
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
36. யானைச் சவாரி
அந்தப் பெண்ணுக்கு வயது மூன்றுகூட ஆகவில்லை. அதற்குள் அவளுடைய அம்மா இறந்துவிட்டாள். அப்பா தான் அவளை வளர்த்துவந்தார். அந்த அப்பாவுக்கு அரண்மனையிலே வேலை. அவர் அரண்மனைக்குப் போகும் போதெல்லாம் மகளையும் கூடவே அழைத்துக்கொண்டு போவார். அவள் அரசகுமாரனுடன் சேர்ந்து விளையாடுவாள்.
ஒரு நாள், அரசகுமாரன் ஒரு யானைமேல் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்தான். அதைப் பார்த்தாள் அந்தப் பெண். உடனே அவளும் யானைச்சவாரி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அப்பாவிடம், “அப்பா,அப்பா, என்னையும் யானைமேல் ஏற்றிவிடப்பா” என்று கெஞ்சினாள்.
‘ஐயோ! வேண்டாம். யாளைமேல் ஏறினால், யானை என்ன தெரியுமா செய்யும்? தும்பிக்கையால் உன்னை அப்படியே வளைத்துப் பிடித்துத் தூக்கி எறிந்துவிடும்!” என்றார் அப்பா.
“ராஜகுமாரனை மட்டும் அது தூக்கி எறியாதோ?’ என்று கேட்டாள் அவள்.
“ராஜகுமாரனுக்கும் உனக்கும் வித்தியாசமில்லையா? அவன் ஆண்பிள்ளை.நீ பெண்தானே! உன்னால் யானையை அடக்க முடியுமா?”
“ஏன் முடியாது? அங்குசத்தைக் கழுத்தில் வைத்து அழுத்தினால் யானை அடங்கிவிடுகிறது. அவ்வளவுதானே!
இதைக் கேட்டதும், ‘இவ்வளவு கெட்டிக்காரியாகவும், தைரியசாலியாகவும் நம்முடைய மகள் இருக்கிறாளே!’ என்று நினைத்து அப்பா ஆனந்தப்பட்டார். அதுமுதல் அவள் விருப்பம்போல் நடக்க அனுமதித்தார். அவள் ராஜ குமாரனுடன் சேர்ந்து எல்லா வித்தைகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். வில்வித்தை, கத்திச் சண்டை யானையேற்றம், குதிரையேற்றம் எல்லாவற்றையும் எளிதிலே கற்றுக்கொண்டு விட்டாள், அவளுடைய திறமையையும் வீரத்தையும் கண்டு அரச குடும்பத்தாரே ஆச்சரியப்பட்டார்கள்.
ஏழாவது வயதிலே அவளுக்குத் திருமணம் நடந்தது. ஜான்ஸி அரசருக்கு அவளை மணம்செய்து கொடுத்தார்கள். பதினெட்டாவது வயதிலே அவளுடைய கணவர் இறந்து விட்டார். பிறகு அவளே அரசாங்கத்தை நடத்திவந்தாள். அப்போது ஆங்கிலேயர்கள் ஜான்ஸி நாட்டின் மீது படையெடுத்தார்கள். அவள் அஞ்சவில்லை. வீரமுடன் எதிர்த்தாள்.எதிரிகளைப் புறமுதுகுகாட்டி ஓடும்படி செய்தாள். பலமுறை தோல்வி அடைந்ததால் ஆங்கிலேயரின் ஆத்திரம் அதிகமாகியது. வஞ்சகமாக அவளைக் கொல்ல நினைத்தார்கள். நினைத்தபடியே செய்துவிட்டார்கள்! ஆம், ஒருநாள் போர் நடக்கும்போது அவளின் பின்புறமாக வந்து கத்தியால் அவளைக் குத்திக் கொன்று விட்டான் ஓர் ஆங்கிலேயன்! அப்போது அவளுக்கு வயது இருபத்து இரண்டுதான்!
அந்நியருக்கு அடிமையாகக் கூடாது என்று ஆண்மையுடன் போர்புரிந்து, வீர சுவர்க்கம் அடைந்த அந்தப் பெண்தான் ஜான்ஸி ராணி எனப் போற்றப்படும் லெட்சுமி பாய்!



