
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
7. கடவுள் கற்பித்தார்
நம் பெருமானுக்கு ஐந்தாண்டானது; இறைவனருளால் முற்றறிவுடன் பிறந்த இயற்கை ஞான வள்ளலுக்கு, வீட்டிலுள்ளோர் கற்றறிவு புகட்டத் தொடங்கினர். கல்வி தொடங்கியதும், தமையனார் சபாபதி பிள்ளையே தம் இளவலுக்குக் கண்ணுங் கருத்துமாகத் தமிழ்மொழி பயிற்றினார். தம்பியைத் தக்க புலவனாக்க மிக்க ஆவல்கொண்டு, முறையாக நிகண்டு, சதகம், அந்தாதி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்பிக்கலானார். ஆனால் நமது அருளறிவாளன் இப்புத்தகப் படிப்பிற் கருத்தூன்றுவதில்லை. இது கண்ட அண்ணல் தம்மிடமின்றேல், தம் ஆசிரியர் சபாபதி முதலியாரிடமாவது ஒழுங்காகப் படிப்பானென்றெண்ணி ஏற்பாடு செய்தார். அங்கும் மேற்படியே மனம் வேறுபட்டிருந்தார் நம் இயற்புலவர். “படிப்பில் கவனமில்லை; குறிப்பின்றிச் சுற்றுகிறானே; இவன் எப்படி முன்னேறப் போகிறான்?” என்று அண்ணல் வருந்தினார். நம் பிள்ளையாரின் உள்ளே வளரும் அருட்புலவன் அவர்களுடைய புற விழிகளுக்குப் புலப்பட வில்லை. நம் பிள்ளையார் செய்ததென்ன? தாமே தமது சத்திய விண்ணப்பத்தில் விளக்குகிறார்:
“இயற்கையுண்மைக் கடவுளே! அறிவார் அறியும் வண்ணங்களெல்லாமுடைய பேரருட் சோதிப் பெருந்தகைக் கடவுளே! குமாரப் பருவத்திற்றானே, உலகிற் சிறுவர்களுடன் கூடிச் சிறு விளையாட்டியற்றல், சிற்றுண்டி விழைதல், அதிசயம் பார்த்தல், அசங்கியம் பேசல், ஆவலித்தழுதல், சிறு சண்டை செய்தல், சிறு குறும்பியற்றல், தன்வசத்துழலல், தாய்வயிற் சலித்தல் முதலிய குற்றங்களில் என்னைச் சிறிதுஞ் செலுத்தாமல், ஒரு சிறிது அறிவு விளங்கப் புரிந்து, இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், ஜபதபஞ் செய்தல், தெய்வம் பரவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங் குணம் பற்றல், பாடிப் பணிதல், பத்திசெய்திருத்தல் முதலிய நற் செய்கைகளில், என்னைச் செலுத்திய தேவரீரது பேரருட் பெருங் கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று உரைப்பேன்! எல்லாமானவராயும் ஒன்று மல்லாதவராயும், எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே! குமாரப் பருவத்தில், என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை யின்றியே, என்றிறத்திற் பயின்றறிதற் அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது உள்ளகத்தேயிருந்து பயிற்றுவித் தருளினீர்.
இடம்பத்தையும் ஆரவாரத்தையும், பிரயாசையையும், பெருமறைப்பையும், போதுபோக்கையும் உண்டு பண்ணுகிற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கும், அறிதற்கும், மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும், துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கல்வியை யிலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து, அத்தென் மொழியாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளுனீர். அச்சிறு பருவத்திற்றானே ஜாதியாசாரம், ஆசிரம ஆசாரம் என்னும் பொய்யுல காசாரங்களைப் பொய்யென் றறிவித்து, அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து, அப்பருவம் ஏறுந்தோறும், என தறிவை விளக்கஞ் செய்து என்னை மேனிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்க வைத்தருளினீர்.”



