
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
38. கோயில் யானை
“சீமா, சாப்பிட வாப்பா. நேரமாகிறது.”
“முடியாது.மீனாட்சி கோயில் யானை வந்தால்தான் சாப்பிடுவேன்.”
“என்ன, மீனாட்சி கோயில் யானை வரவேண்டுமா? சரி, சாப்பிடு. யானை சீக்கிரம் வந்துவிடும்.”
“அதெல்லாம் முடியாது. யானை முதலிலே வரட்டும். அப்புறம் நான் சாப்பிடுகிறேன்.”
சீமாவிடம் எவ்வளவோ கூறிப் பார்த்தாள், அவனுடைய அத்தை. ஆனால் அவன் கேட்டால்தானே! சாப்பிடாமலே முரண்டு செய்தான். அதை அறிந்தார். சீமாவின் அப்பா. உடனே அவர், டேய், இப்போது சாப்பிடுகிறாயா, அல்லது முதுகிலே இரண்டு போடட்டுமா?’ என்று கோபமாகக் கேட்கவில்லை.
அவருக்கு மகனிடத்திலே பிரியம் அதிகம். அத்துடன் நல்ல செல்வாக்கும் இருந்தது. ‘தானப்பமுதலி அக்ரகாரம் சேஷாத்திரி ஐயங்கார்’ என்றால் மதுரையிலே அந்தக் காலத்தில் எல்லாருக்கும் தெரியும். ஆகையால், அவர் உடனே தம்முடைய மகனைப் பார்த்து, “அழாதே! உனக்கு யானைதானே வேண்டும்? இதோ கொண்டுவரச் சொல்கிறேன்” என்று சொன்னார், சொல்லி விட்டுச் சும்மா இருக்கவில்லை. உடனே கோயிலுக்கு ஆள் அனுப்பினார். கொஞ்ச நேரத்தில் சீமா வீட்டு வாசலில் மீனாட்சி கோயில் யானை வந்து நின்றது! யானையைப் பார்த்த பிறகே சீமா சாப்பிட்டான்.
இதேபோல் அந்தச் செல்லப்பிள்ளை சீமா அடிக்கடி பிடிவாதம் செய்வான். ஒரு சமயம் சீமாவை அழைத்துக் கொண்டு அவனுடைய அப்பா சென்னைக்குச் சென்றார். அப்பாவும் மகனும் சென்னையில் மிகவும் புகழ்பெற்றிருந்த வழக்கறிஞரான பாஷ்யம் ஐயங்கார் வீட்டில் தங்கி யிருந்தார்கள்.
அப்போது ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு, சீமாவுக்குப் பொம்மை எஞ்ஜின் ஞாபகம் வந்துவிட்டது. உடனே, ‘பொம்மை எஞ்ஜின் வேணும்’ என்று அழ ஆரம்பித்து விட்டான்.
”இந்த நேரத்தில் பொம்மை எஞ்ஜினுக்கு எங்கே போவது? கடைகளெல்லாம் சாத்தப்பட்டிருக்குமே! நாளைக் காலையில் கட்டாயம் வாங்கித் தருகிறேன்” என்று அப்பா சமாதானம் கூறினார். ஆனால் அந்தப் பிடிவாதக்காரப் பிள்ளையா கேட்கும்? கடைசியில், பாஷ்யம் ஐயங்கார் அவருக்குத் தெரிந்த ஒரு கடைக்காரருக்கு ஆள் அனுப்பினார். கடைக்காரரைத் தேடிப் பிடித்துக் கடையைத் திறக்கச் செய்து, பொம்மை எஞ்ஜினை வாங்கிக் கொண்டு வந்த பிறகே சீமாஸின் அழுகை அடங்கியது.
இவ்வளவு பிடிவாதக்காரனாக இருந்தாலும், சீமாவுக்குப் புத்தி கூர்மை அதிகம். அவனது புத்திசாலித்தனத்தையும், சுறுசுறுப்பையும் கண்டு பாஷ்யம் ஐயங்காரே தம்முடைய பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அப்போது அவனுக்கு வயது 14 தான்!
சீமாவும் மாமனாரைப் போலவே மிகவும் கெட்டிக்கார வழக்கறிஞராகிவிட்டான். ஸ்ரீமான் எஸ். ஸ்ரீநியாஸ் ஐயங்கார் என்றால், “அடேயப்பா, அவர் மிகமிகப் பெரிய வக்கீலாயிற்றே!” என்று சொல்லுவார்கள். நல்ல புகழும், வருமானமும் அவரைத் தேடி வத்துங்கூட, அவர் வழக்கறிஞர் வேலையை உதறித் தள்ளிவிட்டார். தேச விடுதலைக்காகப் பல வழிகளிலும் தொண்டாற்றினார்.
அகில் இந்தியக் காங்கிரசின் தலைவராகவும் ஓராண்டு இருந்திருக்கிறார்!
★ ★ ★



