அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

1. சிற்சபை அப்பன்

சிதம்பரத்தை நினைத்தால் உள்ளம் சிலிர்க்கிறது. தத்துவவடிவான அந்த சிற்பச் செல்வம் எதிரே நிற்கிறது. அதிற் பரவெளி தோன்றுகிறது; சிற்சபை விளங்குகிறது. அங்கே ஞானநடம் புரியும் நடராஜப் பெருமான் திருவுரு நமது உள்ளத்தில் நடம்புரிகிறது. அருவும், உருவும், அருவுருவுமான மூன்று தன்மையிலும் இறைவனை அங்கே நினைக்கிறோம், துதிக்கிறோம், காண்கிறோம். பொதுநடத் தந்தையின் முன்னிலையில் நின்றால்….ஆ, எத்தனை இன்பச்சிந்தனைகள் உள்ளத்தில் வெள்ளம் போலப் பொங்குகின்றன! நமது தமிழும், நம் தமிழ்ப் பெரியார் பெருமையும், நமது தமிழ்மறையின் சிறப்பும் நம்முன் கதிரோங்கி விளங்குகின்றன. பதஞ்சலி, வியாக்கிரபாதர், திருவுடை அந்தணர்,உபமன்யு,வியாசர், சுகர், செளனகர், சூதர் முதலிய முனிவர் கூட்டம், நம்மைச் சுற்றி நிற்பது போலுணர்கிறோம். திருமூலர், திருநீலகண்டர், நந்தனார்,சேக்கிழார் முதலிய தெய்வப்புலவரின் அன்புக் கனலில் மூழ்குவதுபோல் உணர்கிறோம். ஞானசம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் பாடிய தேவாரத் திருமறைகள் நம்மைச்சுற்றி ஒலிக்கும் போது….ஆ, அந்த இன்பத்தைச் சொல்ல வாயுரை யுண்டோ! பொன்னம்பலக் கிழவராக வந்து செந்தமிழ்த் திருவாசகத்தை ஆர்வமுடன் எழுதிய அருளப்பனை நினைக்கிறோம். தமிழ்ப் பாசுரத்தில் அவனுக் கிருக்கும் ஆர்வந்தான் என்னே ! அத்தகைய ஆர்வம் இன்று நம் தமிழரைப் பற்றாதா என்று வேண்டுகிறோம். பொன்னம்பலப் படியில் சிவபிரானே வைத்த திருவாசகத்திற்கு “இதுதான் பொருள்” என்று சோதியாய் அவனுள்ளே மறைந்த மாணிக்க வாசகரின் பதியன்பை எண்ணி நமது உள்ளம் கரைகிறது!

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி யுயிராசி யுண்மையுமா யின்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றயை யென்சொல்லி வாழ்த்துவனே!

என்று நம்மை யறியாமற் பாடுகிறோம்.

சிதம்பர ரகசியத்தை நன்றாக அறிவோமானால், நமது உடலமே திருக்கோயிலாகும்; உள்ளமே சிற் சபையாகும்; இறைவனே அங்கே திருவடி தூக்கி நடமாடுவான்; அவனது துரியானந்தத் தாண்டவத்தை அருள்விழியால் உணர்வோம்; ஆறுகளெல்லாம் கடலையே நோக்குமாறுபோல, உலகிலுள்ள ஆன்மாக்களெல்லாம், சமயங்களெல்லாம் ஒரே அருளிறைவனை நோக்கிச் செல்லக் காண்போம். சாதி சமய வேறுபாடுகளெல்லாம் மாந்தர் மதிமயக்கம், இறைவன் ஒருவன், உயிர்கள் அவனது திருமேனி என்று காண்போம். பொது நடத் தந்தையாகிய எம்பெருமான் சுத்தசமரச சன்மார்க்க நித்திய வடிவாகக் காட்சியளிக்கிறான். உலகெலாம் ஓதி உணர்ந்து வழிபடத்தக்க ஒருவன் எம் அருளப்பன். நம் செந்தமிழ்ச் சிற்பிகள் அப்பனுக்கு எவ்வளவு அழகான வடிவமைத்திருக்கின்றனர்! அஃதோர் ஓவியக்காவியமே! அதைக் கண்டதும்,

பேதற்ற மெய்ப்போத வடிவ மாகிப்
பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறுச்
சின்மயமாய் நின்மலமே மணந்து, நீங்கா
ஆதரவோ டியல்மௌனச் சுவை மேற் கொண்டு
ஆனந்த ரசமொழகி யன்பா லென்றும்
சேதமுறு தறிஞருளந் தித்தித் தோங்குஞ்
செழும்புனிதக் கொழங்கனியே தேவ தேவே!

என்று, நமது ஆர்வம் வாய்விட்டு அலறுகின்றது! அம்பலத்தரசே! அருமருந்தே! ஆனந்த விண்ணே! சற்குரு மணியே! ஆணவமாகிய முயலகனை மிதித்து நசுக்காய்! மான் போல் துள்ளும் மனத்தை யடக் காய்! துரியந்தன்னில் தூக்கிய திருவடியால் என்னைக் காவாய்! மனதின் கனவொழிந்து துரியங்கடந்த ஞானானந்த மருளாய்! ஐயனே, என் அப்பனே ! நீயே யனைத்தும்! ஐந்தொழிலும் நின் ஆடலே! நினது டம ரகநாதம், சப்த ப்ரம்மம், உலகின் காரணம் ; நீ ஓங்காரத்தால் உலகைப் படைத்தாய்; ஞானக் கனலை இடக்கரந்தாங்கினை ; அக்கனலில் எனது மடமை, பொய்மை, அகந்தை, ஐயம், அச்சம் எல்லாம் அழிக! நின் நித்திய, உபசாந்தக் கரங்களால் என்னை ஆசீர்வதிப்பாய் ! அஞ்சலிக்கரத்தால் அச்சந் தீராய்! என் அன்பிற் கலந்தொளிரும் அருளமுதே!” நினது கிரியா சக்தியான கங்கை பாய்ந்து என் வாழ்வைப் பேரின்பச் சோலையாக்குக! சிவானந்தமாகிய சந்திரன் என் உள்ளத்தில் உதயமாகி, எனது இருளை விழுங்குக! தலைவனே, எனது அகந்தைப் புலியைக் கிழித்து, அதன் உரியை நீ யணி! எனது மமதை யானையை யுரித்துப் போர்வை யணி !

பாச வெறிகளும், வீரியத் தினவுகளும் எரிந்து சாம்பலான என் யாக்கைத் தில்லை – வனத்தில் எனது இதயச் சிற்சபையில் சச்சிதானந்தத் திருநடம் புரிவாயாக! அப்பனே!

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி யோங்கும்
கங்குகரை காணாத கடலே! எங்குங்
கண்ணாகக் காண்கின்ற கதியே ! அன்பர்
தங்கநிழல் பரப்பி, மயற் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவே, பூந்தடமே, ஞானச்
செங்குமுத மலரவரு மதியே, எல்லாஞ்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே!

என்று அடியார் மனமுருகும் அத்திருச் சந்நிதி யில் இன்றொரு புதுமை !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !