சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

32. எட்டுக் கேள்விகள்

பள்ளியில் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கேள்வித் தாளில் மொத்தம் எட்டுக் கேள்விகள் இருந்தன. அவற்றில் நான்கு கேள்விகளுக்கு மட்டுமே விடை எழுதினால் போதும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த எட்டுக் கேள்விகளுமே கடினமான கேள்விகள். அதனால், கேள்வித் தாளைப் பார்த்ததும் அங்கிருந்த மாணவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் எதிர்பார்த்த கேள்விகளில் ஒன்றுகூட வரவில்லை. கேள்வித் தாளைப் பார்த்துப் பார்த்து அவர்கள் திகைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் மிகவும் கெட்டிக்கார மாணவன் ஒருவன் இருந்தான். அவனும் கேள்வித்தாளைப் பார்த்து விழித்துக் கொண்டுதான் இருந்தான். கேள்விகள் இவ்வளவு கடினமாக இருக்கின்றனவே! எப்படிப் பதில் எழுதுவது?’ என்று எண்ணி அவன் விழிக்கவில்லை; ‘இந்த எட்டுக் கேள்விகளில் நான்கு கேள்விகளுக்கு மட்டும்தானே விடை கேட்டிருக்கிறீர்கள்? எந்த நான்கிற்கு விடை எழுதுவது?’ என்று தெரியாமல்தான் அவன் விழித்தான்!

சிறிது நேரம் இப்படி யோசனை செய்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். ‘விறுவிறு’ என்று விடை எழுத ஆரம்பித்தான். அந்த எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதிவிட்டான். விடைகளின் அடியிலே ஒரு குறிப்பையும் எழுதிவைத்தான்.

“ஐயா, பரீட்சை அதிகாரி அவர்களே, எட்டுக் கேள்வி களுக்குமே விடை எழுதிவிட்டேன். ஏதேனும் நான்கு விடைகளுக்கு ‘மார்க்’ போட்டால் போதும்” என்றுதான் எழுதியிருந்தான்,

பரீட்சை அதிகாரி அவனது விடைகளைப் படித்துப் பார்த்தார், குறிப்பையும் படித்துப் பார்த்தார். அவருக்கு ஒரே திகைப்பாக இருந்தது. “எந்த நான்கு விடைகளுக்கு மார்க் போடுவது?’ என்றே அவருக்குப் புரியவில்லை! ஏன் தெரியுமா? அவன் எழுதியிருந்த அந்த எட்டு விடைகளுமே மணி மணியாக இருந்தன!”

இவ்வளவு தூரம் கெட்டிக்காரனாக இருந்த அந்த மாணவன் பெரியவனானதும், ஒரு வக்கீலாக விளங்கினான். மாதம் ரூபாய் நாலாயிரம், ஐயாயிரம் சம்பாதித்தான் ஆனாலும், வருமானத்தைப் பெரிதாகக் கருதவில்லை. வக்கில் தொழிலை உதறித் தள்ளி விட்டுத் தேச விடுதலைக்காகப் பாடுபட்டான். காந்திஜியின் முக்கிய சீடனாக விளங்கினான்! நம் பாரத நாட்டின் முதல் ஜனாதிபதியாகவும் விளங்கினான்!

பாபு ராஜேந்திர பிரசாத் என்றால் யாருக்குத்தான் தெரியாது!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *