
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
7. அறுந்த காற்றாடி
அந்த வழியாகச் சில சிறுவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஓடும்போது தரையைப் பார்த்துக் கொண்டு ஓடவில்லை. மேலே நிமிர்ந்து பார்த்தபடியே ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அப்படி மேலே என்னதான் இருந்தது? ஒருவேளை அது புறாவாக இருக்குமோ? அதைத் துரத்திக் கொண்டுதான் அவர்கள் செல்லுகிறார்களோ? இல்லை. அது ஒரு காற்றடி! அறுந்து போய்க் காற்றிலே பறந்து செல்லும் அந்தக் காற்றாடியைத் துரத்திக் கொண்டுதான் அவர்கள் சென்றார்கள்.
அந்தக் காற்றாடி, ‘வாருங்கள் வாருங்கள்’ என்று ஆடி ஆடிக்கொண்டே அவர்களைச் சிறிது தூரம் அழைத்துச் சென்றது; பிறகு, ஒருவர் விட்டுத் தோட்டத்திற்குள்ளே புகுந்தது; அங்கிருந்த ஒரு கொன்றை மரக் கிளையிலே போய் உட்கார்ந்து கொண்டது.
இதைக் கண்டனர் அந்தக் கூட்டத்தினர். உடனே அந்தத் தோட்டத்திற்குள் புகுந்தனர். சிலர் கொன்றை மரத்தில் ஏறிக் காற்றாடியை எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களைத் தாங்கும் சக்தி அந்த மரக்கிளைகளுக்கு இல்லை. அதனால், அவை முறிய ஆரம்பித்தன. சிறிதுநேரம் முயன்று பார்த்துவிட்டுத் தோல்வியுடன் அவர்கள் திரும்பிவிட்டனர்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தான் அந்த வீட்டுக்காரச் சிறுவன், அவனுக்கு அந்தக் காற் றாடியை எப்படியாவது எடுத்துவிட வேண்டுமென்று ஆசை. கூட்டத்தார் திரும்பிச் சென்றதும் அவன் மெதுவாக மரத்தை நெருங்கினான். தணிவாக இருந்த ஒரு கிளையைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினான். அவன் மிகவும் சிறுவனாக இருந்ததால் கிளை முறியவில்லை. அவன் மெல்ல மெல்ல ஒவ்வொரு கிளையாகப் பற்றி மேலே சென்றான்.
காற்றாடியின் அருகே சென்றுவிட்டான். இதோ இன்னும் ஒரு விநாடியில் காற்றாடி அவன் கைக்கு வந்துவிடும். ஆனால், எதிர்பாராத விதமாக அப்போது ஒரு குரல் வந்து காரியத்தைக் கெடுத்துவிட்டது. ‘டேய்,டேய்’ என்ற அந்தக் குரலைக் கேட்டதும், “ஐயோ, அம்மா பார்த்துவிட்டாளே” என்று அவன் நினைத்தான். உடனே, அவன் உடல் நடு நடுங்கியது; கையிலே பிடித்திருந்த மரக்கிளையை விட்டு விட்டான். மறு விநாடி அவன் கீழே விழுந்தான். விழும் போது முறிந்திருந்த கிளைகளில் ஒன்று அவனுடைய இடது விலாப் பக்கத்தில் பாய்ந்துவிட்டது! உடனே அங்கிருந்து இரத்தம் ‘குபுகுபு என்று வெளியே பீறிட்டுக்கொண்டு வந்தது. ஆனால் நல்ல காலம், அவன் உயிருக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை. நாட்டு வைத்தியர் ஒருவர் பச்சிலைச் சாற்றால் அந்தக் காயத்தைப் பத்தே நாட்களில் குணப் படுத்தி விட்டார்.
காயம் குணமானாலும் அந்த வடுமட்டும் போகவில்லை. அப்போது ஏற்பட்ட வடு 1953-ம் ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதிவரை அந்த உடலை விட்டு மறையவே இல்லை. அன்றுதான் அதுவும் அந்த உடலுடன் எரிந்து மறைந்துவிட்டது. அப்படியானால் அந்த உடல் யாருடையது?
‘தமிழ்த் தென்றல்’, ‘தொழிலாளரின் தூய தலைவர்’ ‘எல்லார்க்கும் நல்லவர்’ என்றெல்லாம் போற்றப்படும் திரு. வி. கலியாணசுந்தர முதலியாருடையது தான் அந்த உடல்!



