
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
43. உருவா, அருவா ?
அக்காலம் வள்ளலார் திருப்பாதிரிப்புலியூர் பிரம்ம சமாஜி களுக்கு உருவழிபாட்டின் அவசியத்தைப் பற்றி விளக்கினார். பிரம்ம சமாஜிகள் உரு வழிபாட்டை எதிர்த்து விரிவுரை நிகழ்த்தி வந்தனர். அடிகள் உருவணக்கத்தின் தகுதியை வலியுறுத்தி ஒரு சீட்டனுப்பினார். சமாஜத்தார் மறுப்பெழுதினர். அன்பர் வேண்டுகோட்படி வள்ளலார் அவர்கள் வாதத்திற்கு ஏற்ற மறுப்பைக் கூறி ஆண்டவனின் அருள் வடிவையும் உரு வழிபாட்டின் அவசியத்தையும் பற்றித் தெளிவாக விளக்கினார்.
“அருவான பிரம்மத்தை அறிவோர் அறிக; உருவாக அன்பு செய்வோர் அன்பு செய்க. நிரஞ்சன நிராகாரப் பிரமத்தை உருவில் வழிபடாது நினைத்தல் வேண்டுமென்கிறீர்கள். அத்தகைய சுத்த பிரம்மம் உரைமனத்திற்கு எட்டாத பூரணம். மனோலயமான பின்பே பிரம்மானுபவ மெய்தும். மனம் சிறிது கிளம்பினாலும் ஆத்ம ஞானம் விளங்காது. மனம் அசத்து, சடம், அநித்யம், மாயா காரியம். பிரம்மம் சத்து, அறிவு, நித்தியம், இன்பம், சுத்தம், மாயா தீதம். பிரம்மத்தை ஆத்ம ஞானத்தாலே அறியலாம். பிரம்மம் விக்ரக ஆராதனையால் எய்தும். விக்ரகம் என்பது விசேஷ இடம்; ஆன்மா அமரும் வீடு. பக்தியோடு உபாசித்தால் பலனெய்தும். உரு வழிபாட்டால் பலர் அறிவும் அருளும் திறனும் பெற்றிருக் கின்றனர்” என்று தர்க்க இலக்கணப்படி சுவாமிகள் தெளிந்துரைக்கவே உரு வழிபாட்டின் எதிரிகள் விதண்டா வாதம் பலியாது தோற்றனர்.



