சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

11. அடைபட்ட சிறுமி

அந்தச் சிறுமி நல்ல கெட்டிக்காரி. எல்லாப் பாடங்களையும் நன்றாகத்தான் படித்தாள். ஆனாலும், ஆங்கிலப் பாடத்தில் மட்டும் அவள் கொஞ்சங்கூட அக்கறை செலுத்தவில்லை; அலட்சியமாகவே இருந்தாள்.

இப்படி அவள் இருப்பது அவளுடைய அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது அவளுக்கு ஆங்கிலத்திலே ஆர்வம் ஏற்படச் செய்ய வேண்டுமென்று எண்ணினார். தினமும் மகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்துவந்தார். ஆனாலும் பலன் இல்லை!

எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இப்படிப் பொறுமையாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் அவருடைய பொறுமை பறந்து விட்டது? கோபம் அளவுக்கு மீறி வந்துவிட்டது. உடனே, அந்தச் சிறுமியைப் பிடித்து ஓர் அறைக்குள்ளே தள்ளிக் கதவை அடைத்து விட்டார், அன்று முழுவதும் அவள் உள்ளேயே இருந்தாள்.

ஆனால், அப்பா கொடுத்த தண்டனை வீண் போகவில்லை. சிறுமி அறையை விட்டு வெளியில் வந்ததுமே ஆங்கிலத்தில் அக்கறை செலுத்த ஆரம்பித்தாள். அன்று முதல் அப்பாவுடன் ஆங்கிலத்தில் பேசிப் பழகினாள், ஆங்கில ஆசை நாளுக்கு நாள் நன்கு வளர்ந்தது.

ஒரு நாள் கணிதத்தில் சில கேள்விகளுக்கு விடை எழுத வேண்டியிருந்தது. யோசித்து யோசித்துப் பார்த்தாள். கணக்குக்கு விடை தெரியவில்லை. அப் போது, திடீரென்று அவளுக்கு ஏதோ தோன்றியது. மனத்திலே தோன்றியதை அப்படியே அவள் எழுதி விட்டாள்.

அப்படி அவள் என்ன எழுதினாள்? கணக்குகளுக்கு விடையா? இல்லை, இல்லை. ஓர் அழகான ஆங்கிலப் பாடலைத்தான் எழுதிறாள். அந்த அழகான பாடலை இயற்றியவர் யார், தெரியுமா? வேறு யாரும் அல்ல, அந்தச் சிறுமியேதான்! ஆம், பதினோராவது வயதிலே அவள் பாட்டுக் கட்ட ஆரம்பித்தாள்! பதின்மூன்றாவது வயதில் ஆயிரத்து முந்நூறு வரிகளில் ஒரு நீண்ட கவிதையையும், இரண்டாயிரம் வரிகளில் ஒரு நாடகத்தையும் எழுதி எல்லாரையும் ஆச்சரியத்திலே ஆழ்த்தி விட்டாள்!

அடேயப்பா அந்த வயதிலே அப்படிப்  பாட ஆரம்பித்தவள் பெரியவளானதும் எப்படி எப்படியெல்லாம் பாடியிருப்பான்!’ என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? பெரியவளானதும் அவள் எழுதிய பாடல்கள் எத்தனை எத்தனையோ.

தேன்போல் இனிக்கின்றன என்றார்கள் சிலர். தேசபக்தியை ஊட்டுகின்றன என்றார்கள் வேறு சிலர். இன்னும் சிலர், ‘ஏழை எளியவர்களைப் பற்றி எவ்வளவு அற்புதமாகப் பாடியிருக்கிறாள்!’ என்று பாராட்டினார்கள்,

கடைசியில் எல்லாரும் சேர்ந்து ‘இந்தியாவின் கவியரசி’ என்று புகழ ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தியாவின் கவியரசியாகவும், உலகம் போற்றும் கவிக் குயிலாகவும் விளங்கிய அந்த அம்மையார் சரோஜினி தேவிதான்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *