அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

12. முருக உபாசனை

சிவ சண்முக சிவஞான தேசிக முருகனை நமது வள்ளல் உருகிப் பணிந்து குறையிரந்து வழிபட்ட பாக்கள் கல் நெஞ்சையும் உருக்கும். அவற்றின் கருத்தை இங்கு வடித்தெடுப்பாம்:

“அன்னே! எனைத் தந்த அப்பா! குமரா! பரமகுருவே, குகா! உன்னையே நினைந்தேங்கி அலறுகின்றேன்! கலாப மயில் மேல் வரும் அழகிய மாமணியே! வேற்கரனே! மலர்முகனே! உன் வீரக் கழலிற் பணிகிறேன். புவிநடைச் சேற்றில் விழுந்து தியங்கும் என்னைக் கரையேற்றிய உனக்கே விழைவுகொண் டோலமிடுகின்றேன். துன்பக் கடலில் மூழ்கி, எடுத்து விடுவாரின்றி நெஞ்சங் கலங்குகின்றேன். என்னப்பா, கேளாதுபோ லிருக்கின்றனையே! நவை மனம் மாய்ந்து, நின் அன்பர் அவை யணுகி, ஆனந்த வாரியில் ஆட வேண்டினேன். நின் தொழும்பர் திருப்பத மல்லால் சிற்றடியேன் இம்மண்ணிலே ஊரும், தனமும், உறவும், புகழும், மடவார் போகமும் வேண்டிலேன்! நின் கால் பிடித்தேன்! கருணை செய்வாய் !

ஊணே யுடையே பொருளேயென்
றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன்
வேறோர் துணைநின் னடியன்றிக்
காணேன்; அமுதே பெருங்கருணைக்
கடலே கனியே கரும்பேநற்
சேணேர் தணிகை மலைமருந்தே
தேனே ஞானச் செழுஞ்சுடரே !

பெருந் துயரால் வாடி யிளைத்தேன் எந்தாய்! அருட்கடலே! செல்வமே, கரும்பே, தேனே, செம்பாகே, கண்ணே, கற்பகமே, என் குல தெய்வமே! வேற்கை யரசே, மறைப்பொருளே, சாந்த குணக்குன்றே, பன்னிரு கண்ணா! மனங் கலங்கும் இவ்வேழைச் சேயைக் கண்பாராயோ! நாளும் உன்னருள் வழி பார்த்து இளைக்கின்றேன்.

பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த்தும்
பாதமல ரழகினையிப் பாவி பார்க்கிற்

கண்ணேறுபடுமென்றோ கனவி லேனுங்
காட்டென்றாற் காட்டுகிலாய்;
கருணை யீதோ?
விண்ணேறு மரிமுதலோர்க் கரிய ஞான

விளக்கேயென் கண்ணேமெய் வீட்டின் வித்தே,
தண்ணேறு பொழிற்றணிகை மணியே,
ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளுஞ் சகச வாழ்வே!

வாவென்பா ரின்றியுன தன்ப ரென்னை
வஞ்சகனென் றேமறுத்து வன்க ணாநீ
போவென்பா ராகிலெங்கு போவே னந்தோ!
பொய்யனேன் றுணையின்றிப் புலம்புகின்றேன்
கோவென்பார்க் கருள்தருமக் குன்றே, யொன்றே,
குணங்குறியற் றிடவருளுங் குருவே,
வாழ்க்கை தாவென்பார் புகழ்தணிகை மணியே, ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளுஞ் சகச வாழ்வே!

தாயறியாச் சூலுண்டோ? நீ யென் குறை அறியாயோ? பாவி மகனையும் அன்னை தள்ளுவளோ? வேறு கதியுண்டோ? வித்திலாது விளையும் வானின்பமே! பொய்யர் நெஞ்சில் நீ புகுவ தில்லை! நான் பொய்யனேன்! நின் திருவருள் முன் அஞ்சி நிற்கின்றேன். பாலுடன் நீரென நின்னடிக் கலப்பில் வாழ அருள்! சின்மய வடிவமே!

உள்ள நெக்குவிட் டுருகு மன்பர்தந்
நள்ள கத்தினில் நடிக்குஞ் சோதியே!
தள்ள ருந்திறற் றணிகை யானந்த
வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே!

தற் பராபரமே! சற்குண மலையே! சரவண பவனே! வல்லிருட் பவந்தீர் மருந்தே! செஞ்சொற் சுவையே! மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே! தெள்ளமுதே! சேவற் கொடியோய்! சிந்தாமணியே! எய்தற்கரிய அருட்சுடரே! எல்லாம் வல்ல இறையோனே! ஞானச் செழுமணியே! அழியாப் பொருளே! என்னுயிரே! பரஞ் சுடரே! சுயஞ் சுடரே!

என்செய் கேனினுந் திருவருள் காண்கிலேன்
எடுக்கருந் துயருண்டேன்
கன்செய் பேய்மனக் கடையனே னென்னினுங்
காப்பதுன் கடனன்றோ?
பொன்செய் குன்றமே பூரண ஞானமே
புராதனப் பொருள் வைப்பே!
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ்
வள்ளலே மயிலோனே !

பாவியேன் தனியே உழல்கின்றேன்! நின் சேவடியைக் கண்ணாரக்கண்டு மனங் களிப்புறேனோ; எனதென்பதை விடுத்து இவ்வக மாயத்தை வெல்லேனோ; உடல் புளக முறேனோ! மூட முழு நெஞ்சே, பொன்னால் மண்ணால் பூவையரால் என் உயர்வைக் கெடுக்கின்றாய்! சவலை மனமே, நீ சாகாயோ? இல்லதை நினைத்துப் பித்தர் போல் ஏங்கி நிற்கின்றாய்! என் குல தெய்வம், என் சற்குரு குகனருளே நல்லதென்றறியாது, நன்றி மறந்தாய்; நின் செயல் எனக்குத் திடுக்கிடுகின்றது! திருந்தாய் நெஞ்சே, குகனடி பொருந்தாய்! உமையாளருட் பாலனே, சிற்சுக வாரியே! வெளிப் பூச்சில் மயக்கிக் கண்வலை வீசி என் மனத்தை விலைகொள்ளும் காம வலையிற் சிக்கிக் காசம், மேகம், சூலை முதலிய கடும் பிணிக்காளாய் வருந்தாது, நின் நேசமே கொண்டு வாழ அருள்! மின்னார் போகத்தில் மயங்கி வெயிற் புழுப்போல் வாடாது பரம யோகியர், நல்லடியார் கூட்டத்திருக்க அருள்!

செய்கொள் தணிகை நாடேனோ
செவ்வேள் புகழைப் பாடேனோ
கைகள் கூப்பி ஆடேனோ
கருணைக் கடலி னீடேனோ
மெய்கொள் புளக மூடேனோ
மெய்யன் பர்பால் கூடேனோ
பொய்கொள் உலகோ டூடேனோ
புவிமீ திருதாள் மாடேனே !

