சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

28. பன்றியின் விலை

சீனா தேசத்தில் ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவர் ஒரு விவசாயி. அவர் ஒரு காலத்தில் ஏழையாக இருந்தார். பட்டாளத்தில் சேர்ந்து ஆண்டுகள் வேலைசெய்த பிறகு, கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது. அதனால் கொஞ்சம் வசதியாக வாழமுடிந்தது.

அந்த விவசாயிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் தினமும் பள்ளிக்குச் சென்று படித்து வருவான். படிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் அவன் வயலுக்குச் சென்று பல வேலை பார்ப்பான். மிகவும் உற்சாகமாகவும், சுறுசுறுப்போடும் அவன் வயல் வேலைகளைச் செய்வான்.

ஒருநாள், அவன் அப்பா, ஓர் ஏழைக் குடியானவன் வீட்டுக்குச் சென்றிருந்தார். அந்தக் குடியானவனிடம் ஒரு பன்றி இருந்தது. அதை வாங்க வேண்டுமென்று நினைத்தார். உடனே விலை பேசினார். விலை முடிவானதும், அவர் குடியானவனிடம் பணத்தைக் கொடுத்தார். ஆனால், அப்போதே பன்றியைக் கொண்டு செல்லவில்லை. “பன்றி இங்கே இருக்கட்டும். நான் ஆள் அனுப்புகிறேன். அவனிடம் பன்றியைக் கொடுத்தனுப்பு” என்று கூறி விட்டுச் சென்றார்.

அன்றைக்கோ அல்லது மறுநாளோ அவர் ஆள் அனுப்பவில்லை. பதினைந்து நாட்கள் சென்ற பிறகே தம்முடைய மகனை அந்தக் குடியானவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பையன் குடியானவனிடம் சென்று பன்றியைத் தரும்படி கேட்டான், அதற்கு அந்தக் குடியானவன், “தம்பி, இந்தப் பன்றியை உன் அப்பா உடனே கொண்டு போகாமல், பதினைந்து நாட்கள் என்னிடமே விட்டுச் சென் றதால் இந்தப் பதினைந்து நாட்களும் நான் இதற்குத் தீனி போட்டு வளர்த்திருக்கிறேன். அத்துடன் பன்றி விலையும் அன்று இருந்ததைவிட இன்று அதிகமாகிவிட்டது, ஆகையால், பேசிய தொகைபோக மேற்கொண்டு ஏதாவது தர வேண்டும்” என்றான்.

“பையன் யோசித்துப் பார்த்தான். குடியானவன் கூறுவதிலே நியாயமிருக்கிறது என்பதை உணர்ந்தான். ஆம், நீங்கள் கூறுவது சரிதான். நான் இப்போதே அப்பாவிடம் சென்று இதைக் கூறிப் பணம் வாங்கி வருகிறேன். அதுவரை பன்றி இங்கேயே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி ஓடினான்,

அப்பாவிடம் நியாயத்தை எடுத்துக் கூறி, மேலும் கொஞ்சம் பணம் வாங்கிவத்து, குடியானவனிடம் கொடுத் தான். பிறகு,பன்றியை அழைத்துக்கொண்டு வீடு சென் றான்.

அதே சிறுவன் பிற்காலத்தில் சீனக் குடியரசின் தலைவராகி விட்டான்! பெயர் மா-சே-துங்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *