
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
22. பசி தீர்த்த தாய்
இந்நிலையில் வள்ளற் பெருமானுக்கு இயல்பாகவே அற்புத சித்திகள் உண்டாயின. அம்மையப்பன் தன் அருள்மணிப் பிள்ளையின் முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொண்டான். அருட்பா நாண் மலர்களைச் சுத்த சிவனுக்கு அர்ச்சிப்பதே இன்பத் தொழிலாகக் கொண்ட நம் பெருமான் சிவபிரானை ஆடிப் பாடி வணங்கி ஆனந்த பரவசங்கொண்டு ஒற்றிக் கோயில் யாக மண்டபத்தில் சிவக் கலப்பிலிருக்கும் போது பசிப்பிணி வாட்டியது. அவர் அதைப் பாராட்டாது மெய்ம்மறந்து சுகானுபவத்தில் துரியத்துயில் கொண்டிருந்தார். மைந்தன் பசிக்கத் தந்தை பொறுப்பனோ? நள்ளிரவில் குருக்கள் வடிவுடன் வந்து எழுப்பி அருளன்னம் ஈந்து பசியாற்றினான் உலகத் தந்தை. மற்றொரு நாள் திருவொற்றியூர் சென்று வீட்டிற்கு அகாலத்தில் வந்தார்; வீடு உள்ளே தாளிட்டிருந்தது; திண்ணையில் பசியுடன் படுத்துறங்கினார் வள்ளலார். அருளன்னை வடிவுடைநாயகி, அவர்தம் தமக்கையார் உருக்கொண்டு வந்து, அருட்பிள்ளையை யெழுப்பி, உணவீந்து சென்றாள். உண்டதும் வள்ளலார் மெய்ம்மறந்து படுத்திருக்கையில், கதவைத் திறந்து தமக்கையார் வந்து, தம்பியாரை எழுப்பி உண்ண அழைத்தார். “இப்போதுதானே உணவளித்தீர்!” என்றார் வள்ளல். “நான் இப்போதுதானே கதவு திறந்து வந்தேன்; முன்னே வரவில்லையே! என்ன வியப்பு!” என்றார் தமக்கையார். பின்னர் அருளன்னையின் திருவிளையாட்டை அறிந்து இருவரும் மகிழ்ந்தனர்.
அன்றொரு நாள் நம்பசிகண் டந்தோ தரியாது
நன்றிரவிற் சோறளித்த நற்றாய் காண்
நான் பசித்த போதெல்லாந் தான்பசித்த தாகி
நல்லுணவு கொடுத்தென்னைச் செல்வமுற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பொன்றுந் தோற்றாத வகையே
ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த வொளியே !
என்று தம் ஆன்மத் தந்தைதாய் தரும் அருளமுதை வியக்கின்றார் வள்ளற் பெருமான்.



