
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
15. பறக்கும் பல்லக்கு
வீட்டு வராந்தாவிலே ஒரு பல்லக்கு இருந்தது. அது மிகவும் பெரிய பல்லக்கு. முன் பக்கம் எட்டுப்பேர், பின்பக்கம் எட்டுப்பேர் சேர்ந்து அதைத் தூக்குவார்கள். தூக்குகிறவர்கள் சிவப்பு பனியன் போட்டுக் கொண்டிருப்பார்கள். கையிலே காப்பு, காதிலே கடுக்கன் முதலிய அலங்காரத்துடன் பல்லக்கைத் தூக்கிச் செல்வார்கள். ஆனால், இதெல்லாம் ஒரு காலத்தில்தான். இப்போது யாரும் அதைத் தூக்குவதில்லை. அதனால்தான் அது வராந்தாவில் தூங்கிக் கொண்டு இருந்தது. ‘பாட்டி காலத்துப் பல்லக்கு’ என்று எல்லாரும் அதைச் சொல்லி வந்தார்கள்.
பல்லக்கின் மேலிருந்த மெருகெல்லாம் போய்விட்டது. வர்ணங்களும் மங்கிப் போயிருந்தன. உள்ளேயிருந்த மெத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழிந்து கொண்டிருந்தது. மெத்தைக்குள்ளிருந்த தேங்காய் நார்களும் வெளியிலே தலைகாட்ட ஆரம்பித்தன!
பாவம், அந்தப் பல்லக்குக்கு இப்போது மதிப்பே இல்லை. ஒருவர் கூட அதைக் கவனிப்பதில்லை. ‘ஒருவர் கூட என்றா சொன்னேன்?’ தப்பு தப்பு ஒரே ஒரு பையன் மட்டும் அதை அடிக்கடி கவனித்து வந்தான். கவனித்து வந்ததோடல்ல; ஓடிப்போய் அதற்குள் அடிக்கடி உட்கார்ந்தும் பொழுது போக்கி வந்தான். அதற்குள் எப்படிப் பொழுது போகும்?
பல்லக்கில் ஏறி உட்கார்ந்ததும், அவனுக்குத் தான் படித்த கதைகளெல்லாம் ஞாபகத்துக்கு வந்துவிடும். உடனே அந்தப் பல்லக்குத் திடீரென்று வானத்திலே பறந்து செல்லும்! மறு நிமிஷம்,ஓர் அழகான தீவிலே இறங்கிவிடும்! பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஒரு பெரிய மலை மேலே ஏறி நிற்கும்! அங்கும் அதிக நேரம் நிற்காது. சிறிது நேரத்தில் அதை விட்டுப் புறப்பட்டு நேராக ஒரு காட்டுக்குள்ளே போய் இறங்கிவிடும்! ஆம், இப்படியெல்லாம் பல்லக்கில் உட்கார்ந்தபடியே அவன் கற்பனை செய்து பார்ப்பான்! நேரம் போவதே தெரியாது. மணிக்கணக்காகப் பல்லக்கில் உட்கார்ந்தபடி அவன் கற்பனை செய்து கொண்டே யிருப்பான்.
அவனுடைய கற்பனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. கற்பனை வளர வளர அவனுக்குக் கவிதை எழுதும் திறமையும் ஏற்பட்டது. பதினோராவது வயதிலே அவன் அற்புதமாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டான்! பிறகு அவன் எத்தனையோ கவிதைகள் எழுதினான். அந்தக் கவிதைகளெல்லாம் உலகம் முழுவதும் பரவின. அவன் ஏழுதிய ‘கீதாஞ்சலி’ என்ற கவிதைப் புத்தகத்துக்கு நோபல் பரிசும் கிடைத்தது.
அப்படியானால் அந்தப் பையனின் பெயர் எங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே! என்றுதானே கேட்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?
இரவீந்திரநாத தாகூர் என்றால், யாருக்குத்தான் தெரியாது!



