சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

31. பதின்மூன்று வயதில் பி.ஏ.

ஒரு சிறு பையன். அவனுக்கு வயது பதின்மூன்றுதான் இருக்கும். அவன் நன்றாக வளர்ந்திருக்கவும் இல்லை; திடகாத்திரமாகவும் இல்லை: குள்ளமாக மெலிவாக இருந்தான்.

அந்த வயதில் அவன் எட்டாவது அல்லது ஒன்பதாவது வகுப்பில் படிப்பதாகவே எல்லாரும் எண்ணுவார்கள். ஆனால், அவன் எட்டாவது ஒன்பதாவது வருப்புக்களையெல்லாம் எப்போதோ கடந்து விட்டான். அப்படியானால், அவள் எஸ்.எஸ்.எல்.ஸி. படிக்கிறானோ? இல்லை. அதையும் கடந்து, இண்டர்மீடியட் வகுப்பையும் கடந்து பி.ஏ. வகுப்புக்கு வந்து விட்டான். ஆம், அவன் சென்னை மாநிலக் கல்லூரியில் (பிரஸிடென்ஸி காலேஜ்) பி.ஏ. வகுப்பில் சேர்ந்து விட்டான்.

அன்று அக்கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராயிருந்த எலியட் என்பவர் பி.ஏ. வகுப்பிற்குள் வந்தார். இடத்தில் போய் உட்கார்ந்ததும், வகுப்பை ஒரு பார்வை பார்த்தார். அப்போது அவருடைய கண்களில் அந்தப் பதின்மூன்று வயதுப் பையன் தென்பட்டான். உடனே அவர், ‘யாரது இந்தப் பொடியன்? தவறுதலாக இங்கே வந்துவிட்டானோ என்று சந்தேகப்பட்டார்.

பிறகு அந்தப் பையனைப் பார்த்து, “ஏனப்பா, நீ யார்? இங்கே எதற்காக வந்தாய்?” என்று கேட்டார்.

”நான் இந்த வகுப்பில்தான் சார் படிக்கிறேன்’ என்றான் அந்தப் பையன்.

“என்ன, இந்த வகுப்பிலே படிக்கிறாயா! உனக்கு என்ன வயது?

“பதின்மூன்று சார்.”

“பதின்மூன்றா! சரி, நீ இன்டர்’ எங்கே படித்தாய்?”

‘வால்டயரில் சார்.’

“உன் பெயர் என்ன?”

“ராமன் சார்.”

இவற்றைக் கேட்டதும், அந்தப் பேராசிரியர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

அவர் மட்டுந்தானா ஆச்சரியப் பட்டார்? எல்லாருமே ஆச்சரியப்பட்டார்கள். அன்று முதல் ஆசிரியர்கள் யாவரும் அவனிடத்திலே அதிகமாக அன்பு காட்டினார்கள். அவன் விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்தினார்கள்.

இப்படி, தனது பதின்மூன்றாவது வயதிலே எல்லாருடைய உள்ளத்தையும் கவர்ந்த அந்த ராமன் யார்? வேறு யாருமல்ல; நோபல் பரிசு பெற்ற நம் தமிழ்நாட்டு விஞ்ஞானி சர்.சி.வி. ராமனேதான்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *