
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
30. நீல நிறம்
அந்தப் பையனின் பெயர் ராஜகோபாலன். சிறு வயதியிலேயே ராஜகோபாலன் மிகவும் கெட்டிக்காரனாயிருந்தான். அவனுடைய அப்பா அவனுக்கு அடிக்கடி காசு கொடுப்பார். அந்தக் காசை அவன் வீணாகச் செலவழிக்க மாட்டான். பலகாரம் கூட வாங்கிச் சாப்பிடமாட்டான், நல்ல நல்ல புத்தகங்களாக வாங்கிப் படிப்பான். எத்தப் புத்தகத்தைப் படித்தாலும், உடனேயே அதில் உள்ள நல்ல விஷயங்களை மனத்திலே பதிய வைத்துக் கொள்வான். எவ்வளவு நாட்கள் ஆனாலும்,மறக்கமாட்டாள்.
சிறுவயதிலேயே புத்தகம் படிப்பதில் ஆர்வமும் நல்ல ஞாபக சக்தியும் இருந்ததோடு, புத்திகூர்மையும் ராஜ கோபாலனுக்கு அதிகமாயிருந்தது.
ராஜகோபாலன் வாலிபனாகி சென்னையிலுள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, கடற்கரைக்குப் பக்கத்திலுள்ள ஒரு மாணவர் விடுதியில் தங்கியிருந்தான். ஒரு நாள் அந்த விடுதிக்கு சுவாமி விவேகானந்தர் வந்திருந்தார். அவர் விடுதியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வரும் போது, ராஜகோபாலன் இருந்த அறைக்குள் நுழைந்தார். அந்த அறைச் சுவரில் கிருஷ்ணபகவானின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அது ஒரு வர்ணப் படம். அதில் கிருஷ்ண பகவானுடைய உடல் நீல வர்ணத்தில் தீட்டப் பட்டிருந்தது.
அதைப் பார்த்ததும் விவேகானந்தர் ராஜகோபாலனைப் பார்த்து, “கிருஷ்ணபகவானின் உடல் நீல நிறத்தில் இருக் கிறதே, காரணம் தெரியுமா?” என்று கேட்டார்.
உடனே ராஜகோபாலன், ஜன்னல் வழியாகத் தெரிந்த கடலையும், ஆகாயத்தையும் காட்டி, “காயம் நிலமாக இருக்கிறது. கடலும் நீலமாக இருக்கிறது! இரண்டும் எல்லையில்லாது விரிந்து கிடக்கின்றன, அதேபோல் கிருஷ்ண பகவானும் எல்லையில்லாது எங்கும் வியாபித் துள்ளான் என்பதைக் காட்டவே நீலநிறம் கொடுக்கப் பட்டிருக்கிறது.” என்றான்.
இந்த அருமையான பதிலைக் கேட்டதும் விவேகானந்தர் மிகவும் வியப்படைத்தார்: ராஜகோபாலனை மனமாரப் பாராட்டினார்.
சிறு பையனாக இருந்தபோதுதான் அவனை ‘ராஜகோபாலன்’, ‘ராஜகோபாலன்’ என்று அழைத்தார்கள். ஆனால் இப்போதும் அதே பெயரைச் சொல்லியா நாம் அழைக்கிறோம்? இல்லையே! ராஜகோபாலன் என்ற பெயர் மறந்து கூடப்போய்விட்டதே! ராஜாஜி என்றல்லவா மிகவும் மரியாதையாக, அன்பாக அழைக்கிறோம்!
சுதந்திர இந்தியரவின் கவர்னர் ஜெனரலாக விளங்கிய ராஜாஜி, ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை அடையவும், கள்ளை ஒழிக்கவும், தீண்டாமையை அகற்றவும் எவ்வளவு தூரம் பாடுபட்டிருக்கிறார்! அவர் எழுதிய ‘வியாசர் விருந்து’, சக்கரவர்த்தித் திருமகன்’, ‘கற்பனைக்காடு’ போன்ற பல அற்புதமான புத்தகங்களையெல்லாம் நாம் அவசியம் படிக்கவேண்டுமல்லவா?



