அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

66. அருட்பா விளக்கம்

(இது அன்பர் வேண்டுகோளுக்கிணங்கி எழுதப் பெற்றது; வடலூர் சத்திய ஞான சபையிலும், தர்ம சாலையிலும் அன்பரால் படிக்கப் பெற்றது.)

அருளான்ம நேயர்காள்!

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு இதே சத்திய ஞான சபையில் (உண்மையறிவு விளக்கமன்றில்), நமது தமிழணங்கு பெற்ற தவப்பயனாய் வந்த அருட்சோதிக்குயில் அகவியது. அதே மன்றில் நாம் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம். அதே அருட்கனிவாய் மலர்ந்த மணிவாக்கு இன்று நம்மைச் சுற்றி முழங்குகிறது.

ஆனால் குயில் எங்கே? எந்த இளவேனிற் சோலையில் உலாவுகின்றது? “நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே” என்று மறைந்த அந்த அருட்குயில் இன்று இங்கும் எங்கும் இருக்கின்றது. நம் அருள் வள்ளலார் திருவுருவுடன் மறைந்ததை நம்பாதாரும் உள்ளனர். அப்படியிருக்க அவர் இங்கும் எங்கும் இருக்கின்றார் என்பது யாங்ஙனம்?

இக்கூற்றுப் பொய்யன்று. காற்று, புவி, ககனம், புனல், கதிர் ஆகியவற்றாலும், கூற்றாலும், பிணியாலும், கொலைக் கருவிகளாலும், மற்றெதனாலும் எஞ்ஞான்றும் அழியாத ஓர் உடலைத் திருவருட் சோதியப்பன் அன்றே தன் அருமைப் பிள்ளைக்கு அளித்துவிட்டான். அதுவே சுத்தப் பிரணவஞான வுடல்; ஒளியுடல்; நிழலில்லா வுடல்; அவர் உடலை ஒளிப்படக் கருவியில் எடுக்க முடியாது போனதை அன்பர் அறிவர். அந்த ஞானவுடலுடன் வள்ளலார் இதோ! இன்று நம்மிடைப் போந்துளார். விழியிருப்பவர்கள் காணுங்கள்!

அன்பர்களே, உள்ளத்தைத் தொட்டுப் பாருங்கள்! உள்ளம் அன்பாகிய இளவேனிற் சோலை; அதில் அருட்குயில் அகவுகின்றது. அன்று ஓருடல் கொண்டு வள்ளலார் உலாவினார். இன்று நம் வள்ளலார் இலட்சக்கணக்கான அன்பருளத்தில் அருள் வடிவாக உலாவுகின்றார். இதோ இந்த அருட்பா; பார்த்தாலும், நினைத்தாலும், உணர்ந்தாலும், தொட்டாலும், கற்றாலும், கேட்டாலும் இத்தனைக்கும் தித்திக்கும் திருவருட் கற்பகக்கனி. இவ்வமுதக் கனிச் சுவை நிறைந்த உள்ளமெல்லாம் வள்ளற்குயில் உலவும் வசந்த சோலையே. வள்ளலார் தெய்வப் பெருமையை, ஆறுமுகனே ஒருமுகங்கொண்டு வந்த அந்த அற்புத அவதாரத் திருவை, அறிவதற்கு இவ்வருட்பா வொன்றே போதாதா?

அன்பர்காள்! இதுவே வள்ளலார்; இதுவே சாகாவுடம்பு. இத்திருவருள் வேதம் பிரணவசரீரமுள்ளது; இதுவே சப்த ப்ரஹ்மம்; இதுவே ஞானவுடல். இதனினும் அறிவுக்கடல் வேறு எங்கேயாவது கண்டதுண்டா? கேட்டதுண்டா?

அன்பர்களே! சீக்கியரின் வீரக்குருமணியான குருகோவிந்த சிம்ஹன், தனது உடல், பொருள், ஆவி, மக்கள் அனைத்தையும் தர்மத்திற்காகத் தியாகம் செய்து, தன்னையும் இறுதியில் அறப்பலி யீந்தான். அப்போது சீடர்கள்,”குருவே தங்கட்குப் பிறகு யாரை நாங்கள் குருவெனத் தொழுவோம்?” என்று ஆவலாக வினாவினர். தவப்பெருமை மிகுந்த குரு, “எங்கெங்கு நமது ஸத்திய வேதநூல் (கிரந்த சாஹெபு) முழங்குகிறதோ, எங்கெங்கு ஐந்து அன்பர் சேர்ந்து அருட்கலப்பிலிருக்கின்றனரோ, அங்கெல்லாம் நானிருக்கிறேன்” என்று அருளிச் சென்றார். கண்ணனும் கீதையில், “எங்கு இக்கீதை அன்பரால் ஓதப்படுகின்றதோ அங்கு யானுள்ளேன், அங்கு திரு விளங்கும்” என்றார். அதுபோலவே, அன்பர்காள்! எங்கு அருட்பா அருளப்பன்

உள்ளான், உள்ளான். வருந்தருணப் பாடல்கள் எங்கு முழங்குகின்றனவோ, அங்கே அருளப்பன் வருவான், அருள் விளையாடுவான்.

அன்பர்களே ! இந்த அற்புதமான அருட்பாவைக் கேட்ட வுடனே ஓர் அருளெழுச்சியும், பேரின்பச் சிலிர்ப்பும் உண்டாகாத கல்லுமுண்டோ? இதைப் புனிதமாக இனிது ஓதுமிடங்களிலுள்ள கல்லும், புல்லும், இரும்பும், தூணுங்கூட உள்ளமுருகிப் புத்துணர்வும், புதுப்பொலிவும் எய்தும். இந்த நிகரற்ற அருட்கனி வாக்கின் அற்புதம் இனி வரவரத் தெரியும்.

அருள் வேதம்

அன்பர்காள்! உலகை வளர்ப்பது அருமறை. அருமறை யென்றால் வடமொழி வேதமே யல்ல; நிறை அறிஞரின் அருள் மொழியே வேதம். அது என்றுமுள்ள கடவுளுண்மை; தம்மை யறிந்த புலவரின் தூயவுள்ளத்தில் ஓங்காரமாக எழுந்து முரலும் அருள் வீணை. உபநிடத முனிவர், சிவனடியார்கள், மாலடியார்கள், புத்தர், ஏசுநாதர், முகம்மதுநபி முதலானோர் அருள் வாக்குகளைக் கொண்டு தனித்தனிச் சமயங்களும், கலைகளும், நடையுடைகளும், உலகில் பலவிதமாக உலவுகின்றன. இராமலிங்கப் பெருமான் தெற்கே அருட்கொடி பிடித்த காலத்திலேயே, வடக்கே தட்சிணேசுரம் காளிகோயிலில் வேதாந்த வுண்மைகளை யுபதேசித்து வந்த இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உரையும், சரிதையும் இன்று உலகளாவியுள்ளன. அவர் பெயரால் எத்தனையோ நூல்களும், நிலயங்களும், மடங்களும் தோன்றி யுள்ளன. இவ்வாறு நிறையறிஞரின் அருள்மொழிக்கு உலகையே ஆக்கவல்ல தனித்திறன் உண்டு. இதுகாறும் உலகிற்போந்த புனித நூல்களையெல்லாம் தம்முள்ளடக்கி, சாதி சமய, சாத்திர கோத்திரச் சண்டைகளுக்கு எள்ளளவும் இடமின்றி, எம்மதமும் சம்மதமெனப் போற்றத்தக்க அற்புதத் திருவாக்குகளைப் பொழிந்த நமது அருட்காளமேகத்தை என்னென்று வாழ்த்துவோம் !

இச்சாதிச் சமயவிகற் பங்களெல்லாந் தவிர்ந்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்

என்ற அவரது வேண்டுகோளைப் பொது நிலையில் யாவருள்ளும் நடம்புரியும் அருட்சோதியப்பனே நிறைவேற்றினான். அன்பர்களே! இவ்வருட்பா ஆண்டவன் வாக்கு; அதுவே சாகாக் கலை; உலகில் விரிந்து பரந்த சமய நூல்களிடையே, சமயங் கடந்த பொது நெறியை, மற்ற எந்நூலுக்கும் இல்லாத அமுதச் சுவையும், ஆர்வமும், அன்பும், தெய்வானுபூதியும் கொண்டு, வள்ளலார் வாக்கினின்று நடராஜப் பெருமானே பொழிந்த இவ்வருள் வேதத்தை, ஓதாத தமிழன் இருக்கலாமா? அவ்வருள் வேதம் கல்லையும் கருணையாற் கரைக்கும், மாந்தருள்ளத்தை அருட் பொன்னாக உருக்கும். இதை ஓதி வழிபடாத இல்லம் தமிழகத்தில் இனி இருக்கலாகாது.

நானுரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் சொல் வார்த்தையன்றி,
நானுரைக்கும் வார்த்தையன்று நாட்டீர் நான்—ஏனுரைப்பேன்?
நானார் எனக்கெனவோர் ஞானவுணர் வேதுசிவம்
ஊனாடி நில்லா வழி

என்ற அருள் வாக்கே அருட்பாவின் கடவுட்பெருமைக்கு அத்தாட்சி. அன்பர்களே! இதற்குமுன் இத்தகைய நூல் உலகிற் போந்ததில்லை; இனியும் இத்தகைய அருள்வாக்கு உதிக்குமா என்பது சந்தேகம். உதிக்குமானால் அது நம் பெருமானார் வாக்காகத் தானிருக்கவேண்டும். எத்தகைய நிலையினின்று இவ்வாக் கெழுந்தது?

தந்தேகம் எனக்களித்தார் தம்மருளும் பொருளும்
தம்மையிங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
எந்தேக மதிற்புகுந்தார் என்னுளத்தே யிருந்தார்
என்னுடலிற் கலந்தநடத் திறைவர்

என்றபடி உடல், உயிர், மனம், உள்ளம், உணர்வு, அறிவு, இன்பம், உண்மை, அனைத்திலும் கடவுட் கலப்புடன், சச்சிதானந்த மயமாகி, யோகாந்தம், போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய ஆறந்தங்களுங் கடந்த ஒரு சோதி மலையினின்றன்றோ இவ்வருட்கங்கை அமுதூர்ந்து அடங்காத அன்பின்ப வெள்ளமாக நம்மைக் காக்கப் பெருகி வந்துள்ளது! முக்குண தொந்த விகாரங்களில் நடைப்பிணமாகத் திரியும் மாந்தரைத் தெள்ளிய அருட்சோதி பாய்ச்சி உய்விக்கவன்றோ இக்கங்கை எழுந்தது! இந்த அருட்பா வொன்றைப் படித்தால் ஆயுளுக்கும் போதும்; எல்லாம் இதில் அடக்கம்.

அருட்பாக்கள் அனுபவத்தினின்று மின்னிப் பறந்த பொன் மணிகள். அருட்பா எல்லார்க்கும் பொதுமறை. உங்களுக்கு வேதமும் உபநிடதமும் வேண்டுமா? மகாதேவ மாலையையும் அருட் பெருஞ்சோதி அகவலையும் ஊன்றிப் படியுங்கள்! வேதங் காணாத விழுப்பொருளை இத்தமிழ்த் திருமறையில் உள்ளங்கை நெல்லிக் கனிப் போலக் காண்பீர்கள்!

தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
தன்மயனாய், எவ்வெவைக்குந் தலைவனாகி,
வானாகி, வளியனலாய், நீரு மாகி,
மலர்தலைய வுலகாகி, மற்றுமாகித்
தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
தீஞ்சுவையின் பயனாகித் தேடுகின்ற
நானாகி, என் இறையாய் நின்றோய், நின்னை
நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே!
என்ற ஒரு பாட்டே வேதாந்த சித்தாந்த சாரமாக
விளங்குகிறதே !

ஏசுநாதரின் அருண் மொழிகளைப் பிழிந்தெடுத்தால் இரண்டு அமுதச் சொட்டுகள் விழும். ஒன்று உன்னுள்ளேயுள்ள வானரசை அடை; மற்றொன்று தந்தையைப் போலப் பூரணம் பெறு; அன்பர்களே! அந்த வானரசு இன்னதென்று இதுகாறும் யாரும் விளங்கிலர்; விளக்கிலர். தாம் கண்டு, அதில் உறைந்து, அதன் இன்பவூற்றை உலகமாந்தர்க் கெல்லாம் ஈந்த நம் வள்ளலார் பெருமை உரைக்கடங்குமோ? “திருச்சிற்றம்பலத்தில் ஆடும் அமுதே, ஆருயிர்த்துணையே, சித்தாந்தப் பொருளே, வேதாந்தப் பயனே, என் உள்ளம் உன்னைப் பணிந்தது. அதில் ஆனந்தப் பழமாகப் பழுத்தாய். என் வடிவை மாற்றினை; என்னுள் உன் முகந் தோற்றினை; பிரிவினை நீக்கினை; உன்னையும் என்னையும் ஒன்றாக்கினை; அகவடிவை நீக்கிச் சுகவடிவந் தந்தனை” என்று அவர் தமது அனுபவத்தைப் பாடும் போது நமதுள்ளம் மாறிப் பிறக்க அவாவுகிறது. தனிப்பொது, பொற்சபை, சிற்சபை, பொதுநிலை என்ற துரிய நிலயத்தை எவ்வளவு அழகாக நம்முன் வள்ளற் பெருமான் சித்தரிக்கிறார்! எல்லார்க்கும் பொதுவில், தானென்றெழுந்த உள்ளமாகிய தகர நிலையத்தில், சுத்தநடம் புரிகின்ற சித்தசிகாமணியின் அருளின்பக் கலப்பினின்றன்றோ இவ்வருட்பாவை வள்ளலார் அள்ளிப் பொழிந்துள்ளார் !

அன்பர்களே ! நீதிநெறிகளை விளக்கும் பௌத்த சமண மதம் வேண்டுமா? அருட்பாவைவிட நீதி யுறுத்தும் நூல்களை வேறு கண்டிலோம். நெஞ்சறிவுறுத்தல் ஒன்று போதும், பச்சை மரத்தில் ஆணி பாய்ந்தாற்போல நன்னெறியுணர்வும் உலகாயத வாழ்வின் இழிவும் மனத்தில் பளிச்செனப் பாயும். முகமது நபி நாயகம்

அருளிய கடவுளுறுதியும் அடைக்கலமும் வேண்டுமா?

என்னைவிட மாட்டாய், நான் உன்னைவிட மாட்டேன்
இருவரு மொன்றாகி யிங்கே இருக்கின்றோம்

என்ற வாக்கு ஒன்றே போதும். இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சிறு கதைகள் உதாரணங்கள் வாயிலாகக் கூறிய சர்வ மத சமரச வுண்மைகள் வேண்டுமா? அருட்பாவில் ஒவ்வொரு பக்கத்திலும் இனிக்க இனிக்கக் காண்க !

இவையெல்லாம் மிகச் சாதாரண விஷயங்கள். இவை யெல்லாம் கடவுளறிவின் அரிச்சுவடிகள். இவற்றிற்கு மேலுள்ள துரிய பிரம்மஞானத்தை அருட்பா அருளுகின்றது. தூல முதல் துரியப் பொருள் முடி மட்டும் எழுந்தோங்கிய அருளறிவுத் திருமலையே அருட்பா. எந்த அறிவை அருட்பா வலிவுறுத்து கின்றது? கேளுங்கள்:-

துரிய மேற்பர வெளியிலே சுகநடம் புரியும்
பெரியதோர் அருட்சோதியைப் பெறுதலே யெவர்க்கும்
அரிய பேறுமற் றவையெலாம் எளியவே யறிமின்
உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்!

இந்நிலைக்கு உயர உறுதுணை யென்ன? அதுவே அருள். “அருள்” என்னுந் தமிழ்த் திருமொழிக்கு ஈடு வேறுமொழிகளில் இல்லை. அன்பு, சத்தி, காதல், ஆர்வம், ஒற்றுமை, உயிரிரக்கம், ஈகை முதலிய எல்லா நலங்களும் அடங்கி அவற்றினும் விரிந்த கடவுட் பொருளுடையது அருள். அருளென்பது கடவுள் வல்லமை; கடவுட் சோதியாம். தாக்கற்ற தனி முதல்வன் அந்த அருள் வடிவாகவே உலகில் ஐந்தொழிலும் செய்து அருளாடல் புரிகின்றான். ஆறாவது திருமுறையின் பொருள் இவ்வருளின் விரிவே. ஒவ்வொரு சமயத்திற்கும் மந்திரமுண்டு. சைவத்திற்குப் பஞ்சாட்சரம் போல நமது அருட் சமயத்திற்கு வள்ளலார் மொழிந்த மந்திரமென்ன? அதுவே “அருட்பெருஞ்சோதி” (Supreme Divine Light) என்னும் அஷ்டாட்சரம். உலகில் கண்ணெதிரே விளங்கும் பொருள்களில் தூயது, பெரியது, அழகியது, இன்றியமையாதது, எல்லாந்தருவது எது? அதுவே ஒளி, சோதி, கதிரவன், சூரியன். இச்சோதிக்கும் சோதியாகி அனைத்திலும் பெரிதான ஆண்டவனின் அருட் சோதியையே வள்ளலார் உள்ளத்தில் நினைந்து நினைந்து உருகச் சொல்லிப் போந்தார்.

இந்த அருளுதயம் வள்ளலாருக்கு எப்போதுண்டாயிற்று என்று சிலர் வினவுவர். பலர் பலபடக் கூறுவர். வள்ளலார் ஆண்டவனின் அருட் குழந்தையாகவே அவதரித்தவர். உலகம் பல சாதி சமயச் சச்சரவினால் இரத்தகளமானது. கிணற்றுத் தவளை போலத் தத்தம் மதமே பெரிதென மருண்டு சாத்திரங்களெல்லாம் தாறுமாறாக அர்த்தம் செய்யப்பட்டு, மனித வாழ்வு உண்மை நெறி பிசகி, வேற்றுமைக் கந்தலாகிப் போலி மதாசாரங்களில் தட்டழிந்து உழன்றபோது, எம்பெருமான் மனிதரை இருட்சாதி சமயப் படுகுழிகளினின்று எடுத்துச் சுத்த சமரச சன்மார்க்க நெறியில் உயர்த்தவே திருவுளக் கருணை பற்றி எழுந்தருளினார். வடநூல் வேதம் விளங்காது, மறை மறைந்து பண்டிதப் புரட்டுகளால் உருக் குலைந்து போனது. இனி அதைப் பயில்வதில் பயனில்லை யென மாந்தர் அலுத்தனர். அச்சமயமே அனைவரும் தெளிவாக அறியக் கூடிய இனிய எளிய தமிழில் வள்ளற்புலவர் அருள் வேதம் விளக்கினார்.

அவதாரப் பெருமை

அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்
திருந்த வுலக ரனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்
திடுதற் கென்றே யென்னையீந்த
யுகத்தே யிறைவன் வருவிக்க
வுற்றேன் அருளைப் பெற்றேனே.

அருட்பா நேயர்களே! இதுவே வள்ளற் பெருமானின் அவதார ரகசியம். இவ்வருட்பணியே வள்ளலார் வாழ்க்கை. வள்ளலார் வேறு, அருட்பா வேறல்ல. அது அவர். அவர் அது. “இகத்தே பரத்தைப் பெற்று” என்பதை ஆங்கிலத்தில் “to attain Heaven upon this Earth” என்று மொழிபெயர்த்துவிட்டால், உலகெலாம் கைதட்டி “ஹா ஹா என்ன வாக்கு!” என்னும். அன்பர்களே! அருட்பாவின் ஒரு வாக்கு போதும் உலகம் உய்தற்கு. அது காட்டும் அருள்வழியே பல சமயத்தார் தேடியும் காணாதது. அந்த அருள் வடிவாகவே வள்ளற் பெருமான் அவதரித்தார்.

இராமைய பிள்ளையின் மலர்க் கரத்தில் இராமலிங்கக் குழந்தை தன் அருளப்பனைக் காந்த விழியால் நோக்கி, நடராஜ சந்நிதியிலிருந்த அன்றே அருள் விதை அவர் திருவுளத்தில் முளைக்கத் தொடங்கியது. அது திருவொற்றியூரில் செடியானது. மீண்டும் சிதம்பரத்தில் கிளை பரந்தது; கருங்குழியில் மலர்ந்தது; வடலூரில் பழுத்து உலகிற்கு அறுசுவை யூட்டியது. பிள்ளைச் சிறு விண்ணப்பம், பிள்ளைப்பெரு விண்ணப்பம், இங்கித மாலை, திருவருண் முறையீடு முதலியவற்றில் வள்ளலார் வாழ்வுக் குறிப்புக்கள் பளிச்சிடுகின்றன. அவருடைய உயிரிரக்கம் 84 கோடி ஜீவராசிகளையும் அளாவியது. தம் தலையில் கடித்த பாம்பிற்கு மன்னிப்புக் கொடுத்த பெருமானை என்னென்றுரைப்பது! வாடிய பூவைப் புத்தர் கண்டு இரங்கியதை உலகம் இசை பாடுகிறது.

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்; பசியினா லிளைத்தேன்; கன்றுகள் கதறக் கருத்திற் கலங்கினேன்; அதிர் நடை கண்டு நெஞ்சு மதிர்ந்தேன். தீமொழி கேட்டுத் தீயென நொந்தேன். களியரைக் கண்டு கடலள வஞ்சினேன். களவெனக் கேட்டுக் கனலென நொந்தேன். உரத்துப் பேசின் உள்ளம் நடுங்கினேன். ஐயோவென்று வெதும்புவோர்க் கிரங்கினேன். எளியரை வலியர் அடிப்பதை யேங்கினேன். புலாலுண்போரைக் கண்டு எலும்பிளைத்தேன். பிணப்பறை கேட்டுப் பெரிதும் கலங்கினேன். கொலைஞரைக் கண்டு கொள்ளிற்போற் கொதித்தேன்” என்று பிள்ளைப்பெரு விண்ணபத்தில் வரும் அருணெறி வாழ்வின் மின்வெட்டுகளைக் காண்மின்! இத்தகைய வாழ்வும் வாக்கும் ஒன்று கூடி விளங்கும்போதுதான் மகான்களின் அற்புதம் வெளியாகின்றது.

அருள் வாக்கு

கடவுள் வானில் மின்னும் அறிவுமீன்களிடை வள்ளலார் வாழ்வு ஒரு சோதிக் கதிரவன் போல நிலவுகிறது. அச் சோதியில் மற்ற மீன்கள் விழுங்கப்பட்டு நிற்கின்றன. வள்ளலார் தந்தையைக் கண்டார்; சாகா வரம் பெற்றார்; சிந்தை மகிழ்ந்தார். அடி முதல் நுனி மட்டும் ஒவ்வோரணுவும் எம்பெருமான் வாழ்வு அருட்சுவை யுடைத்து. ஓதாதுணர்ந்த முற்றறிவாளரான நம் அருட்பெருமான், கண்ணாடி போன்று மாசற்ற தூய தெளிந்த வுள்ளத்தில் காட்சியான அருளுண்மையைச் சொல்லோவியமாக அவ்வப்போது வெளியிட்டு உலகிற்கீந்தார்.

மணிவாசகரும், ஞானப் பாலறாவாயரான ஆளுடைய பிள்ளையாரும், திருத்தணிகை முருகனும், ஒற்றியூர்த் தியாகேசனும், தந்தையான சற்குருமணி தில்லை நடராஜனும் அவர் வாக்கில் விளையாடிய இன்பத்தை எதைக் கொண்டளப்பது! ஆண்டவனிடம் பிள்ளை போலும், காதலி போலும் உறவாடிய அந்த அன்பை எதற்கு உவமிப்பது! “நீ தந்தை; நான் தனயன்; நான் தீயன்; நீ தூயன்; என்னைப் பழக்கி வைப்பது உன் பாரம். நீ என்னைப் பண்புடன் போற்றா விட்டால் வழக்குண்டாகும்; நான் ஏழை; நீ வெள்ளிமலையான்; பொன்மலை வில்லன். நீ வள்ளல்; உன்னிடம் வந்தேன். ஒரு வார்த்தை கூடப் பேசாதிருப்பதேன்? எள்ளில் எண்ணெய்போல் எங்கும் நிறைந்தும் என் குறையை அறியாயோ? நீ என்னை அறியாவிட்டாலும், நான் உன்னை யன்றி வேறொருவரையும் அறியேன்” என்று நயமாகவும், துணிந்தும் கடவுளை உறுதியாகப் பற்றிய எம்பிரானுக்கு, ஆண்டவன் கைக்கனி போன்று அருளறிவையும், அருட் சிந்தையும் அளித்தான்.

அஞ்சலை நீயொரு சிறிதுமென் மகனே
அருட்பெருஞ் சோதியை யளித்தன முனக்கே
துஞ்சிய மாந்தரை யெழுப்புக நலமே;
சூழ்ந்தசன் மார்க்கத்திற் செலுத்துக சுகமே.
விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
விஞ்சைகள் பலவுள விளக்குக வென்றாய்,
தஞ்சமென் றவர்க்கருள் சத்திய முதலே
தனிநட ராஜவென் சற்குரு மணியே !

“என்னைத் தரவே தன்னைத் தந்தான்” என்பதே அருட் சித்தி ரகசியம்.

என்னுயிரும் என்னுடலும் என்பொருளும் யானே இசைந்துகொடுத் திடவாங்கி யிட்டதன்பின் மகிழ்ந்தே
தன்னுயிருந் தன்னுடலும் தன்பொருளும் எனக்கே
தந்துகலந் தெனைப்புணர்ந்த தனிப்பெருஞ் சுடரே!

இதுவே வள்ளற்பெருமானின் அருட்சித்தி விளக்கம்.

திருவருட் சித்தி

இந்த திருவருட் சித்தி என்றும் அழியாது. அந்த அருட்சக்தி அன்று பல அற்புதங்களைப் புரிந்தது; பிறர் விழிகளுக்குப் புலப்படாது மறைந்துலவும் ஆற்றலீந்தது; உலகின் ஆசையாணவப் பேய்களை நடுக்கி யோட்டியது; தீராத நோய்களைத் தீர்த்தது; அன்பர்க்கு அருந்துணை புரிந்தது; புலை கொலைகளை நிறுத்தியது; வறண்ட கோடையில் மழை பொழிவித்தது; நீரால் விளக்கெரித்தது; சிதம்பரத்தை வடலூரில் இலக்கியது; அரவுகடி தீர்த்தது; சுருக்கமாக, ஞானசம்பந்தர் அப்பர் ஏசுநாதர் புத்தர் முதலியோர் அன்று செய்ததாகக் கூறப்படும் அற்புதங்களை இந்தக் காலத்தில் செய்து திருவருட் பெருமையை விளக்கியது. இவை யனைத்திலும் அற்புதம் அருட்பா; அந்த அற்புதங்கள் அக்காலத்தோடு சரி; அருட்பாவின் அற்புதம் உலகுள்ளமட்டும் நின்று நிலவும்.

அன்பர்களே! இத்தகைய அற்புத வாக்கு மேனாட்டில் எழுந்திருந்தால், இதற்குள் உலகம் முழுதும் பரவி ஒவ்வொரு மொழியிலும் பொன்னாலும் மாணிக்கத்தாலும் பொறிக்கப் பெற்றிருக்கும். எம்மொழியினும் இனிய இளந்தமிழ் மொழியுடையீர்! அருட்பா உங்களுக்கு அருட்பெருமான் அளித்த விலையில்லா மாணிக்க மலையன்றோ? அக்காலத்தில் திருவருட் குயில் பாழ் வனாந்திரத்தில் பாடி அலுத்து மறைந்தது. இன்று அதனன்பும், ஆர்வமும், ஒவ்வொருவருளத்திலும் பதிந்துள்ளன. அருட்பா கேட்காத செவிடனுமுண்டோ? அன்பீர்! அருட்பா, அருள் வேதம். இதை ஒவ்வொரு வீட்டிலும் வணங்குக! ஒவ்வொருவ ருள்ளத்திலும் அருட்பா முழங்குக! அதன் வழி வாழ்க! அது சாமானியமான கவியின் வாக்கன்று; அல்லது சாதாரண அறிவாளியின் வாக்கன்று. அஃது ஒப்புயர்வற்ற சுத்த சன்மார்க்க வேதம்.

சித்திக் கடல் கடந்து, அமைதிக் கரை சேர்ந்து, இதயக் கோயில் கண்டு, அருட் கதவு திறந்து, இன்ப அமுதுண்டு, அறிவொளி பெற்று, அனைத்தும் அறிந்து, அழியாமை பெற்று, உடலும் உயிரும் உளமும் பேரின்பச் சிலிர்ப்பெய்த உள்ளபடி உள்ள உண்மைப் பொருளைக் கூடி, அதுவேயாகி எல்லாச் சித்தியும் பெற்றார் வள்ளலார். அச்சித்தியினின்றுதித்த அற்புதமே அருட்பா. அது சாகாக் கலை; மாந்தரை நித்திய உணர்வில் எழுப்பி, இறவா நிலைதரும் இன்பத் திருவருளாசான்! அந்த அருட்பா, தமிழர் நாவிலூறி நெஞ்சிலூறி வாழ்வை வளஞ்செய்க !

அருட் சாதனம்

இந்த அருநிதியைத் தமிழர் உலகெலாம் பரப்ப வேண்டும். கிறிஸ்தவர், புத்தர், இராமகிருஷ்ண சங்கத்தார் செய்வது போன்று இந்த அருட் சமயத்தை உலகளாவச் செய்யத் தமிழிளஞ்சிங்கங்கள் அருட் பெருஞ் சோதி முழக்கத்துடனெழுக! இந்த அருட்பாவை அப்படியே வேறு மொழிகளில் ஆக்குதல் கடினம். சுமார் 100 அருட்பாக்களையும் வள்ளலார் உபதேசங்களையும் “மகாத்மா இராமலிங்கம்” (Mahatma Ramalingam) என்னும் ஆங்கில நூலில் மொழி பெயர்த்துள்ளமை காண்க. இதன் பொருளை விரிவுரைக ளாக வள்ளலார் வாழ்வுடன் சேர்த்து ஆங்கிலம், பிரெஞ்சு, ஹிந்தி, குஜராத்தி, வங்காளம் முதலிய மொழிகளில் வெளியிட்டு, இந்தியாவிலும் மேனாட்டிலும், கிழக்கு நாடுகளிலும் அருட்சமயத் தொண்டர் ஆங்காங்குச் சென்று சமரச சன்மார்க்க சங்கம் நிறுவ வேண்டும்.

முதலில் 1000 அன்பர்களாவது சாதனஞ் செய்து அருளொளி பெற வேண்டும். இப்போது வள்ளலார் பெயரால் பலி தடுத்தல், புலால் மறுத்தல், சோறு போடுதல், அருட்பா ஓதுதல் ஆகியவை நடைபெறுகின்றன. இவை போதா.

எம்மதத்திற்கும் சம்மதமான பொது நிலைத் தெய்வம் இதய மன்றில் நடமாடுகிறது. அருட்பாவை மந்திரம் போன்று ஓதி, சிந்தித்து, வாழ்விலமைத்து உள்ளத்தைக் கண்ணாடி போன்று மாசறுத்தால், அதில் அருட்சோதி இறங்கும். ஒளி காணலாம்; ஓமொலி கேட்கலாம்; அருளாறு பாய்வதை உணரலாம். உள்ளே தியானம் கூடுமட்டும் ஒருமனப்படுதற்குச் சாதனமாக ஒரு கண்ணாடி முன் பளிச்சென்று ஒரு விளக்கையேற்றிக் கண்ணாடியை மாசற்ற உள்ளமாகவும் விளக்கை அருட்சுடராகவும் தியானம் செய்க! அருள் வாழ்வு வாழ்க! எவ்வுயிரும் பொதுவென் றெண்ணி யிரங்குக! பரந்த கருணையை உள்ளே வளர்த்து வருக!

ஆன்மநேய ஒருமைப்பாடு

சுத்தான்மா ஒன்று; யாவருள்ளும் அது துலங்கும். யாவரும் அதைப் பெறலாம். அதன் சட்டையே பூத விகாரம். ஒவ்வொன்றிலும் ஆன்மாவைக் கண்டு அன்பு செய்க! செய்யின், வேறு சாதி சமய சாத்திர கோத்திரச் சண்டை வேண்டுவதில்லை. இதுவே ஆன்ம நேய ஒருமைப்பாடு. இந்தச் சுத்தான்ம நிலையே சாகாநிலை. இந்த மாசற்ற ஆன்மக்கலப்பு, உடலையும் பொன்னாக்கும்.

உள்ளே கலந்தால் உலகிலும் கலக்கலாம். அப்போது உடலும் கடவுளைக் காட்டும். “மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால், ஈசனைக் காட்டு முடம்பு.”

அருளாட்சியாகிய ஆத்மானுபூதியை உள்ளே பெறுவதே ஸ்வராஜ்யம், தன்னாட்சி; உலக வாழ்வை ஆன்ம விரிவாக்குவதே ஸாம்ராஜ்யம்.

அகிலவாழ் வத்தனையும் ஆன்ம விரிவாக நிகழுவதே யுண்மை நிறைவு.

இதுவே அருட்பாவின் முழுப்பயன். இந்த ஆன்ம நேய ஒருமைப் பாடே உலக ஒற்றுமைக்கு ஆணிவேர். இதுவே சுத்த சமரச சன்மார்க்க விளக்கு. நித்தியமான ஆன்மாவில் அருட்கலப்புடன் வாழ்வதே இறவாமை. இந்த நித்திய சுத்த முத்த சமத்துவ வாழ்விற்கே அருட்பா வழிகாட்டுகிறது. அன்பர்காள்! மீண்டும் மீண்டும் வள்ளற் பெருமான் இதையே வலியுறுத்துகிறார்.

தூய பெருமை

ஆ! அவருடைய அன்பும் அடக்கமும், தாழ்மையும், குழந்தை போன்ற உள்ளமும் உலகின் அற்புதங்களில் ஒன்று. இவ்வளவு அருட் பெருமை வாய்ந்தும், அருள் வாக்கிருந்தும், அருட் சித்தாடியும் வள்ளலார் உரக்கப் பேசார். கைவீசி நடவார்; கைகுவித்தே நடப்பார்; கூட்டம், ஆட்டம் பாட்டம் விரும்பார்; “சாமி” என்று தம்மை அழைப்பதையும் வெறுப்பார்; தம் உருவெழுதி வைப்பதையும் மறுத்தார். அருட்பாவை வெளியிடக் கூட முதலில் அவர் சம்மதிக்கவில்லை. ‘அருட்பிரகாச வள்ளலார்’ என்று அதில் தம்மை அன்பர்கள் சிறப்பித்ததைக்கூட மறுத்தார். தமது சுத்த சன்மார்க்க சங்கத்தில் தம்மையும் ஓர் ஊழியனாகவே யுணர்ந்தார். “சன்மார்க்க சங்கத்தீர்! உம்மை அடிவணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன். என்னை உங்களுள் ஒருவனாகவே கொள்வீர்! எல்லாம் வல்ல இறைவனையே தொழுவீர்! சுத்த சிவம் ஒன்றே பொருள். அதையே பணிவீர்! என்னாணை!” என்று வலியுறுத்துகிறார் வள்ளலார். ஏன்?

உலகோர் அடிக்கடி மனிதவணக்கமே செய்து இறைவனை மறக்கிறார்கள். இறைவனருளிற் சிறிது ஒரு சிலருள் இறங்கி விளை யாடுகிறது; அவர்களை “அவதாரம், அவதாரம்” என்று போற்றிப் பாடி அந்த மனிதர் பெயரால் மதங்களைக் கண்டு, வேறுபாடுகள் உண்டுபண்ணிச் சண்டை போடுகிறார்கள். பொதுநிலைக் கடவுளை அருட் சாதனத்தால் அடையாமல் இருட்சாதி வேற்றுமைகளில் இடர்ப்படுகிறார்கள். இதை உலகம் உணர்க! வள்ளலார் தம்மை அவதாரம் என்று சொல்லிக் கொள்ளவில்லை. “ஐயோ, நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாமையி னாலன்றோ நம்மைச் சுற்றுகிறார்கள்! என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப் பட்டுக் கொண்டேயிருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். அனுபவித்தாலல்லது தெய்வத்தினிடம் பிரியமிருக்காது. நாம் அடைய வேண்டியது ஆன்ம லாபமான சிவானுபவமே; (சிவம் என்பது எல்லோரும் வேண்டும் பேரின்பப் பொருள்.) அருட் பெருஞ்சோதி தனிப்பெருங் கருணையெனும் மந்திரம் ஆண்டவன் அளித்தது. அதை அருணெறி பற்றிச் சாதனம் செய்க!” என்றார் நமது திருவருட் பிரகாசர்.

