சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

5. பிழைத்துவிட்டான்!

வீட்டுக்காரரும் அவருடைய நண்பரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘உங்களுடைய பையனைக் காணோமே! எங்கே போய் இருக்கிறான்?” என்று கேட்டார் நண்பர்.

”எங்கே போயிருப்பான்! ஏதேனும் ஒரு மூலையிலே முட்டை மேல் உட்கார்ந்து கொண்டிருப்பான்.”

”என்ன! முட்டைமேல் உட்கார்ந்து கொண்டிருப்பானா! ஏன், உட்கார வேறு இடம் கிடையாதா?

‘அவன் செய்வது எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக்கும். நேற்று நடந்ததைக் கேளுங்கள். வீட்டில் அவனை வெகு நேரமாய்க் காணோம். எங்கே போய் இருப்பான்!’ என்று தேடிப் பார்த்தேன். கடைசியில், அவன் வீட்டின் பின்புறத்திலே ஒரு மூலையில், சில முட்டைகளைக் கீழே வைத்து அவற்றின் மேலே உட்கார்ந்து இருக்கக் கண்டேன். “என்னடா இது. முட்டைமேல் உட்கார்ந்திருக்கிறாய்!” என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன தெரியுமா பதில் சொன்னான்? ‘நம் வீட்டுக் கோழி செய்கிறதே, அதே போல் நானும் முட்டையிலிருந்து குஞ்சை வெளியில் கொண்டு வரப் போகிறேன்’ என்றான்!’

“அடேயப்பா! இந்த வயதிலே அவன் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டான் போலிருக்கிறது!’

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியில் சென்றிருந்த அந்தப் பையனும் அங்கு வந்து சேர்ந்தான். அவன் தலைமயிர் கலைந்திருந்தது. உடை முழுவதும் புழுதி படிந்திருந்தது. அவனைக் கண்டதும், “என்னடா இது அலங்கோலம்?” என்று கேட்டார் அவன் அப்பா.

உடனே அவன் பதில் சொல்ல ஆரம்பித்தான்: “நான் வரும் வழியிலே ஒரு குதிர் இருந்தது. அதன் மேல் பகுதியில் வட்டமான ஒரு மூடி இருந்தது. அந்த மூடியைத் திறந்து கொண்டு அதன் வழியாகக் கோதுமையை உள்ளே கொட்டிக் கொண்டிருந்தார்கள், சில வேலையாட்கள். அவர்கள் கொட்டும் கோதுமை உள்ளே போய் எப்படி விழுகிறது என்று பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. உடனே, குதிரின் மேல் ‘விறு விறு’ என்று ஏறினேன். உச்சியிலிருந்து ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன். அப்போது கால் இடறி, ‘தொப்பென்று உள்ளே விழுந்து விட்டேன்

“ஐயோ! அப்புறம்…? என்று பதற்றத்துடன் கேட்டார் அப்பா.

“நல்ல காலம் உடனே வேலையாட்கள் என்னைக் காப்பாற்றி விட்டார்கள். இல்லாத போனால். உள்ளேயே அமுங்கிச் செத்துப் போயிருப்பேன்!” என்றான் அவன். அவனுக்கு மட்டுமல்ல; நம் எல்லாருக்குமே அது நல்ல காலம்தான்! ‘ஏன்?’ என்று கேட்கிறீர்களா? அவன் அன்று இறந்து போயிருந்தால், இன்று நாம் கிராம போனில் பாட்டுக் கேட்க முடி யா து; சினிமாக் கொட்டகையில் படம் பார்க்க முடியாது. வீட்டில் சுவிட்சைப் போட்டு விளக்கை எரியவைக்க முடியாது. இந்த அற்புதங்களுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தவனே அந்தச் சிறுவன்தான்! அவன் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *