
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
25. குறிப்புப் புத்தகம்
குதிரைகளுக்கு லாடம் அடிப்பதுதான் அவரது தொழில். அந்தத் தொழிலில் அவருக்குக் கிடைத்த வருமானம் மிகக் குறைவு. அந்த வருமானத்தைக் கொண்டு அவரால் தம்முடைய மகனை அதிகமாகப் படிக்கவைக்க முடியவில்லை.
அதனால் பதின்முன்றாவது வயதிலேயே அவனது படிப்பை அவர் நிறுத்தி விட்டார்.
பள்ளிக்கூடத்தை விட்டதும் அந்தப் பையன் ஒரு புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். காலையில் வந்ததும் தரையைக் கூட்டிச் சுத்தம் செய்வது. ஜன்னல் களைத் துடைப்பது, பத்திரிகைகளைக் கொண்டு போய் வாடிக்கைக்காரர்களுக்குக் கொடுப்பது முதலிய சில்லறை வேலைகளை ஆரம்பத்தில் செய்து வந்தான். பிறகு, புத்தகங் களை எப்படி ‘பைண்ட்’ செய்வது என்பதைக் கற்றுக் கொண்டான்.
‘பைண்ட்’ செய்வதற்கு அங்கே அடிக்கடி விஞ்ஞானப் புத்தகங்கள் வரும். அத்தப் புத்தகங்களில் ஒன்றிரண்டை அவன் படித்துப் பார்த்தான். உடனே அவனுக்கு விஞ்ஞானத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அங்கே வரும் விஞ்ஞானப் புத்தகங்களையெல்லாம் ஆர்வத்தோடு படிப்பான். படிப்பதோடு நிற்பதில்லை; அவற்றில் காணப்படும் சில முக்கியமான பகுதிகளை யெல்லாம் தனித் தனித் தாள்களில் குறித்தும் வைத்துக் கொள்வான்.
மேலும், அந்த நகரில் நடக்கும் விஞ்ஞானக் கூட்டங்களுக்கெல்லாம் தவறாமல் போவான். அந்தக் கூட்டங்களில் பெரிய பெரிய விஞ்ஞானிகள் பேசுவார்கள். ஆனாலும் அவர்களுடைய பேச்சுக்களை இலவசமாகக் கேட்க முடியாது. ஒரு ஷில்லிங் (சுமார் முக்கால் ரூபாய்) கொடுத்து டிக்கெட் பெறவேண்டும்! கையில் கிடைக்கும் காசுகளையெல்லாம் சேர்த்துவைத்து இது போன்ற கூட்டங்களுக்கே அவன் செலவிடுவான். அந்த விஞ்ஞானிகள் பேசுவதையும் கேட்டுக் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வான்.இப்படி அவன் எடுத்த குறிப்புக்களை யெல்லாம் அவனே சொந்த மாக ‘பைண்ட்’ செய்து வைத்திருந்தான்.
அவனுடைய கையெழுத்தின் அழகையும், ‘பைண்ட் செய்யும் திறமையையும் இன்றும் லண்டனிலுள்ள ‘ராயல் இன்ஸ்டிட்யூஷன்’ புத்தக சாலையில் காணலாம். 150 ஆண்டு களுக்கு முன்பு அந்தப் பையன், தானே எழுதி, பைண்ட் செய்த அந்தப் புத்தகங்கள் அங்கே வைக்கப்பட்டிருக், கின்றன. அந்தப் புத்தகங்கங்களுக்கு ஏன் அவ்வளவு மதிப்புக் கொடுக்க வேண்டும்?
‘காந்த சக்தியிலிருந்து மின்சார சக்தியை உண்டாக்க முடியும் என்ற உண்மையைக் கண்டுபிடித்த மிகப் பெரிய விஞ்ஞானியாகிய மைக்கேல் ஃபாரடே தயார் செய்தவையே அந்தப் புத்தகங்கள்! அதனால் தான் அவற்றிற்கு அவ்வளவு மதிப்பு: ஃபாரடே இல்லாவிடில் ‘டைனமோ’ என்கிறோமே அதைப் பார்க்க முடியுமா? டைனமோவால் தினமும் எத்தனை இயந்திரங்கள், எத்தனை கருவிகள் வேலை செய்கின்றன!.