அருட்சோதி யோகம்

அருட்சோதி யோகம் இதுவே:- அகமாகிய ஆன்மப் பிரகாசமே ஞானசபை. அந்தப் பிரகாசத்திற்குள்ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவு நடனம். இதுவே ஞானகாச நடனம். அருளே அதனையடையும் நெறி. இவ்வருள் எல்லா வுயிர்களிடமும் அன்பு வைப்பதால் எய்தும்” என்று இவ்வாறெல்லாம் படித்துப் படித்துத் திருவருள் உண்மைகளை வள்ளலார் அள்ளித் தெளித்து உலகெலாம் ஓர் அருட்குலமாய் வாழக்கூடிய பொதுநெறியை விளக்கினார். நாள்தோறும் மனிதன் எப்படித் தூய வாழ்வு வாழவேண்டுமென்பதையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

சுருக்கமாக, அருட்பா உலகையும் விண்ணையும் தன்னு ளடக்கி, அதன்மேலும் ஓங்கி நிற்கும் ஒரு சத்ய தர்ம ஜோதி மலை. அதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட இன்னும் உலகம் அறிய வில்லை. அருட்பாவிற்குச் சிலர் உரை எழுதுகின்றனர். அது உரையி லடங்காது. அதன் இனிய எளிய இன்ப நடையை ஓதியோதி, உள்ளே யுணர்ந்து வாழ்விற் பதிக்கவேண்டும். இத்தகைய அருள் விளக்கு உலகெங்கும் விளங்க இனி முயலவேண்டும். தமிழன்பீர்! வள்ளலார் காலத்தில்தான் வடக்கே பரமஹம்ஸரும் உதித்தார். அவர் உரைகளுக்கும், வள்ளலாரின் அருட்பாக்களுக்கும் உள்ள தாரதம்மியத்தை யாரும் அறியலாம். அவருக்கு அங்கு ஒரு விவேகானந்தச் சிங்கமெழுந்தது. இங்குத் தமிழர் அக்காலத்தில் வள்ளலாரை அறியவில்லை.

“ஆன்ம நேய வொருமைப்பாட்டுரிமைச் சகோதரர்களே! (Brothers of the Spiritual Communion) நாம் அருட் பெருஞ்சோதி ஆண்டவரின் ஆணைப்படி, கடையை இந்நாள்வரை விரித்தோம், கொள்வாரில்லை. ஆதலால் இனி இரண்டரைக் கடிகை நேரம் உங்களுடைய ஊனக்கண்களுக்குத் தோன்ற மாட்டோம். நீங்கள் இந்தத் தீபத்தினைக் கடவுள் எனக்கொண்டு ஜீவகாருண்ய நெறியால் வழிபட்டுய்யுங்கள். பிறகு அருட்பெருஞ்சோதி ஆண்டவன் வருவான். அப்போது திருவருட் செங்கோலாட்சி நடத்துவோம். சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். அது கடவுள் சம்மதம்.” இதுதான் வள்ளலாரின் இறுதி மொழிகள்.

அன்பீர்! இவ்வுண்மை இன்று விளங்கிவருகிறது. உலகெங்கும் அருட் பெருமான் சமரச முழக்கம் செய்கிறான். ஆங்காங்குச் சமரசச் சங்கங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆன்ம நேய வொருமைப் பாட்டுரிமை ஓரிடத்தில் மௌனமாக நிலவுகிறது. தமிழுலகம் அருள் நிலயமாகுங் காலம் வரும். இன்னும் சில ஆண்டுகளில் சித்தாடல் எல்லோரும் அறிய விளங்கும்; காண்பீர்கள்! அருட்பாவின் ஒவ்வொரு மொழியும் நிறைவேறும்.

தங்கமே யனையார் கூடிய ஞான
சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும், சங்கம்
சார்ந்திடுங் கோயில்கண் டிடவும்,
துங்கமே பெருஞ்சற் சங்கநீ டூழி
துலங்கவுஞ் சங்கத்தி லடியேன்
அங்கமே குளிர்ந்து நின்றனைப் பாடி
யாடவும் இச்சைகாண் எந்தாய் !

என்று வள்ளலார் அன்று முறையிட்டார். இன்று ஒவ்வொரு தமிழனும் உலகெல்லாம் இவ்விச்சை நிறைவேற முயல்க! அருட் கலப்புடன் அருட்பணி புரிக!

ஐயரருட் சோதியர சாட்சியென தாச்சு;
ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு!
எய்யுலக வாழ்விலெனக் கென்னையினி யேச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு!

என்று கைத்தாளம் போடுமின்! உலகோரெல்லாம் ஒரே அருட் குலமாக வாழ அழைமின்!

வள்ளலார் கண்ட உண்மை யறிவு மன்றம்

வள்ளலார் வாழ்வு அருளுண்மை விளக்கம். இன்று எங்கும் சமரசம் பேசுகின்றனர். ஆனால் உண்மைச் சமரசம் ஆன்மநேய ஒருமைப்பாட்டில்தான் இயலும். அச்சமரச வழியை உலகிற்கு முதன் முதல் காட்டியது மகாத்மா இராமலிங்கமே. அதற்கான அருட்சக்தியைக் கொண்டு வந்ததும் அவரே. அவர் காட்டிய வழியை இன்னும் உலகம் அறியவில்லை. ஏனெனில் வெளி வேடத்திலும், வெளி ஆர்ப்பாட்டங்களிலும், தன்னல வகந்தையிலும் உலகு திரிந்து கொண்டிருக்கிறது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் கூட்டத்தில் வஞ்சகம், கரவு, போர், போட்டி, பொறாமை, தன்னலப்பேய்கள் தாண்டவ மாடுகின்றன. உலகின் அழிநிலையை வள்ளற்பெருமான் திருவுள்ளம் எவ்வளவு தெளிவாக அறிந்துள்ளது!

பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்

என்ற இரண்டு பாக்களையும் பார்க்கவும். வள்ளலார் வாழ்வும், மொழியும் உலகின் நச்சியல்பிற்கு அரிய மந்திரவாதி. அருட்பாவின் உண்மைப் பொருளை உருவாக விளக்கவே வள்ளலார் சத்திய ஞானசபை நாட்டினார்.

அன்பீர்! எம்பெருமான் உலக சமரசத்தைக் கடவுளுண்மை, ஆன்ம அறிவு என்ற இரண்டின்மீதும் நிலைநாட்டினார். உலகெல்லாம் ஒரு கடவுள் மன்றம். அதில் அருட்சோதிக் கலப்பில் அனைவரும் எவ்வகைப் புறவேற்றுமைகளுமின்றி, சுத்த முக்த சமத்வ வாழ்வு வாழலாம் என்பதை விளக்கவே ஞான சபை ஏற்பட்டது. ஒவ்வோரூரிலும் இம்மாதிரி ஞான சபையை நிலை நாட்டவேண்டும்.

உங்களுக்கு ஓர் உதாரணம் காட்டுகின்றேன். நம் வள்ளற் பெருமான் இங்கு “உலகெல்லாம் உலாவுவோம்” என்று மறைந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர், துருக்கியில் பஹாய் இயக்கம் என்னும் உலக சமரச இயக்கம் தோன்றியது. பஹாயர் நமது உண்மை யறிவு மன்றம் போன்று முதலில் ஒரு ஞானசபை கட்டுகின்றனர். அதில் எவ்விதமான குறி வழிபாடு மில்லை. அதில் ஆண்டவனை எல்லாரும் சாதி சமய வேற்றுமையின்றி வழுத்துவர். அதைச் சுற்றி வைத்தியசாலை, பள்ளிக்கூடம், நீதி மன்றம், கடைகள், அச்சுக்கூடம், அன்பர் தங்குவதற்குச் சிறு சிறு மனைகள், விசேட நாட்களைக் கொண்டாடுவதற்கு மாளிகைகள் ஆகியவற்றை எழுப்புகின்றனர். அந்த நிலயம் ஒரு பெரிய நகரமாக விளங்குகின்றது. எல்லாரும் அதில் ஒற்றுமையாக அருட்கலப்பில் வாழுகின்றனர். அமெரிக்கா, பிரான்சு, எகிப்து, துருக்கி, அரேபியாவில் அத்தகைய நிலயங்கள் உள்ளன. அம்மாதிரி ஊருக்கு ஊர் சத்திய ஞானசபையும் அதைச் சுற்றி மக்கள் வாழ்வும் அமையவேண்டும். அத்தகைய அமைவையே ஆன்மநேய வாழ்வு என்போம். இப்பெரிய காரியத்தைத் தமிழர் நிறைவேற்ற வேண்டும். இதுவே ஒற்றுமைக்கு வழி. வள்ளலாரின் திருவுள்ளம் உலகளாவியது; உலகையே ஒரு சத்திய ஞான சபையாக்கி எல்லா மாந்தரையும் அருட் கலப்பில் வாழச் செய்வது.

இப்போது உலகம் தனியகந்தை வேறுபாட்டிலேயே அல்லற் படுகிறது. தான், தனது, தனக்கு என்னும் சுயநலவுணர்வே உலகை இயக்குகிறது; எல்லாம் இறைவன் அவனருளே உலகாடல் என்னும் அருளுணர்வில் ஒன்றுபட்டு மாந்தர் வாழவேண்டும். இன்றுள்ள சமூகக்கிளர்ச்சிகள் தூலமாகச் சில காரியங்களைச் செய்யலாமே யொழிய சர்வாத்ம சமரசம் அவற்றிற்கியலாது.

அருளறிவையும் ஆன்ம நேயத்தையும் பரப்ப வேண்டும். அருட்பா படித்தால் அதன் மந்திர சக்தி புலைத் தொழிலாளரையும் புனிதராக்கும். வள்ளலார் காட்டிய அருள் மருந்தே மருந்து. அம் மருந்தைப் பல நோய்களால் வாடும் உலகிற்கு உதவுங்கள்! கையில் அருட்பாவை யெடுங்கள்! நாவால் அப்பொன்மணி வாக்குகளை அவரவர்க்குத் தெரிந்த மொழிகளிலெல்லாம் பரப்புங்கள். தமிழ்ச் சிங்கங்களே! இனி உறங்கலாமா? தென்னாட்டில் எத்தனையோ மலையினும் பெரிய மகான்கள் விளங்கினர். விளங்குகின்றனர்; இருந்தும் என்ன? வடவேங்கடத்திற்கும் தென்குமரிக்குமிடையே தமிழன்னை சிறைப்பட்டிருக்கிறாள். அருட்பா போன்ற அற்புத நூலை வைத்துக்கொண்டு நாம் இனி உறங்கலாமா? பிறநாட்டார் இங்கு இறக்குமதி செய்த சரக்குகளையெல்லாம் மெச்சிப் போற்றி, நம் தாய் தந்தையர் தந்த தங்க மணிகளை மூலையிற் போடலாமா? தமிழர் சமயம் அருட் சமயம். அதன் பைபிள் அருட்பா. வாருங்கள், அதை உலகெல்லாம் பரப்புவோம்!

அருட்பெருமான் திருப்பெருமை வாழ்க!
அருள் வேதமான அருட்பா வாழ்க ! தமிழ் மறை வாழ்க !

வள்ளற் பெருமானை வாழ்த்தி இச்சொற்பொழிவை முடிப்போம்.

கலகமெலாந் தீர்ந்ததினிக் கண்டுகொண்டோம்
உண்மை; கவலையொரு திவலையில்லை;
காட்டினைநல் வழியே. உலகமெலாம் அருளாட்சி ஒளிபரவி நிலவும்;
ஊனுடலும் ஒளியுடலாம்,
ஞானமணி விளக்கே!
விலகரிதாம் ஆன்மவொருப் பாட்டுரிமை விளங்கும்.
விஞ்ஞான வான்பொழிலில் விளைந்தசுகக் கனியே!
இலகரிய சித்துவிளை யாடுமரு ளரசே,
இதுதருணம் எழுந்தருளிப் பொது நடனம்புரியே.
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
!

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !