
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
24. வாழைப் பழம்
பெரியம்மா ஒரு சீப்பு வாழைப் பழத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள். வாழைப்பழச் சீப்பைக் கண்டதும், பிள்ளைகள் எல்லாரும் பெரியம்மாவைச் சூழ்ந்து கொண்டார்கள். பெரியம்மா சீப்பிலிருந்த வாழைப் பழங்களைப் பிய்த்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தாள்.
அந்தப் பிள்ளைகளில் மூத்த பிள்ளையிடத்தில் பெரியம்மாவுக்குப் பிரியம் அதிகம். அதனால், அவனுக்கு அதிகமாகப் பழங்கள் கொடுக்க நினைத்தாள். ஆனால், மற்றவர்களை வைத்துக்கொண்டு எப்படிக் கொடுப்பது? அவர்களும் அதிகமாகக் கேட்பார்களே!
பெரியம்மா அறைக்குள்ளே மீதம் இருந்த பழங்களைக் கொண்டுபோய் வைத்தாள். வைத்துவிட்டு வந்து, பெரிய பையனிடம், “அறைக்குள்ளே இருக்கும் பழங்களெல்லாம் உனக்குத்தான். அப்புறமாக யாருக்கும் தெரியாமல் எடுத்துத் தின்றுவிடு’ என்று சைகை மூலம் அறிவித்தாள், ஆனால் பாவம், அந்தப் பையனுக்கு அவளது சைகையின் அர்த்தம் தெரியவில்லை. அவனுக்குத்தான் தெரியவில்லையே தவிர, அங்கே நின்ற சின்னப் பையன் சுப்புரத்தினத்திற்கு நன்றாகத் தெரிந்துவிட்டது!
உடனே அவன், யாரும் பார்க்காதபடி மெதுவாக அறைக்குள்ளே புகுந்தான். அங்கே இருந்த அத்தனை பழங்களையும் தின்று தீர்த்தான். கடைசியில் பழங்கள் இருந்த இடத்தில் தோல்களை வைத்துவிட்டு மெதுவாக வெளியில் வந்துவிட்டான்.
சிறிது நேரம் சென்றது. பெரியம்மா மூத்த பிள்ளையை அழைத்து, “தம்பி, அறைக்குள்ளே இருக்கிற பழங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னேனே, இன்னும் எடுத்துக் கொள்ளவில்லையா?’ என்று கேட்டாள்.
”இல்லையே!” என்றான் அவன். சரி,உடனே போய் எடுத்துக்கொள். சுப்புரத்தினத்திற்குத் தெரிந்தால் விட மாட்டான்” என்றாள் பெரியம்மா.
உடனேஅவன் ஆவலாக அறைக்குள் ஓடினான். வாழைப் பழங்கள் இருந்த இடத்தை நெருங்கினான். தோல் களைக் கண்டதும் திடுக்கிட்டான். உடனே பெரியம்மா விடம் திரும்பிவந்து கலக்கத்துடன் விஷயத்தைக் கூறினான். பெரியம்மா உடனே சுப்புரத்தினத்தைக் கூப்பிட்டுக் கேட்டாள். “ஆம், நான்தான் தின்றேன்” என்று அவன் துடுக்காகப் பதில் சொன்னன். பெரியம்மா கோபம் கொண்டாள். வாயில் வந்தபடி திட்டினாள்.
இந்தச் செய்திசுப்புரத்தினத்தின் அப்பாவுக்கும் எட்டியது. உடனே சுப்புரத்தினம் நடந்ததை நடந்தபடி ஒரு காகிதத்தில் எழுதி அப்பாவிடம் கொடுத்தான். எப்படி எழுதிக் கொடுத்தான்? வசனத்திலா? இல்லை; பாட்டிலேயே எழுதிக் கொடுத்தான்! அப்பா, அந்த அழகான பாட்டைப் படித்ததும், மிகவும் வியப்படைந்தார். அவனைப் பாராட்டினார். சிறு வயதிலே பாட்டு எழுதிய சுப்புரத்தினம், பிற்காலத்தில் தமிழ்நாடு போற்றும் ஒரு தலைசிறந்த கவிஞராகத் திகழ்ந்தார்.
“என்ன, சுப்புரத்தினமா! அப்படியும் ஒரு கவிஞர் இருந்தாரா?’ என்ற சந்தேகம் உங்களில் சிலருக்குத் தோன்றுகிறதல்லவா? ஆம், தோன்றத்தான் செய்யும். ஏனென்றால், அந்த சுப்புரத்தினம், பாரதிதாசன் என்ற புனை பெயரில் அல்லவா ஒளிந்து கொண்டிருந்தார்!



