சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

27. நல்ல தோழி

அந்தச் சிறுமிக்கு வயது ஏழு இருக்கும். அவள் ஆடிப் பாடிக்கொண்டே வீட்டைவிட்டுக் கிளம்பினாள்; அடுத்த வீட்டை நோக்கி ஓடினாள்; அந்த வீட்டுக்குள் நுழைந்ததும், அங்கே விருந்தினராக வந்திருந்த ஒரு சீமாட்டியைக் கண்டாள்.

சீமாட்டியும் சிறுமியைப் பார்த்தாள். உடனே அவளை அன்போடு அருகில் அழைத்தாள், சிறிது நேரம் அவளுடன் பேசிப் பார்த்தாள். அவளுக்கு அச்சிறுமியை மிகவும் பிடித்து விட்டது.

உடனே அச்சிறுமியிடம், “நீ என் வீட்டுக்கு வருகிறாயா? என் வீட்டிலேயே நீ இருக்கலாம். அங்கே உன்னைப் போலவே ஒரு பெண் இருக்கிறாள். இருவரும் ஆனந்தமாக ஆடலாம்; பாடலாம். உனக்கு வேண்டியதையெல்லாம் நான் வாங்கித் தருவேன். என்ன, வருகிறாயா?” என்று கேட்டாள் சீமாட்டி.

சிறுமி கொஞ்சம் தயங்கினாள். பிறகு,”அம்மா என்ன சொல்லுவாளோ…” என்று இழுத்தாள்.

“நீ வா, உன் அம்மாவைக் கேட்போம். அம்மா ஒத்துக் கொண்டால், நீ கட்டாயம் என் வீட்டுக்கு வந்து விட வேண்டும், சரிதானா?” என்று கேட்டுக்கொண்டே அந்தச் சிறுமியை அவளுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் சீமாட்டி.

சிறுமியின் அம்மாவிடம், அம்மா, “நான் என் சொந்தக்காரப் பெண் ஒருத்தியை சுவீகாரம் எடுத்து வளர்த்து வருகிறேன். அவளுடன் சேர்ந்து படிக்கவும், விளையாடவும் உங்கள் பெண் இருந்தால் நன்றாயிருக்கும். இவளை நான் ஒரு குறையுமில்லாமல் வளர்த்து வருவேன். என்னோடு இவளை அனுப்பி வைப்பீர்களா?” என்று கேட்டாள் சீமாட்டி.

அம்மா முதலில் தயங்கினாள். சிறிது நேரம் யோசனை செய்தாள். பிறகு, நாமோ ஏழை. நம் வீட்டில் இருந்தால் சாப்பாட்டுக்குக்கூட இவள் கஷ்டப்பட வேண்டும். சீமாட்டி வீட்டுக்குச் சென்றாலாவது சீராக வாழலாம் என்று நினைத்து, “சரி உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்” என்றாள்.

சீமாட்டி அந்தச் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். தன்னுடைய சுவீகாரப் புதல்விக்கு அவளைத் தோழியாக்கினாள். இருவருக்கும் சீமாட்டியே நல்ல முறையில் படிப்புச் சொல்லிக்கொடுத்தாள். அயல்நாடுகளுக்கும் அவர்களை அழைத்துச் சென்றாள். இவற்றால் அந்தச் சிறுமியின் அறிவும் அனுபவமும் வளர்ந்தன. பிறருக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கமும் தோன்றியது.

அவள் பிறந்ததும் வளர்ந்ததும், அதிகமான ஆண்டுகள் வாழ்ந்ததும் ஐரோப்பாவில் தான்.ஆனாலும், அதிகமாகத் தொண்டு செய்தது நம் இந்தியாவில்தான்! ஆம், அவள் நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்டாள்; சிறைக்குச் சென்றாள்; அகில இந்தியக் காங்கிரஸின் தலைவியாகவும் விளங்கினாள். சென்னை அடையாற்றில் இருக்கிறதே பிரம்ம ஞான சபை, அதற்கு உலகம் முழுவதும் பல கிளைச் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தலைவியாக இருந்து இருபத்தாறு ஆண்டுகள் இடைவிடாமல் தொண்டாற்றிருக்கிறாள். இப்போது அவள் யாரென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவள்தான் ‘அன்னை வசந்தை’ என்று நாமெல்லாம் அன்போடு அழைக்கும் டாக்டர் அன்னி பெஸண்ட்,

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *