சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

37. நாலு விரல் பையன்

“டேய், அவன் காலைப் பாரடா!”

“என்னடாப்பா அவன் காலிலே அதிசயம்?”

“சரியாய்ப் பாரேன். அவன் இடது கால் விரலைப் பார்த்தால் அதிசயம் தானாய்த் தெரிந்துவிடுகிறது!

‘ஆமாண்டா இது என்ன, அவனுக்கு இடது காலிலே நாலே நாலு விரல்தான் இருக்கிறது! ஒரு விரல் எங்கே போய்விட்டதாம்?”

“எங்கேயும் போகவில்லை. சரியாகப் பார். இரண்டாவது விரலும் மூன்றாவது விரலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பது தெரியவில்லையா?”

“அடடே, ஆமாண்டா! நாலு விரல்கள் இருந்தாலும் நடையைப் பார்த்தாயா? எவ்வளவு முறுக்காக நடக்கிறான்!’

தெருவழியாகச் செல்லும் ஒரு சிறுவனைப் பார்த்து இப்படி இரு பையன்கள் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். பாவம், அந்தச் சிறுவன் என்ன செய்வான்? பிறக்கும்போதே அவனுக்கு இடது காலில் நாலு விரல்கள்தான் இருந்தன.

அவன் ஒரு பணக்காரப்பையனாக இருந்தாலும் காலிலே ‘பூட்ஸ்” போட்டுக்கொண்டிருப்பான். அந்தக் குறை மற்றவர்களுக்குத் தெரியாமலிருக்கும். ஆனால், அவனோ பரம ஏழை. அவன் அப்பா செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்து வந்தார். “அப்பாதான் செருப்புத் தைப்பவர் ஆயிற்றே! ஏன் தம்முடைய மகனுக்கு பூட்ஸ் தைத்துக் கொடுக்கக் கூடாது?” என்று சிலர் கேட்கலாம். ‘பூட்ஸ் தைப்பதென்றால், முதலில் தோல் வாங்க வேண்டாமா? பணத்திற்கு அவர் என்ன செய்வார்?

‘பூட்ஸ்’ அணியாமல் வெறும் காலுடன் நடக்கும் அந்தச் சிறுவனை அடிக்கடி அவனுடைய நண்பர்களும் மற்றவர்களும் கேலி செய்துவந்தார்கள். இது அவனுக்கு ஆத்திரமூட்டியது. சில சமயங்களில் அந்த ஆத்திரம் அதிகமாகிவிடும். கோபம் வந்துவிடும். அவர்களை அடித்து நொறுக்கிவிடுவான். எத்தனையோ தடவைகள் ‘குஸ்தி’ போட்டிருக்கிறான் வெற்றியும் பெற்றிருக்கிறான்.

அவன் யார்?

அவன்தான் டேவிட் அவன் யார் டேவிட்?

டேவிட், கோபா, இவாஜேவிச் என்றெல்லாம் அவனுக்குப் பல பெயர்கள் உண்டு. ஆனாலும், ‘இரும்பு மனிதன்’ என்று சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

இப்போதும் புரியவில்லையா?

சரி ‘இரும்பு மனிதன்’ என்பதை ரஷ்யாவில் எப்படி அழைப்பார்கள் என்பதைச் சொன்னால் புரிந்துவிடும்.

ஸ்டாலின்

ஸ்டாலின் என்றாலே இரும்பு மனிதன் என்பதுதான் பொருள்.

செருப்புத் தைப்பவரின் மகனாகப் பிறந்து, ரஷ்யா தேசத்திற்கே தலைவராயிருந்த ஸ்டாலின்தான் அந்த நாலு விரல் பையன்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *