சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

35. செடிகளிடம் அன்பு

கல்கத்தாவில் ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்திலே ஒரு மாணவன் படித்துவந்தான். அவன் அப்பா கிராமத்திலிருந்து மாதா மாதம் செலவுக்குப் பணம் அனுப்புவார். பள்ளிக்கூடத்துச் சம்பளத்தை அவன் ஒழுங்காகக் கட்டிவிடுவான். சாப்பாட்டுக்காக உள்ள பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து அந்தப் பணத்தில் நாய், முயல், புறா முதலியவற்றை அவள் வாங்குவான். பிரியமாக அவற்றை வளர்ப்பான். அவை எப்படி வசிக்கின்றன, என்னென்ன சாப்பிடுகின்றன என்றெல்லாம் கவனமாகப் பார்ப்பான்.

அவன் வசித்து வந்த இடத்தில் திறந்த வெளி கொஞ்சம் இருந்தது, அதில் அவன் பலவகைச் செடி கொடிகளையும் வளர்த்துவந்தான். அவற்றிற்கு நீர் பாய்ச்ச அவனே சொந்தமாகச் சில குழாய்களை அமைத்தான். நடு நடுவே சில பாலங்களையும் கட்டி வைத்தான், படிக்கும் நேரம் காப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் அவன் தோட்டத்திலே இருப்பான். செடி கொடிகளெல்லாம் எப்படி வளர்ந்து வருகின்றன என்று தினமும் வேடிக்கையாகப் பார்ப்பான்,

அவனுடைய பள்ளித் தோழர்கள் அவனை விளையாடக் கூப்பிடுவார்கள். அவன் போகமாட்டான். தான் வளர்க்கும் நாய், முயல், முதலியவற்றுடனே விளையாடிக் கொண்டிருப்பான். மீன் பிடிப்பதிலும் அவனுக்கு ஆசை அதிகம். மீன் பிடிக்கும் ஒன்றை எடுத்துக் கொள்வான், பக்கத்திலுள்ள குளம் குட்டைகளுக்குச் சென்று மீன் பிடிப்பாள். அப்போது பிடிப்பான்.அப்போது அவை துள்ளிக் குதிக்குமல்லவா? ‘ஏன் இவை துள்ளிக் குதிக்கின்றன? தண்ணீருக்கும். இவற்றிற்கும் என்ன சம்பந்தம்? வெளியே இருந்தால் வாழ் முடியாதா?’ என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வான்.

விடுமுறைக் காலங்களில் கிராமத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். அப்போது, தான் வளர்க்கும் நாய், முயல் முதலியவற்றை ஊருக்குக் கொண்டு செல்வான். ஆனால், செடி கொடிகளையும் கொண்டு செல்ல முடியுமா? ‘ஐயோ, கொண்டு செல்ல முடியவில்லையே! இவை தண்ணீரில்லாமல் வாடிவிடுமே!’ என்று வருந்துவான்.

செடி கொடிகளிடத்திலே அப்போது அவன் கொண்டிருந்த அன்புதான், பிற்காலத்தில் அவனை ஒரு பெரிய விஞ்ஞானி ஆக்கியது! ஆம், நம்மைப் போலவே செடி கொடிகளுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்ற உண்மையைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவனே அந்தச் சிறுவன்தான்!

இப்போது அந்தச் சிறுவன் யாரென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜகதீஸ் சந்திர போஸ் என்று உடனே கூற ஆரம்பித்து விடுவீர்கள்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *