சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

12. ஓடிப் போனவன்

அந்தக் கிராமத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கே தமிழ் மட்டுமே சொல்லிக்கொடுத்து வந்தார்கள். ஆங்கிலம் படிக்க வேண்டுமானால், அயலூருக்குத்தான் போகவேண்டும்.

அதே கிராமத்தில் ஒரு பணக்காரர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். மகனுக்குத் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்துவிட்டது. இனி, ஆங்கிலம் கற்க வேண்டும். அவர் தம்முடைய மகனை ஆங்கிலம் கற்க அயலூருக்கு அனுப்பவில்லை. அந்த ஊரிலேயே மகனுக்காக ஒரு புதிய ஆங்கிலப் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். அதில் மகனைப் படிக்க வைத்தார். அவனுடன் சேர்ந்து சிலரும் படித்தார்கள்.

‘நம்முடைய மகன் நன்றாகப் படிக்கவேண்டும்; உயர்நிலை அடைய வேண்டும்’ என்ற எண்ணத்தில்தான் அப்பா அப்படிச் செய்தார். ஆனால், மகனோ சரியாகப் படிப்பதில்லை. பள்ளிக்கூடத்துக்கே சரியாகப் போவதில்லை. ‘ஊர் சுற்றி’ யாக இருப்பான். அப்பா வேண்டியவரை சொல்லிப் பார்த்தார்; பயனில்லை!

ஒரு நாள் அப்பா கோபத்தில் அவனை நன்றாக அடித்து விட்டார்; எத்தனையோ முறைகள் அவன் அப்பாவிடம் அடி வாங்கியிருக்கிறான். ஆனாலும், அன்று விழுந்த அடிகளை அவனால் தாங்க முடியவில்லை; உடனே அவனுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டது. ‘இனி, இந்த வீட்டில் ஒரு விநாடி கூட இருக்கப் போவதில்லை. இதோ கிளம்புகிறேன்’ என்று கூறிக் கொண்டே வெளியேறினான். நேராக ஒரு நாவிதரிடம் சென்றான். தலையை மழுங்க மொட்டை அடித்துக் கொண்டான். உடுத்தியிருந்த உடைகளை உதறி எறிந்துவிட்டு, கட்டிய கோவணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டே புறப்பட்டு விட்டான்!

ஊர்ஊராகச் சுற்றினான். கால் வலிக்க அலைந்தான். சரியான சாப்பாடில்லை. நல்ல தூக்கமில்லை. பாவம். எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி இருக்க முடியும்? வயிறு காய்ந்தது. உடல் இளைத்தது. மனம் மாறியது. உடனே, வீடு திரும்ப வேண்டுமென்ற ஆசை தோன்றியது. ஆனாலும், நேராக வீடு செல்ல அவன் தயங்கினான். அப்பாவுக்குக் கடிதம் எழுதவும் மனம் வரவில்லை. யோசித்தான்.

பிறகு, தனது கிராமத்திலிருக்கும் நண்பன் ஒருவனுக்குத் தன்னுடைய கஷ்டங்களையெல்லாம் விளக்கி ஒரு கடிதம் எழுதினான். ‘இந்தக் கடிதத்தை நண்பன் நம் அப்பாவிடம் காட்டுவான். உடனே அவர் கட்டாயம் இங்கு வருவார்; வந்து அழைத்துக் கொண்டு போவார்’ என்பதுதான் அவனுடைய எண்ணம். அவன் எண்ணம் வீண் போகவில்லை. அது போலவே நடந்தது! நண்பன் மூலம் செய்தியை அறிந்ததும், மகனைக் காணாமல் ஏங்கி இருந்த அப்பா ஆவலாக ஓடோடி வந்தார்; மகனைக் கண்டார்; கட்டித்தழுவிக் கண்ணீர் சொரிந்தார். அன்றே இருவரும் ஊர் திரும்பினர்.

நல்லவேளை! அந்த மகன் அப்படியே துறவியாய்ப் போயிருந்தால், அவன் பிற்காலத்தில் எப்படி ஆகி இருப்பானோ? ஒரு வேளை சாது சிதம்பரமாகியிருக்கலாம். அல்லது, யோகி சிதம்பரமாகியிருக்கலாம். ஆனால், தென்னாட்டுத் திலகராகவோ, கப்பலோட்டிய தமிழனாகவோ, தேச பக்தர் வ. உ. சிதம்பரம் பிள்ளையாகவோ விளங்கியிருக்க முடியுமா?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *