதலியவற்றிற்குக் காரணமான கிருமிகளைக் கொல்லவும் உபயோகப் படுத்துகிறார்களே ரேடியம், அதைக் கண்டுபிடித்தவளே அந்தச் சுருட்டை மயிர்ப் பெண்தான்! அவளுக்கு ஒரு முறையல்ல; இருமுறை நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. வேறு எவருக்கும் அப்படிக் கிடைத்ததில்லை! ஆனாலும், அவளுடைய தோழிகள் சொன்னது போல் ‘மர்ஜா’ என்று சொன்னால் அவளை உங்களுக்குத் தெரியாது. மாடம் கியூரி என்று சொன்னால் நன்றாகத் தெரியும். அப்படித்தானே!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *