சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

33. புத்தகப் பிரியன்

அந்தப் பையனுக்குப் புத்தகம் படிப்பதென்றால் அளவு கடந்த ஆசை. ஆனால், அவனிடம் புத்தகம் வாங்கப் பணம் தான் இல்லை. அவனுடைய அப்பா பணக்காரராக இருந்தால், அவன் விரும்பும் புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுப்பார். ஆனால், அவரோ மிகவும் ஏழை. தச்சு வேலை செய்து வந்தார். அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கப் போகிறது

புத்தகம் வாங்கப் பணம் இல்லாததால், அவன் புத்தகம் படிக்கும் ஆசையை விட்டுவிடவில்லை. வெகுதூரம் நடந்து சென்று, நகரத்திலுள்ள சிலரிடம் கெஞ்சிக் கேட்டுச் சில புத்தகங்களை வாங்கி வருவான். படித்துவிட்டுப் பத்திரமாகத் திருப்பிக் கொடுப்பான்.

ஒரு நாள், ஜனாதிபதி வாஷிங்டன்’ என்ற புத்தகத்தை ஒருவரிடமிருந்து வாங்கி வந்தான். இரவிலே உட்கார்ந்து அதைப் படித்துக் கொண்டேயிருந்தான். படிக்கப் படிக்க அந்தப் புத்தகம் மிகவும் அருமையாக இருந்தது. அமெரிக்கருக்கு விடுதலை வாங்கித் தந்த ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறுதான் அந்தப் புத்தகம். வெகு நேரமா கியும் அவன் படிப்பை நிறுத்தவில்லை. ஆனால், விளக்கிலிருந்த எண்ணெய் தீர்ந்து விட்டது. எண்ணெய் இல்லாத போது இரவிலே எப்படிப் படிக்க முடியும்? ஆகையால் புத்தகத்தை ஜன்னல் ஓரமாக வைத்துவிட்டுப் படுத்தான். நன்றாகத் தூங்கிவிட்டான்.

மறுநாள் காலையில் எழுந்ததும், முதல் வேலையாக புத்தகத்தின் அருகே சென்றான். புத்தகத்தைப் பார்த்ததும் அவன் திடுக்கிட்டான். காரணம், இரவு பெய்த மழையில் அந்தப் புத்தகம் நன்றாக நனைந்து போய்விட்டது! ‘ஐயோ! புத்தகத்தின் சொந்தக்காரர் என்ன சொல்லுவாரோ? புத்தகம் இப்படிக் கெட்டுப் போய்விட்டதே!’ என்று மிகவும் வருத்தப்பட்டான். உடனே, அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, அதன் சொந்தக்காரரிடம் சென்றான்.

“ஐயா, இந்தப் புத்தகத்தை நான் ஜன்னல் ஓரமாக அஜாக்கிரதையாக வைத்துவிட்டு, நேற்று இரவு தூங்கி விட்டேன். மழையில் இது நன்றாக நனைந்து கெட்டுப்போய் விட்டது. தயவு செய்து மன்னித் தருளவேண்டும்” என்று பயத்துடன் கூறினான்.

உடனே அவர், “அதெல்லாம் முடியாது. இந்தப் புத்தகத்தின் விலையை நீ தந்துவிட்டுத்தான் போக வேண்டும். அல்லது, என் வயலில் நீ மூன்று நாட்கள் வேலை செய்யவேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

“சரி, அப்படியே செய்கிறேன். இந்தப் புத்தகத்தை எனக்கே கொடுத்து விடுங்கள்” என்றான்.

அவரும் அதற்குச் சம்மதித்தார். அவருடைய வயலிலே மூன்று நாட்களும் அந்தப் பையன் மாடாக உழைத்தான் நான்காவது நாள் அந்தப் புத்தகம் அவனுக்கே சொந்தமாகிவிட்டது. அப்போது அவன் அடைந்த ஆனந்தத்தை அளவிடவே முடியாது.

அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன் வாழ்க்கை வரலாற்றை ஆர்வமுடன் படித்த அந்தப் பையனும் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி விட்டான்! ஆம். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து அடிமை வியாபாரத்தை ஓழித்துக்கட்டிய ஆப்ரஹாம் லிங்கன்தான் அந்தப் பையன்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *