
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
25. ஒழிவிலொடுக்கம்
கொண்ணூர் ஐயாசாமி முதலியாரவர்களின் வேண்டுகோட்படி 1854-ஆம் ஆண்டு வள்ளலார் தொண்ட மண்டல சதகத்தைப் பார்வையிட்டுப் பதிப்பித்தார். அதற்கொரு அரிய நூற்பெயரிலக்கணம் எழுதி அப்பதம் தொண்டை மண்டல மல்ல, தொண்டமண்டலம் என்று தொல்காப்பிய மேற்கோள்கள் பலவற்றைக்கொண்டு நிறுவினார். அந்நூலிற்குக் காஞ்சி சபாபதி முதலியார், அஷ்டாவதானம் சபாபதி முதலியார் போன்றோர் சாற்று கவி யீந்து போற்றினர். இதன் பின் ஒழிவிலொடுக்கம் என்னும் அருமைமிக்க சிவாத்துவித நூலைப் பார்வை யிட்டு,
“வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்”
என வரூஉம் முதற் செய்யுளுக்கு அரிய விரிவுரை யெழுதி, ஏனைய வெண்பா மணிகளுக்கும் குறிப்புரை யெழுதியருளினார். அடிகள் பதிப்பே இன்றும் விளங்குகிறது. இவ்வரிய நூல் ஒவ்வொருவரும் பன்முறை யோதி உணரத்தக்கது. அதனின்று இரண்டொரு மணிகளை இங்குத் தெளிப்பாம்.
நாயேறி வீழ்ந்தென்? நடாத்துகிலென்? ஞானிக்குப்
பேயாஞ் சகம்பழித்தென்; பேணுகிலென்?—தோயார்
பெருமை சிறுமையிலை; பின்னுமுன்னு மில்லை;
வரைவற்று வேண்டியசெய் வார்.
மண்ணாதி சத்தாதி வாக்கு மனமாதி
கண்ணாதி நாதாந்தங் கண்டகன்ற—உண்மை
தனையணுவென் றேயுணர்த்துஞ் சார்பினையுங் கண்ட
உனையறிவென் றுள்ளே யுணர்.
என்னாணை யென்னாணை யென்னாணை யேகமிரண்
டென்னாமற் சும்மா இருவென்று—சொன்னான்
திருஞான சம்பந்தன் சீர்காழி நாடன்
அருளாளன் ஞானவிநோ தன்.
என வரூஉம் அரும் பெரும் ஆத்ம ஞான மணிப் பெட்டகமே ஒழிவிலொடுக்கமெனும் ஒப்பற்ற நூல்.



