சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

29. பையனா பெண்ணா?

இத்தாலி தேசத்திலே ஒரு வைத்தியக் கல்லூரி. அதில் சேருவதற்கு மனுக்கள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மனுவாகப் படித்துக்கொண்டு வந்தார்கள். ஒரு மனுவைப் படித்ததும், கீழே கையெழுத்திட்டிருப்பவர் யார் என்று பார்த்தார்கள். அந்தப் பெயரைக் கண்டதும், “இது யார்? பெயரைப் பார்த்தால் ஒரு பெண் போலல்லவா இருக்கிறது!” என்று சந்தேகப்பட்டார்கள்.

அவர்களுடைய சந்தேகத்திற்குக் காரணம் அந்த வைத்தியக் கல்லூரியில் அதுவரை ஒரு பெண்கூடப் படிப்பதற்கு முன் வந்ததில்லை.

சிறிது நேரம் யோசித்தார்கள். பிறகு, “இது பெண் பெயராக இருக்காது; எவனோ ஒரு பையன் தான் இப்படிப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறான்” என்று முடிவு கட்டினார்கள் கல்லூரியில் சேர்த்துக் கொள்வதாக உடனே தகவலும் அனுப்பினார்கள்.

கல்லூரி திறக்கும் தினத்தன்று பணம் கட்டுவதற்கு வரிசையாக மாணவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடன் ஒரு பெண்ணும் நின்றாள். அவளைப் பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே அதிசயமாக இருந்தது. “என்ன இது, டாக்டர் படிப்பு படிப்பதற்கு ஒரு பெண்கூட வந்திருக்கிறாளே!’ என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள்.

அந்தப் பெண் கல்லூரியில் சேர்ந்தாள்; கருத்துடன் படித்தாள்; டாக்டர் பட்டமும் பெற்றுவிட்டாள். ரோம் சர்வகலாசாலையில் முதல்முதலாக டாக்டர் பட்டம் பெற்ற பெண் அவள்தான்!

பட்டம் பெற்றதும் அவள் டாக்டர் தொழிலில் இறங்கினாள். நல்ல பெயரெடுத்தாள். டாக்டர் தொழில் செய்யும்போதே, அவள் அடிக்கடி ஏழைகள் வீடுகளுக்குச் செல்லுவாள். அங்குள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் படிப்புச் சொல்லிக் கொடுப்பாள். அத்துடன் குழந்தைகளின் கல்வி முறையிலும் ஆர்வம் காட்டி வந்தாள். குழந்தைகளின் மனோ தத்துவத்தையும் நன்றாக ஆராய்ந்தாள்.

‘குழந்தைகளின் கல்வி, செயலோடு ஒட்டியதாக இருக்க வேண்டும். கதைபோலக் கற்பதுதான் கல்வி. குழந்தைகள் தாமாக மனம் இசைந்து கற்பதே கல்வி. இக்கல்வியால் குழந்தைகளின் குண விசேஷங்கள் வளர்கின்றன. தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் திறமையும் வளர்கிறது’.

இந்த முடிவுக்குத் தக்கபடி அவள் ஓரு புதிய கல்வித் திட்டத்தை வகுத்தாள். அந்தத் திட்டத்தை உலகம் முழுவதும் அறிந்தது. தற்போது பல நாடுகளில் அந்தத் திட்டப்படி பல பள்ளிகள் நடைபெறுகின்றன.

அந்தத் திட்டத்தின் பெயரைச் சொன்னால், அந்தப் பெண் டாக்டர் பெயரும் உங்களுக்குத் தெரிந்துவிடும். ‘மாண்டிசோரி கல்வித் திட்டம்’ என்பதுதான் அதன் பெயர். இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே, அந்த டாக்டர் பெயர் மரியா மாண்டிசோரி அம்மையார்தான் என்பது!

இரண்டாவது மகாயுத்தம் நடந்தபோது அந்த அம்மையார் சென்னை அடையாற்றில் தங்கித் தொண்டு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *