சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

8. அபராதம்

ஏழாவது வகுப்பிலே அந்தச் சிறுவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் பார்ப்பதற்கு மிகவும் வேடிக் கையாக இருப்பான். உடம்பு துரும்புபோல் இருக்கும், மூக்கு அகலமாயிருக்கும். ஆகையால், மற்ற மாணவர்கள் அவனை அடிக்கடி கேலி செய்வார்கள். இதனால், அவன் யாருடனும் சேரமாட்டான். கூடுமானவரை ஒதுங்கியே இருப்பான்.

அவன் படித்த பள்ளியில் தினசரி மாலை வேளையில் தேகப்பயிற்சி வகுப்பு நடக்கும். அந்த வகுப்பிற்கு ஒவ்வொரு பையனும் கட்டாயம் வரவேண்டும். இல்லா விட்டால், தலைமை ஆசிரியர் சும்மா விடமாட்டார். அவர் மிகவும் கண்டிப்பானவர்!

சனிக்கிழமை காலையில் மட்டும்தான் பள்ளிக் கூடம் உண்டு. பிற்பகலில் கிடையாது. ஆனால், அன்று கூட மாலையில் தேகப்பயிற்சி வகுப்பு உண்டு. எல்லாரும் சரியாக நாலு மணிக்கு அங்கு வந்துவிடவேண்டும்.

அன்று சனிக்கிழமை. அந்தச் சிறுவனின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. காலையில் பள்ளிக்கூடம் விட்டுவந்ததும், அவன் அப்பாவுக்கு ஒத்தாசையாகவே பார்த்துக் கொண்டிருந்தான். அன்று மேகங்கள் சூரியனை மறைத்துக் கொண்டிருந்ததால் நேரம் தெரியவில்லை அவனிடம் அப்போது கடிகாரமும் இல்லை.

மணி நாலுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அவன் இன்னும் நேரமாக வில்லை என்று நினைத்துக்கொண்டே சாவதானமாகப் பள்ளிக்குப் புறப்பட்டான்.பள்ளியை நெருங்கியதும் அவன் திடுக்கிட்டான். ஏன்? தேகப்பயிற்சி வகுப்பு முடிந்து எல்லாப் பிள்ளைகளும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். பாவ அந்தச் சிறுவன் ஏமாற்றத் துடன் வீடு வந்து சேர்ந்தான்.

மறுநாள், தலைமை ஆசிரியர் அந்தச் சிறுவனிடம், “நேற்று ஏன் தேகப் பயிற்சி வகுப்பிற்கு வரவில்லை?” என்று கேட்டார்,

அவன் நடந்ததை நடந்தபடி கூறினான். ஆனால், அவன் பேச்சை தலைமை ஆசிரியர் நம்பவில்லை. ஓர் அணாவோ, இரண்டணாவோ அபராதம் விதித்தார்.

‘ஐயோ, அபராதம் கட்டவேண்டுமே!’ என்று அந்தச் சிறுவன் கவலைப்படவில்லை; ‘ஐயோ, தலைமை ஆசிரியர் நான் பொய் சொல்லுகிறேன் என்றல்லவா நினைத்து விட்டார்!” என்றுதான் எண்ணி வருந்தினான். உடனே. அவனுக்கு அழுகை வந்துவிட்டது.

நான் கவனக் குறைவாக இருந்ததால்தானே இப்படியாகிவிட்டது.? ‘ஒருவன் உண்மை பேசிவிட்டால் மட்டும் போதுமா? போதாது. கவனமாகவும் இருக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

அன்று சிறு பையனாக இருந்தவன், பிற்காலத்தில் பெரிய மகாத்மா ஆகிவிட்டான்! அஹிம்சா மூர்த்தி, சத்திய சீலர், இந்தியர் தந்தை என்றெல்லாம் உலகம் போற்றும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இளமையில் நடந்தது தான் மேலே கூறப்பட்ட நிகழ்ச்சி!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *