சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

23. வாக்குப் பலித்தது!

அப்போதிருந்த எட்டயபுரம் அரசருக்குத் தமிழிலே ஆர்வம் அதிகம். தமிழ்ப் புலவர்களை நன்றாக ஆதரித்து வந்தார். அந்தப் புலவர்களில் சின்னச்சாமி ஐயர் மிகவும் முக்கியமானவர்.

சின்னச்சாமி ஐயருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் சுப்பையா. சுப்பையா தினமும் புத்தகத்தையும் கற்பலகையையும் தூக்கிக்கொண்டு பள்ளிக்குப் புறப்படுவான். ஆனால், நேராகப் பள்ளி செல்ல மாட்டான்!

வழியிலே யார் வீட்டுத் திண்ணையிலாவது அவற்றை வைத்துவிட்டுக் குளத்தங்கரையை நோக்கிச் செல்வான். அங்குள்ள மரங்களையும் பறவைகளையும் பார்த்துப் பார்த்துப் பரவசமடைவான். திரும்பி வீட்டுக்கு வரும் போது புத்தகத்தையும் கற்பலகையையும் மறந்தே போய் விடுவான். இப்படி அவன் எத்தனையோ தடவைகள் வெறும் கையுடன் வீடு சென்றிருக்கிறான்.

சுப்பையா வெறுங்கையோடு திரும்புவதைக் கண்டால், அவனுடைய சிற்றன்னை உடனே வீட்டை விட்டுப் புறப்பட்டுவிடுவாள்! தெருவிலே இருக்கும் திண்ணைகளிலெல்லாம் புத்தகத்தையும் கற்பலகையையும் தேடுவாள். கிடைத்தால் எடுத்து வருவாள். இல்லாவிட்டால், புதிதாக வாங்கி வந்து சுப்பையாவிடம் கொடுப்பாள். இதெல்லாம் சின்னச்சாமி ஐயருக்குத் தெரியாது. ஆகையால், அவர் சுப்பையா ஒழுங்காகப் பள்ளிக்குப் போய் வருவதாகவே நினைத்துக் கொண்டிருந்தார்.

சுப்பையாவுக்குப் பள்ளிப் படிப்பு பாகற்காயாக இருந்தாலும், பாட்டு எழுதக்கூடிய திறமை நிறைய இருந்தது. அந்த வயதிலேயே அவன் பாட்டுக்கள் எழுதுவான். தான் எழுதிய பாடல்களை எட்டயபுரம் அரசரிடம் கொண்டு போய்க் காட்டுவான்; அழகாகப் பாடுவான். விளக்கியும் கூறுவான். சுப்பையாவின் திறமையைக் கண்டு அரச வியப்படைவார்; பாராட்டிப் பேசுவார். ஆனாலும், மகன் பாட்டெழுதும் செய்தி அப்பாவுக்குத் தெரியவே தெரியாது.

ஒருநாள் எட்டயபுரம் அரசர் சின்னச்சாமி ஐயரிடம் “உங்கள் மகன் அற்புதமாகப் பாட்டு எழுதுகிறான். திரு ஞானசம்பந்தரைப் போலவே அவனுடைய புகழும் எங்கும் பரவப் போகிறது. எட்டயபுரத்தின் பெருமையும் ஓங்கட் போகிறது” என்று சொன்னார்.

அரசர் சொன்னதை அவர் முதலில் நம்பவில்லை. ஆனால், நேரிலே பார்த்த பிறகும் நம்பாமல் இருக்கமுடியுமா? தம்முடைய மகன் மிகவும் அழகாக இயற்கையாகப் பாடல் எழுதுவது கண்டு அவர் பூரித்துப் போய்விட்டார்!

சுப்பையாவின் புகழும், எட்டயபுரத்தின் பெருமையும் எங்கும் பரவப்போவதாக எட்டயபுரம் அரசர் அன்று சொன்னாரே, அது பிற்காலத்தில் நூற்றுக்கு நூறு பலித்து விட்டது! ஆம், அன்று வெறும் சுப்பையாவாக இருந்த அவன், இப்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று எல்லாராலும் போற்றப்படவில்லையா!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *