
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
34. அறைக்குள் தியானம்
நரேந்திரன் — இதுதான் அந்தச் சிறுவனுக்கு அவனுடைய அப்பா அம்மா வைத்த பெயர். இந்தப் பெயரைச் சொல்லியே எல்லாரும் அவனை அந்தக் காலத்தில் அழைத்து வந்தார்கள்.
ஒருநாள், நரேந்திரன் கடை வீதிக்குச் சென்றான். அப்போது அங்கு ஒரு ராமர் விக்கிரகத்தைக் கண்டான். உடனே அதை விலைகொடுத்து வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்தான்.
நரேந்திரனுக்கு மிகவும் வேண்டிய தோழன் ஒருவன் இருந்தான். அவனும் நரேந்திரனும் தினந்தோறும் அந்த விக்கிரகத்தை வைத்துப் பூஜை செய்து வந்தார்கள்.
ஒருநாள், அவர்கள் இருவரும் அந்த விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றார்கள். அங்கிருந்த ஓர் அறைக்குள் விக்கிரகத்தை வைத்தார்கள். அறைக் கதவை நன்றாக மூடித் தாழிட்டுவிட்டு விக்கிரகத்தின் எதிரே உட்கார்ந்தார்கள். அலங்காரம், பூஜை எல்லாம் நடத்திய பிறகு இருவரும் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தார்கள். வெகு நேரம் ஆகியும், அவர்கள் தியானம் முடிந்து எழுந்திருக்கவில்லை. அப்படியே ஆடாமல், அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
நரேந்திரனையும், அவன் தோழனையும் வெகுநேரமாகக் காணாததால் இருவீட்டாரும் அவர்களைத் தேட ஆரம்பித்தார்கள். எங்கெங்கோ தேடினார்கள். அகப்படவில்லை. கடைசியில் மாடிக்கு வந்தார்கள். மாடி அறை தாழிடப் பட்டிருப்பதைக் கண்டதும், பெயர்களைச் சொல்லி அழைத்தார்கள்; பதில் இல்லை. உரக்கக் கூவினார்கள். கதவை மடமட வென்று தட்டினார்கள். அப்போதும் பயனில்லை. கடைசியாக அவர்கள் பலமாகக் கதவை உதைத்துத் தள்ளினார்கள். அப்போதுதான் நரேந்திரனின் தோழன் கண் விழித்தான். இனிமேல் இங்கிருந்தால் உதை கிடைக்கும். என்று நினைத்து அவன் ஓடிப் போய்விட்டான். ஆனால் நரேத்திரனோ அப்படியே ஆடாமல் அசையாமல் அடித்து வைத்த சிலைபோல் உட்கார்ந்திருந்தான்.
‘நரேந்திரா! நரேந்திரா!” என்று பலமுறை உரக்கக் கூப்பிட்டுப் பார்த்தார்கள்; அவன் உடம்பைப் பிடித்து அசைத்தார்கள். என்ன செய்தும், அவன் அப்போது கண் விழிக்கவில்லை, வெகு நேரம் சென்ற பிறகே தியானம் கலைந்து கண்களைத் திறந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். பெற்றேரும், மற்றோரும் அங்கு நிற்பதைக் கண்டான். அவர்கள் மூலமாக நடந்ததை அறிந்தான்.
இப்படிச் சிறிய வயதில் இருந்த இடத்திலே இருந்து தியானம் செய்த நரேந்திரன், பெரியவனானதும் ஒரே இடத்தில் இருக்கவில்லை; ஊர் ஊராகச் சுற்றினான்.உலகின் பல பாகங்களுக்கும் சென்றான். அங்கெல்லாம் இந்து மதத்தின் பெருமையை எடுத்துக்கூறிச் சிறப்புப் பெற்றான். ஆனாலும், தரேந்திரன்’ என்ற பெயரைச் சொன்னால் உங்களில் சிலருக்குத் தெரியாது. சுவாமி விவேகானந்தர் என்று சொன்னால், “ஓ, அவரா? நன்றாகத் தெரியுமே! என்று நீங்கள் எல்லாருமே கூற ஆரம்பித்துவிடுவீர்கள்!



