
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
38. மனப் பேய்களுக்குச் சவுக்கடி
மனத்தைப் பிடித்த ஆசையாணவப் பேய்களுக்கு வள்ளலார் சரியான சவுக்கடி கொடுக்கிறார். அவரது நெஞ்சறி வுறுத்தலையும், விண்ணப்பங்களையும், முறையீடுகளையும் ஊன்றிப் படித்தவர் மனம் இருளொழியும்; அருளை நோக்கும். மாந்தர்தம் பிழைகளைத் தமவாகப் பாவித்து வள்ளலார் சரியான சம்மட்டிப் பூசை கொடுக்கிறார். தமது திருவருட் பேற்றினால் உலகில் மனப்பேய் புரியும் அட்டூழியங்களைத் தாக்கியடிக்கிறார்:-
பன்முகஞ்சேர் மனமெனுமோர் பரியாசப் பயலே
பதையாதே சிதையாதே பார்க்குமிட மெல்லாம் கொன்முகங்கொண் டடிக்கடி போய்க் குதியாதேயெனது குறிப்பின்வழி நின்றிடுநின் குறிப்பு நடவாது,
என்முனமோர் புன்முனைமே லிருந்தபனித் துளிநீ
யிம்மெனுமுன் அடக்கிடுவேன் என்னையறி யாயோ
பின்முனென நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை யானே !
மயங்கு புத்தியெனும் உலக வழக்காளிப் பயலே! மனதில் அடங்கு! இல்லையேல் உன்னை மடித்திடுவேன்! கலை யறியாச் சித்தமெனுங் கனமோசப் பயலே! கால்தலை நிலையறியாது அலையாதே! அசைவற உள்ளே நில்! அகங்கார மென்னும் பொல்லா வடவாதிப்பயலே! நின் செபம் பலியாது! மாயை யெனும் படுதிருட்டுச் சிறுக்கியே! உன் மாயக் கூத்துகளை மூட்டைகட்டிச் சுமந்துகொண்டு காட்டுவழி ஓடு; இல்லையேல் உன்னைப் பின்முன் பாராது மாய்த்திடுவேன்! கன்மமெனுங் கலகப் பயலே! நன்மை தீமை கலந்த விகற்பங் காட்டும் நின் நடத்தை செல்லாது; ஆணவ இருட்டறை காக்கும் குருட்டு மூடப்பயலே! உன் சுற்றத்துடன் செல்! தூக்கமெனுங் கடைப்பயலே, உன் சுற்றமொடும் செல்! இருந்தால் தலை தப்பாது. பயமெனும் கொடும்பாவிப் பயலே, கடலில் விழுந்தொழி! கோபமெனும் புலைப்பயலே, காம வலைப்பயலே, மோகக் கடைப்பயலே, குறும்பு மதப்பயலே, மாற்சரியப் பயலே! இருந்தால் அழிவாய், உடனே செல்! “மரண மெனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே, வையகமும் வானகமும் மற்றகமும் கடந்து பசையற நீ ஒழிந்திடுக !”



