
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
1. பொம்மை நாடகம்
அப்பா செருப்புத் தைப்பவர்; அம்மா துணி வெளுப்பவள். அவர்களுக்கு ஒரு பையன். அவன் பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்காகப் போகமாட்டான். அப்படியே போனாலும், பாடங்களைச் சரியாகக் கவனிக்கமாட்டான். எப்போதும், ஏதாவது கனவு கண்டுகொண்டேயிருப்பான்.
அவன் அப்பாவுக்கு அவனிடத்திலே பிரியம் அதிகம். அவர் அவனுக்குப் பொம்மை நாடகமேடை ஒன்றைச் செய்து கொடுத்தார். அதில் அந்தப் பையன் சில பொம்மைகளை நிறுத்தி வைப்பான். சும்மா நிறுத்தி வைக்க மாட்டான்; அலங்காரமான உடுப்புக்களுடனே நிறுத்தி வைப்பான்; தையற்கடையில் கிடைக்கும் துண்டுத் துணிகளைக்கொண்டே மேல் சட்டை, கால் சட்டை தொப்பி முதலியவற்றைத் தயார் செய்து பொம்மைகளுக்குப் போடுவான்.
அவன் தயாரிக்கும் உடைகள் மிகவும் அழகாயிருக்கும். அவனுடைய தையல் வேலையைப் பார்த்து, ‘நம்முடைய மகன் பெரியவனானதும், ஒரு பெரிய தையற்காரன் ஆகி விடுவான்’ என்று அம்மா நினைத்தாள். ஆனால், அவள் நினைத்தபடி நடக்கவில்லை.
அந்தப் பையன் பொம்மைகளை வைத்துத் தினமும் நாடகம் நடத்துவான். மேடையில் நிற்கும் பொம்மைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நடிகராக நினைத்துக் கொள்வான். அந்த நடிகர்களுக்குத் தகுந்தபடி நாடகம் வேண்டாமா? உடனே, அவன் தானாகவே கற்பனை செய்து நாடகம் தயாரிப்பான். பொம்மை நடிகர்கள் ஒவ்வொரு வரும் நடிப்பது போலக் கனவு காண்பான்.
இந்தப் பழக்கம் வளர்ந்துகொண்டே வந்தது. கொஞ்ச காலம் சென்றதும், கதைகள், நாடகங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று.
அவன் பல கதைகள் எழுதினான், நாடகங்கள் எழுதினான். அவை எல்லாம் மிகவும் நன்றாக இருந்தன. ஆனாலும், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் ஏராளமாக இருந்தன. ‘பள்ளிக்கூடத்தில் சரியாகப் படிக்காமல் போனோமே!” என்று அப்போது அவன் வருத்தினான்.
ஆனாலும், முயற்சியை விடவில்லை. நாளடைவில் தவறு இல்லாமல் எழுதக் கற்றுக் கொண்டுவிட்டான். அவன் குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் பல, அந்தக் கதைகளைப் படித்துப் படித்துக் குழந்தைகள் ஆனந்தமடைய வேண்டும் என்பது தான் அவனது ஆசை, அந்த ஆசை வீண் போகவில்லை.
அவன் பிறந்த டென்மார்க் தேசத்துக் குழந்தைகள் மட்டுமல்ல; உலகத்திலுள்ள பல தேசத்துக் குழந்தைகளும் அவனுடைய கதைகளைப் படித்து ஆனந்தம் அடைகிறர்கள். நீங்களும் அவனுடைய கதைகளைப் படித்து ஆனந்தம் அடைய வேண்டாமா?
“அவனுடைய பெயரைச் சொன்னால்தானே அவன் எழுதிய கதைகளைப் படிக்க முடியும்?” என்று கேட்கிறீர்களா? இதோ அவனுடைய பெயரைச் சொல்லிவிட்டேன், ஹான்ஸ் கிறிஸ்தியன் ஆண்டர்சன் என்பது தான் அவனுடைய பெயர்!



