
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
3. அதிசயத் தம்பி
“தம்பி, இன்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. உடம்பு சரியில்லை. ஆகையால், நான் வழக்கமாகப் பெரிய புராணம் சொல்லும் இடத்திற்கு உடனே நீ போ. அங்கு வந்திருப்பவர்களிடம் எனக்கு உடல் நலமில்லை என்பதை அறிவித்துவிட்டு, பெரிய புராணத்திலிருந்து ஏதேனும் ஒன்றிரண்டு பாடல்களைப் படித்துவிட்டு வா” என்று கூறித் தம்பியை அனுப்பி வைத்தார் அண்ணா.
உடனே புராணம் சொல்லும் இடத்திற்குத் தம்பி சென்றான்; அங்கிருந்த கூட்டத்தாரிடம் அண்ணாவுக்கு உடல் நலமில்லை என்பதைத் தெரிவித்தான். பிறகு, இரண்டொரு பாடல்களை மிகவும் இனிமையாக, உருக்கமாகப் பாடினான். பாட்டைப் பதம் பிரித்து நன்றாகப் புரியும்படியாக அவன் பாடியது, அங்கிருந்தவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே அவர்கள், “தம்பி, நீ பாடுவது நன்றாயிருக்கிறது. இந்தப் பாடல்களுக்கு நீயே பொருள் சொன்னால் இன்னும் நன்றாயிருக்கும். சொல்வாயா?’ என்று கேட்டார்கள்.
அவன் அவர்கள் விருப்பப்படியே ஒரு பாடலை எடுத்து முதலில் அவன் பொருள் சொல்ல ஆரம்பித்தான். பெரிய பெரிய அறிஞர்களால் கூட அவ்வளவு நன்றாக விளக்கிக் கூற முடியாது.அப்படி அருமையாகக் கூறினான் அந்தப் பையன்! சொல்லிக் கொண்டே யிருந்தான், சபையோர் கேட்டுக்கொண்டே யிருந்தார்கள், நேரம் போனதே தெரியவில்லை. இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் பேச்சு முடிந்தது! பேச்சு முடிந்ததும், “தம்பி, இனி பெரிய புராணம் முடியும் வரை நீங்களே வந்து சொல்லுங்கள். அண்ணாவிடம் நாங்கள் சொல்லி விடுகிறோம்” என்று கூட்டத்திலிருந்த பலர் கூறினார்கள். கூறியதோடல்ல; மறுநாளே அவனுடைய அண்ணாவைக் கண்டு நடந்ததை அறிவித்தார்கள். அத்துடன் தங்களுடைய விருப்பத்தையும் வெளியிட்டார்கள்.
இதைக் கேட்டதும் அண்ணாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. “என்ன, நம் தம்பியா அப்படிச் சொல்லுகிறான்! ஒருவேளை நாம் சொல்லுவதைக் கேட்டுக் கேட்டு அப்படியே சொல்ல ஆரம்பித்துவிட்டான் போல் இருக்கிறது?” என்று நினைத்தார். பிறகு “சரி, உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும் இனி, அவனையே வரச் சொல்லுகிறேன்” என்றார்.
அப்புறம் வாரா வாரம் தம்பிதான் புராணம் சொல்லி வந்தான். அவள் திறமை சென்னை நகரம் முழுவதும் பரவியது.மூலை முடுக்கில் இருந்தெல்லாம் மக்கள் அங்கு வந்து அவனுடைய பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்கள். இதை அறிந்த அண்ணாவுக்கு முதலில் நம்பிக்கை ஏற்பட வில்லை.ஒரு நாள் அவர், கூட்டம் நடக்கும் இடத்திற்கு மெதுவாக வந்தார். மறைவாக ஓரிடத்தில் இருந்து கொண்டு தம்பியின் பேச்சை உற்றுக் கேட்டார். கேட்கக் கேட்க அவரது மகிழ்ச்சி பெருகியது. அப்படியே பரவசமாகி விட்டார். “இப்படிப்பட்ட தம்பி கிடைத்ததே நாம் செய்த தவப் பயன்தான்!” என்று நினைத்துப் பூரிப்பு அடைந்தார்.
இப்படிக் கூட்டத்தாரையும், கூடப் பிறந்த அண்ணனையும் வியப்படையச் செய்த அந்தத் தம்பி யார் தெரியுமா? அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை இராமலிங்க அடிகளாரே தான்!



