
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
14. மூன்று பூச்சிகள்
“பள்ளிக்கூடத்துக்குச் செல்ல வேண்டும்; பாடங்களை ஒழுங்காகப் படிக்கவேண்டும்; பரீட்சைகளில் தேற வேண்டும்; பட்டங்கள் பெறவேண்டும்” என்ற எண்ண மெல்லாம் அந்தப் பையனுக்கு இல்லை.அப்பா அம்மா கட்டாயப் படுத்துகிறார்களே என்றுதான் அவன் பள்ளிக் கூடம் போய்வந்தான். ஆசிரியர்கள் சொல்வதை அவன் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. எப்போதும் ஏதாவது யோசனை செய்து கொண்டே இருப்பான். இதனால். ஆசிரியர்கள் எல்லாரும் அவனை ‘மக்கு’ என்றார்கள். மாணவர்கள் எல்லாரும் ‘பைத்தியம்’ என்றார்கள்.
பள்ளிக்கூடம் விட்டதும் அவன் நேராக வீட்டுக்கு வர மாட்டான். காடு மேடுகளில் சுற்றிக்கொண்டே திரிவான். வண்டு, வண்ணாத்திப் பூச்சி, விட்டில், வெட்டுக்கிளி இப்படிப்பட்ட பூச்சிகளைப் பிடிப்பதில் அவலுக்கு அளவில்லாத ஆனந்தம். அந்தப் பூச்சிகளைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டு வருவான். அவை எப்படி இருக்கின்றன, என்ன என்ன செய்கின்றன எது எதைத் தின்கின்றன என்றெல்லாம் கவனிப்பான்.
அவனிடத்திலே ஒரு புத்தகம் இருந்தது. அதில் எல்லா விதமான பூச்சிகளின் படங்களும் அச்சிடப்பட்டிருந்தன. அந்தப் பூச்சிகளில் பெரும்பாலான பூச்சிகளை அவன் பிடித்து விட்டான். ஒரு பூச்சியைப் பிடித்தவுடன், அந்தப் பூச்சியின் படம் எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்ப்பான். அந்தப் படத்தின் அடியில், ‘என்னால் பிடிக்கப்பட்டது என்று எழுதி,பிடித்த தேதியையும் குறித்து வைப்பாள். இப்படி அந்தப் புத்தகத்தில் அநேகமாக எல்லாப் படங் களின் அடியிலும் எழுதி வைத்திருந்தான்.
ஒருநாள், அவன் ஒரு பழைய மரத்தின் பட்டையை உறித்தான். உள்ளே அழகான இரண்டு பூச்சிகள் இருந்தன. உடனே, மெதுவாக வலது கையால் ஒரு பூச்சியையும், இடது கையால் மற்றொரு பூச்சியையும் பிடித்துக் கொண்டான். அப்போது இன்னும் ஓர் அழகான பூச்சி உள்ளே இருப்பது தெரிந்தது. அதையும் பிடித்துவிட வேண்டும் என்பது அவனுடைய ஆசை, உடனே, வலது கையிலிருந்த பூச்சியை உதடுகளுக்கிடையே வைத்துக் கொண்டு, அந்தப் புதிய பூச்சியைப் பிடிக்கப் போனான். அப்போது அவன் வாயில் வைத்திருந்த பூச்சி,தன் கொடுக் கிலிருந்து இரு விதமான திரவத்தை அவன் நாக்கில் கக்கி விட்டது. அந்தத் திரவம் பட்டதும் நாக்கு எரிய ஆரம்பித்தது. உடனே ‘து,தூ’ என்று வாயிலிருந்த பூச்சியை அவன் துப்பி விட்டான். அது ‘விர்’ ரென்று பறந்தோடி விட்டது.
இப்படிச் சிறுவயதிலே பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துவந்த சிறுவன்தான் ஒரு காலத்தில் உலகம் போற்றும் பெரிய விஞ்ஞானி ஆகிவிட்டான். பூச்சி புழுக்களைப் பற்றியும், தாவரங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் அவன் பல புது உண்மைகளைக் கண்டுபிடித்தான். ‘மந்தியிலிருந்து மனிதன் வந்தான்’ என்ற உண்மையை உலகுக்கு எடுத்துச் சொன்னவனே அவன்தான்! அவன் பெயர் சார்லஸ் ராபர்ட் டார்வின்.



