
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
26. தம்பியின் கட்டுரை
அண்ணன் சொந்தமாக ஒரு பத்திரிகை நடத்திவந்தார்; சொந்தமாக ஓர் அச்சகமும் வைத்திருந்தார். அங்கேதான் அவருடைய சொந்தத் தம்பி ஒருவனும் வேலை பார்த்து வந்தான். எழுத்துக் கோப்பது, அச்சடிப்பது, பத்திரிகையை வீட்டுக்கு வீடு கொண்டு போய்ப் போடுவது–இப்படிப்பட்ட வேலைகளையெல்லாம் அந்தத் தம்பி செய்து வந்தான்.
அவனுக்கு நிறையப் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நிறையப் படிக்கப் படிக்கத் தானும் ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை தோன்றியது. மனத்தில் தோன்றியதை யெல்லாம் எழுதினான்.எழுதியதை யெல்லாம் பத்திரிகைகளில் வெளியிட விரும்பினான். அண்ணனிடம் கட்டுரைகளைக் கொடுத்தால் வெளியிடுவாரா?’ என்ற சந்தேகம் அவனுக்குத் தோன்றியது. என்ன செய்வது என்று யோசித்தான், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.
ஒரு நாள் இரவு, தான் எழுதிய ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான். நேராக அச்சகத்தை அடைந்தான். தெருப்பக்கமாக இருந்த ஜன்னல் வழியாக ஆசிரியரின் அறைக்குள் கட்டுரையைப் போட்டுவிட்டு வீடு திரும்பினான். இதை அப்போது எவருமே பார்க்கவில்லை.
மறுநாள் காலையில் ஆசிரியரான அண்ணன், அறைக்குள் நுழைந்தார். கீழே ஒரு காகிதக் கற்றை கிடப்பதைக் கண்டார். உடனே குனிந்து அதை எடுத்தார்; படித்துப் பார்த்தார். கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. எழுதியவர் யார் என்று பார்த்தார். பெயரைக் காணோம்! திருப்பித்திருப்பிப் பார்த்தார். பயனில்லை. உடனே, அந்தக் கட்டுரையைத் தம்முடைய நண்பர்களிடம் காட்டினார். எல்லாரும் அதை மிக மிகப் பாராட்டினார்கள். பத்திரிகையில் உடனே வெளியிட வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே அண்ணன் செய்தார்.
தம்பி இப்படியே பல கட்டுரைகளை எழுதி எவருக்கும். தெரியாமல், அறைக்குள் போட்டு வந்தான். எல்லாமே அச்சில் வந்தன. ஆனாலும், எழுதியவர் யார் என்று மட்டும் அவர்களுக்குத் தெரியவில்லை. ‘புகழை விரும்பாத ஓர் அறிஞர்தான் இப்படிச் செய்து வருகிறார்’ என்று நினைத்தார்கள்.
ஆனால், எவ்வளவு நாட்களுக்குத்தான் இது இரகசியமாகவே இருக்க முடியும்? ஒரு நாள் அம்பலமாகி விட்டது! உண்மை தெரிந்ததும், எல்லாரும் தம்பியைப் பாராட்டினார்கள். அதே தம்பி பிற்காலத்தில் ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியனாக விளங்கினான்!
அரசியல், கலை, விஞ்ஞானம்,வேதாந்தம், பொருளாதாரம் முதலிய எல்லாவற்றிலும் அவன் நிபுணனாக விளங்கினான். அப்படியானால் அவன் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே! ஆம், நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது.பெஞ்சமின் ஃபிராங்க்ளின் என்றால், அமெரிக் காவில் சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். ஃபிராங்க்ளின் கண்டுபிடித்த ‘இடிதாங்கி’யால்தான் இன்று பெரிய பெரிய கட்டடங்களெல்லாம் இடியினால் சேதமாகாமல் நிமிர்ந்து நிற்கின்றன?



