சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

21. நோயாளிப் பொம்மை

இப்போது ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இருக்கிறது; நல்ல காற்றோட்டம் இருக்கிறது. நோயாளிகளைக் கவனிக்க நர்ஸுகள் இருக்கிறார்கள்; அங்கேயே உணவு கொடுக்கிறார்கள். இன்னும் பல வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.

ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த மாதிரி வசதிகளையெல்லாம் ஆஸ்பத்திரிகளில் காண முடியாது. இருட்டு அறைகளில் நோயாளிகளைப் போட்டுவைப்பார்கள். சரியாகக் கவனிக்க மாட்டார்கள். ஆஸ்பத்திரிக்குப் போனாலே சுடுகாட்டுக்குப்போனது போலத்தான்!

அந்தக் காலத்து நர்ஸுகளுக்குப் படிப்பு வாசனை கிடையாது. அவர்களில் அநேகர் மிகவும் கேவலமாக நடந்து கொள்வார்கள். நோயாளிகளிடம் உள்ள பொருள்களைத் திருடிக் கொள்வார்கள். நோயாளிகளைக் கொடுமைப்படுத்துவார்கள். மது அருந்துவார்கள். இப்படிப்பட்ட காலத்தில் யாராவது நர்ஸுகளுக்கு மதிப்புக் கொடுப்பார்களா? நர்ஸுகளைக் கண்டாலே சிலர் நையாண்டி செய்வார்கள்; சிலர் தலையில் அடித்துக் கொள்வார்கள்.

நர்ஸுகள் என்றாலே மிகவும் மோசமானவர்கள் என்று நினைக்கும் அந்தக் காலத்தில், ஒரு சிறுமி நர்ஸாக வேண்டுமென்று நினைத்தாள். நினைத்ததோடல்ல; நர்ஸ் போலவே நடித்தும் வந்தாள். அவள் சாதாரணச் சிறுமியல்ல; பணக்காரச் சிறுமி! கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி!

அவள் விளையாட்டுப் பொம்மைகளை வைத்து விளையாடுவதே வேடிக்கையாக இருக்கும். மாப்பிள்ளை பெண் விளையாட்டோ, சாபி விளையாட்டோ வியாட மாட்டாள். அந்தப் பொம்மைகளை நோயாளிகளாக வைத்து விளையாடுவாள். படுக்கைகள் தயாரித்து, அந்தப் பொம்மைகளை அவற்றில் படுக்கவைப்பாள். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கருத்துடன் அந்த நோயாளிகளைக் கவனிப்பாள்.

இந்தக் காட்சியைக் காணும் போதெல்லாம் அவளுடைய அக்காளுக்குக் கோபம் கோபமாக வரும். கோபத்தில் அவள் அந்த நோயாளிப் பொம்மைகளைத் தூக்கி வீசி எறிந்து விடுவாள், பாவம், அந்தச் சிறுமி அலறிக் கொண்டே ஓடிப் போய் அந்தப் பொம்மைகளை எடுத்துக்கொண்டு வருவாள். ஐயோ, உனக்கு இந்தக் கையில் அடிபட்டு விட்டதா? அந்தக் காலில் அடிபட்டு விட்டதா?’ என்று கேட்டுக் கொண்டே அந்தப் பொம்மைகளுக்குக் கட்டுக் கட்டுவாள்.

இப்படிச் சிறுவயதிலேயே நர்ஸாக நினைத்த அந்தச் சிறுமிதான் பெரியவளானதும் ஆஸ்பத்திரிகளும், நர்ஸ்களும் முன்னேறப் பெரும் பாடுபட்டாள். அவள் இல்லா விட்டால் இப்போது இருக்கும் நிலையில் ஆஸ்பத்திரிகளையோ நர்ஸுகளையோ காண முடியாது.

இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்தது யார்?

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அந்த அம்மையார் தான் மேலே கூறப் பட்ட சிறுமி!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *