சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

2. பெண் வேஷம்

ஒரு பணக்காரருக்குச் சில பெண் குழந்தைகள் இருந்தார்கள். அந்தக் குழந்தைகளை அவர் வெளியில் அனுப்பவே மாட்டார். வீட்டுக்குள்ளேயே அடைத்து வைப்பார். ஆண் குழந்தைகளுடன் அவர்கள் பேசக்கூடாது; சேர்ந்து விளையாடக் கூடாது என்பது அவரது கண்டிப்பான உத்தரவு:

அந்தப் பணக்காரர் வீட்டுக்குச் சமீபத்தில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலே ஒரு சிறு பையன் இருந்தான். அவனுக்கு அந்தப் பணக்காரருடைய போக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் அந்தப் பணக்காரரிடத்திலே இதைக் கூறி விட்டான். உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘நான் அப்படித்தான் செய்வேன்.எங்கே எந்தப் பயலாவது என் பெண்கள் இருக்கும் இடத்திற்குப் போய்விடட்டும், பார்க்கலாம்” என்று வீறாப்புப் பேசினார்.

“ப்பூ. என்ன பிரமாதம்! நானே போய்க் காட்டுகிறேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் அந்தப் பையன். அவன் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறான் என்றே பணக்காரர் நினைத்தார். ஆனால், அவன் அதைக் காரியத்திலே காட்டிவிட்டான்.

ஒரு நாள் மாலை நேரம். அந்தப் பையன் ஒரு சிறுமியைப் போல் அழகாக வேஷம் போட்டுக்கொண்டான். வேஷம் அவனுக்கு மிக மிகப் பொருத்தமாசு இருந்தது. அப்போது யாராலுமே அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த வேஷத்துடன் அவன் பணக்காரர் வீட்டுக்குப் போனான். பணக்காரரின் முன்னே போய் நின்றான்.”ஐயா, நான் பக்கத்து ஊர்க்காரி. இந்த ஊர்ச் சந்தைக்கு வந்தேன். என் கூட வந்தவர்கள் என்னைத் தனியாக விட்டுப் போய்விட்டார்கள். இருட்டிப் போன தால் ஊருக்குப் போகப் பயமாயிருக்கிறது. இன்று இரவு மட்டும் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பீர்களா?* என்று தயவாய்க் கேட்டான்.

பணக்காரரின் மனம் உடனே இளகிவிட்டது. “சரி வா” என்று பெண் வேஷத்திலிருந்த அந்தப் பையனை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த பெண்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பணக்காரருடைய பெண்களும் அவனை ஒரு பெண் என்றே நம்பிவிட்டார்கள். அவனிடம் அன்பாகப் பேசினார்கள். தின்பதற்குப் பலகாரங்கள் கொடுத்தார்கள். அவனுடன் சேர்ந்து விளையாடினார்கள்.மூன்று மணி நேரம் இப்படி ஓடிவிட்டது. அப்போது, “தம்பி! தம்பி! என்ற குரல் தெருவிலிருந்து வந்தது. அந்தக் குரலைக் கேட்டதும், பெண் வேஷத்திலிருந்த அந்தப் பையன் அண்ணா,இதோ வந்து விட்டேன்! என்று கூறிக்கொண்டே எழுந்தான். தன்னைத் தேடிக்கொண்டு வந்த அண்ணன் வாசலில் நிற்பதைக் கண்டான். உடனே வாசலை நோக்கி ஓடினான். அப்போதுதான் எல்லாருக்கும் உண்மை தெரிந்தது. அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். அன்று முதல், அத்தப் பணக்காரர் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதே இல்லை.

அன்று மாறுவேஷம் போட்டுப் பணக்காரரின் மனத்தை மாற்றிய அந்தப் பையனின் பெயர் உங்களுக்குத் தெரியுமா? கதாதரன் என்பதுதான் அவனுடைய பெயர். அந்தப் பெயர்தான் பிற்காலத்தில் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகிவிட்டது

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *