சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

17. வகுப்பிலே கடைசி

1642-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினம். அந்த தினத்தில் இங்கிலாந்திலுள்ள ஒரு கிராமத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. “கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தக் குழந்தை பிறந்திருக்கிறது. அதனால், மிகுந்த கீர்த்தியுடன் விளங்கப்போகிறது!” என்று அப்போது சிலர் பேசிக் கொண்டார்கள். அதனைக் கேட்டுப் பிள்ளையின் அம்மா பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

வயது வந்ததும், அந்தப் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், அவன் பள்ளிக்குச் சரியாகப் போகமாட்டான்; பாடத்தை ஒழுங்காகப் படிக்க மாட்டான், இதனால், ‘வகுப்பிலே கடைசி என்று அவனுக்கு மற்ற மாணவர்கள் பட்டப் பெயர் சூட்டி விட்டார்கள். படிப்புத்தான் இல்லை.பலமாவது இருக்கக் கூடாதா? அதுவும் இல்லை. துரும்புபோல் இருந்தது அவனது உடம்பு.

ஒரு நாள், அந்தச் சிறுவனை அவனது வகுப்பிலே படித்த ஒரு முரட்டுப் பையன் வம்புக்கு இழுத்தான். சிறுவன் முதலில் பேசாமல்தான் இருந்தான். ஆனால், அந்த முரடன் சும்மா இருக்கவில்லை. கை நீட்ட ஆரம்பித்து விட்டான். உடனே, “டேய், பேசாமல் போகிறாயா? அல்லது திருப்பித் தரட்டுமா?” என்று சிறுவன் கோபமாகக் கேட்டான்.

“அடேயப்பா! ஆளைப்பார்த்தாலே தெரிகிறதே! நான் ஒரு தட்டு தட்டினால், நீ ஒன்பது குட்டிக்கரணம் போடுவாய். ஜாக்கிரதை!” என்றான் முரடன்.

‘எங்கே, தட்டு பார்க்கலாம்” என்றான் சிறுவன். உடனே முரடன் கையால் தட்டவில்லை; காலால் அச் சிறுவனின் வயிற்றிலே உதைத்து விட்டான்! வயிற்றில் உதை விழுந்ததும், சிறுவனுடைய கோபம் அதிகமாகி விட்டது. ஒரே பாய்ச்சலாக அந்த முரடன்மேல் பாய்ந் தான். அவனைப் பிடித்து ‘மடேர்’ என்று எதிரிலிருந்த சுவரில் தள்ளினான்; அவனுடைய மூக்கைச் சுவருடன் வைத்து, ‘தேய் தேயென்று தேய்த்தான்! பாவம், அந்த முரடன் பயந்து ஓடிவிட்டான்.

முரடனைக் கைச்சண்டையில் தோற்கடித்ததோடு அந்தச் சிறுவன் நிற்கவில்லை. படிப்பிலும் தோற்கடிக்க வேண்டுமென நினைத்தான். முயற்சியுடன் படித்தான். வகுப்பிலே முதல்வனாக மறு பரீட்சையிலே தேறிவிட்டான். அப்புறம், ‘வகுப்பிலே கடைசி’ என்று யாராவது அவனைக் கூப்பிடுவார்களா? இல்லை, அப்படிக் கூப்பிடத்தான்

தைரியம் வருமா?

அந்தச் சிறுவனின் பெயர் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்? அவன் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், உடனே நீங்கள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவேண்டும். இங்கிலாந்தில் ‘லிங்கன் ஷயர்’ என்று ஒரு பிரதேசம் இருக்கிறது. அந்தப் பிரதேசத்தில் ‘கிராந்தம்’ என்ற ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் உள்ள ‘கிங்ஸ் ஸ்கூல்’ என்ற பள்ளிக்கூடத்து ஜன்னல்களைப் பார்த்துக்கொண்டே வந்தால், ஒரு ஜன்னல் சட்டத்திலே அவன் பெயரைக் காணலாம். அங்கே படிக்கும்போது அவனே தன் கைப்பட “ஐ.நியூட்டன்’ என்று அங்கே எழுதி வைத்திருக்கிறான். ஆம், புவிஈர்ப்புச் சக்தி’ என்று படித்திருப்பீர்களே, அந்த சக்தியைக் கண்டுபிடித்தவன் அதே ஐசக் நியூட்டன்தான்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *