
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
22. இது சத்தியம்
அந்தப் பள்ளிக்கூடத்திலே அடிக்கடி விழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு விழாவிலும் மாணவர்கள் ஏதேனும் ஒரு நாடகம் நடத்துவார்கள். அந்த நாடகங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சிறு பையன் தவறாமல் நடித்து வருவான். ஒரு நாடகத்தில் அவன் இளவரசர் வேஷத்திலே வருவான். இன்னொரு நாடகத்தில் ஆங்கிலச் சிப்பாய் வேஷத்திலே வருவான். மற்றொரு நாடகத்திலே அவன் ஜமீன்தாராக வருவான். எந்த வேஷம் போட்டாலும், அவனுக்கு அழகாயிருக்கும்; மிகவும் பொருத்தமாயிருக்கும்.
ஒருவனுக்கு அழகும் வேஷப் பொருத்தமும் இருந்து விட்டால் போதுமா? படிப்பு வேண்டாமா? ஒழுக்கம் வேண்டாமா? கட்டாயம் வேண்டும். அந்தச் சிறுவனிடத்திலே அவையெல்லாம் இருந்தன. வகுப்பிலே அவன் தான் முதல்வனாக இருந்தான். நல்ல ஒழுக்கம் உள்ளவனாகவும் இருந்தான்.
அவன் மாலைப் பொழுதில் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம். அந்த மாணவர்கள் சிலர் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள். இது அந்தச் சிறுவனுக்குப் பிடிக்காது. “ஏன் இந்த மாதிரியெல்லாம் பேசுகிறீர்கள்? இதனால், உங்களுக்கு என்ன லாபம்?” என்று அவர்களைச் சிறிது கோபத்தோடு கேட்பான்.
ஒருநாள் விளையாடும்போது அந்தச் சிறுவனே ஒரு கெட்ட வார்த்தையைக் கூறிவிட்டான். வேண்டுமென்று அவன் கூறவில்லை. தவறுதலாக அந்த வார்த்தை அவனது வாயிலிருந்து வெளிவந்து விட்டது. விளையாட்டு மும்முரத்தில் யாரும் அவன் பேசியதைக் கவனிக்கவில்லை. ஆனாலும், அவன் தன் தவறை நினைத்து வருந்தாமலில்லை. விளையாட்டு முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஓரிடத்தில் அவன் நின்றாள். கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று நான் மற்றவர்களுக்குக் கூறி வருகிறேன். ஆனால், நானே இன்று கெட்டவார்த்தை பேசிவிட்டேனே! இது பெரும் தவறல்லவா? இனி, இந்த மாதிரி ஒரு நாளும் பேசமாட்டேன். இது சத்தியம்!” என்று கூறினான். யாரிடம்? தனக்குத்தானே கூறிக் கொண்டான்! அதன்பிறகு அவன் கெட்ட வார்த்தை பேசியதே இல்லை!
சிறுவயதிலேயே ஒழுக்கத்திற்கு அவ்வளவுதூரம் மதிப்புக் கொடுத்துதால்தான், பிற்காலத்தில் அவன் மிகப் பெரிய அறிஞராக விளங்கினான். ஒரு சிறந்த தேச பக்தனாகத் திகழ்ந்தான்; அந்தச் சிறுவனின் பெயர்தான் தாதாபாய் நௌரோஜி.
நௌரோஜி வகுப்பில் மட்டும்தானா முதல்வராயிருந்தார்? பொதுவாழ்விலும் முதல்வராகவே விளங்கினார். லண்டன் காமன்ஸ் சபையில் அங்கத்தினராயிருந்த முதல் இந்தியர் நெளரோஜிதான்! பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பேராசிரியராயிருந்த முதல் இந்தியர் நௌரோஜிதான்! பம்பாய் நகரில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றை முதல் முதலில் ஏற்படுத்தியவரும் நௌரோஜி தான். இவை மட்டுந்தானா? காங்கிரஸ் மகாசபையை ஏற்ப டுத்திய முதல் தலைவர்களுள் நௌரோஜியும் ஒருவராக இருந்தார். ‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தையை முதலில் உபயோகப் படுத்தியவரே நெளரோஜிதான்!



