
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
19. அஞ்சா நெஞ்சன்
அவனோடு கூடப்பிறந்தவர்கள் பதினோரு பேர். அவன் ஆறாவது பிள்ளை. அவனுடைய தந்தை ஒரு மத குருவாக இருந்தார். அவருடைய வருமானம் மிகக் குறைவு. அதனால் குழந்தைகளை நன்றாக வளர்க்க அவரால் முடியவில்லை. எல்லாரும் எலும்பும் தோலுமாகவே இருந்தார்கள். அந்த ஆறாவது பிள்ளையும் அப்படித்தான் இருந்தான். உடம்பு உறுதியாக இல்லாத போனாலும், அவனுடைய உள்ளம் உறுதியாகவே இருந்தது. ‘பயம்’ என்றால் என்ன என்றே அவனுக்குத் தெரியாது! எந்தக் காரியத்தையும் துணிவோடு செய்வான்.
ஒரு நாள் அவனும் அவனுடைய அண்ணனும் பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டார்கள். பள்ளிக்கூடம் அருகிலே இல்லை. வெகு தூரத்தில் இருந்தது. அதற்குப் போகும் பாதையும் மிசு மோசமாக இருந்தது. அந்தக் காலத்தில்– அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் நல்ல பாதையைக் காண்பதே அபூர்வம். அதிலும். அது மிகவும் கடுமையான பனிக்காலம், வழி நெடுக பனி பெய்து கொண்டிருந்தது.
வீட்டை விட்டுக் கிளம்பும்போதே அவர்களுடைய அப்பா, “பனி மிகவும் அதிகமாகப் பெய்கிறது. ஆகையால் வழியில் ஆபத்து ஏற்படும்போல் தோன்றினால், உடனே திரும்பி வந்துவிடுங்கள், ஆபத்தில் சிக்கிக்கொள்ளா தீர்கள்!” என்று எச்சரித்து அனுப்பினார்.
அண்ணனும் தம்பியும் பள்ளியை நோக்கிப் பனிப் பாதையில் நடந்து சென்றார்கள். வழியிலே ஓரிடத்தில் பாதை மிகவும் குறுகலாக இருந்தது. அத்துடன் சதுப்பு நிலமாகவும் இருந்தது.”இங்கே காலை வைத்தால் நிச்சயம் உள்ளே அழுந்தி விடுவோம்!” என்று நினைத்து எவருமே பயப்படுவார்கள். அந்த அண்ணனும் அப்படி நினைத்துத்தான் பயந்தான். அங்கேயே நின்று விட்டான். ஆனால் தம்பியோ சிறிதும் அஞ்சவில்லை. மேலே செல்லக் காலை எடுத்து வைத்தான்.
அப்போது அண்ணன் “தம்பி, வழியிலே ஆபத்து ஏற்படும் போல் தோன்றினால், உடனே திரும்பி வந்துவிடுங்கள் என்று அப்பா சொன்னாரல்லவா? வா, திரும்பி விடுவோம். இதில் காலை வைத்தால் ஆபத்துத்தான்!” என்றான்.
“அண்ணா, ஆபத்து ஏற்படும்போல் தோன்றினால்தானே அப்பா திரும்பிவரச் சொன்னார்? எனக்கு அப்படித் தோன்றவில்லை. நீ வேண்டுமானால் திரும்பிப் போ” என்று கூறி விட்டுத் தைரியமாகத் தம்பி முன்னோக்கிச் சென்றான். ஆபத்துக்களை யெல்லாம் சாமர்த்தியமாகக்கடந்து பள்ளிக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டான்.
அவனுடைய அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு அவனுடைய அண்ணன் ஆச்சரியப்பட்டான். அப்பாவும் ஆச்சரியப் பட்டார். ஒரு காலத்தில், இந்த உலகமே ஆச்சரியப்பட்டது! அது எப்போது?
மாபெரும் வீரன் நெப்போலியனையே அவன் தோற்கடித்த சமயத்தில்தான்!
நெல்சன் என்ற பெயரைச் சொன்னாலே நெஞ்சை நிமிர்த்தி நிற்பார்கள் ஆங்கிலேயர்கள். இங்கிலாந்தில் எத்தனையோ வீரர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனாலும், ‘வீரருக்கெல்லாம் வீரர்’ என்று போற்றப்படுபவர் இந்த நெல்சன் ஒருவர்தான்!