சிவயோகியருள்ளம் திகழ்கின்ற ஞான நிறைவே! அவநாள் கழிக்க அறிவேன் அல்லாது, உன் அடி பேணி நிற்க அறியேன்! புவிச் சுமையா யிருக்கின்றேன்! ஏன் பிறந்தேன்? கரும்பு வெறுத்து, வேம்பருந்துங் காக்கை யன்னேன். இரும்பு போன்று கனியாத வன்னெஞ்சக் கள்வனேன்; அரும்பாய நகை மடவார்க்கு ஆளாய், வாளா அலைகின்றேன்; அறிவறியேன்; உன் செம்பாத மலர் ஏத்தேன்! இலவு காத்த கிளி போன்றேன். சொல்லிலடங்காத் துயரியற்றுந் துகள் சேர் சனனப் பெருவேரைக் கல்லியெறிந்து, நின்னுருவைக் கண்களாரக் கண்டு கட்டித் தழுவேனோ! சைவக் கனியே, தற்பரமே! கருணைச் செங்கரும்பே! மெய்ஞ்ஞான வெளியே! பாழ்வினையேன் துன்பமெல்லாம் நீயறிவாய். என் குறையை வேறெவர்பால் இயம்புகேன்? படுகாட்டிற் பலனுதவாப் பனையே போன்றேன்! என்னையே யான் சிரிக்கின்றேன்; தாய்ப் பாலுண்ணாது நாய்ப்பாலுண்டேன்! பாலை நடுவே கருங்கல் போன்றேன்; பொன்னை பொருளா யிரந்தேன் – நின்னைப் பொருளென் றுணராத நீசனேன்; போதானந்தப் பரசிவத்திற் போந்த பொருளே! கொடியாரிடம் குறை யிரந்தேன்; நின்னன்றித் துணை காணேன்; முறையோ, முறையோ! பழுதைப் பாம்பென மயங்கினேன். பொன் பெண் பிணிக்கும் வன்பிணிக்கோ என்னைப் பெற்று வளர்த்தாய் ! இவ்வேழைக் கிரங்காயோ!

மனமே இரவும் பகலும் மயிலேறிய முருகனைத் துதிசெய்! தேறா மனமுந் தேறும்; துயர் மாறும்; மாறாப்பிணி மாயும்; துயிலேறிய சோர்வு கெடும்; இடர் போம்; மையலார் மயக்கம் போம்; இருள் மிடி நீங்கும்! மறைக்குளே மறைந்து, அம் மறைக் கரிதாகிய வள்ளலை உள்ளத்தே உன்னாய்! வேறு மாய நினைப்பின் மீளாய்! மாதர் புணர்ப்பாங் கான் வழிநடவாதே! முருகன் கழல்வழி நட! உலக மயக்கற, மெய்மை யுணர்!

சிவத் தருவில் அருள் பழுத்த செங்கனியே! ‘எவையும் நாடாதே, என்னடி நிழலிரு!’ என்று நீ ஏழைக் குரைக்கு நாள் என்றோ? அருவுருவாகுஞ் சிவபிரானளித்த அமுதே! நீயருள் செய்யாயேல் துன்புற்று மெலிவேன். என்னுயிரே, என் பேறே, என் பொருளே, குருவே, அன்பருக் கெளிவரு மரசே, முத்திக்கு வித்தே, சுத்தனே! பத்தி வலைப்படுவார் இடர்க்கடல் விடுத்தேற எத்தனை நாட் செல்லுமோ! ஓம் சிவசண்முகா சரணம்!”

இவ்வாறு உருகி அழுதலறித் தவிக்கும் அன்பனுக்கு ஆறுமுகப் பெருமான் கருணை மலர்ந்து குரு வடிவாகத் தோன்றி, ஞானசக்தியும் சாகாக் கலையும் அருளினார். முருகனைக் கண்ட பரமானந்தத்தில் நம் வள்ளற் பெருமான் உள்ளமுருகும் உருக்கம் என்னே !

“சிவனார் மகனார், குகனார் என் முன்வந்தார்! புது வாழ்வு தந்தார்! தொழுவார் அழுவார், விழுவார், எழுவார், துதியா நிற்பவர் நிற்க, புழுவுடலோம்பும் என்முன் வந்தருளினாரே! பொன்னே விரும்பும் புல்லர்பாற் போகேன்! நின்பதமே போற்றும் வண்ணம் சின்னமளித்து அருட்குருவாய் என்னை முன்னே சிறுகாலை ஆண்டுகொண்ட தேவ தேவே !

கல்வியெலாங் கற்பித்தாய் நின்பால் நேயங்
காணவைத்தா யிவ்வுலகங் கான லென்றே
ஒல்லும்வகை யறிவித்தா யுள்ளே நின்றேன்
உடையானே நின்னருளு முதவு கின்றாய்!
இல்லையெனப் பிறர்பாற்சென் றிரவா வண்ணம்
ஏற்றமளித் தாய்இரக்க மென்னே யென்னே!
செல்வருட் குருவாகி நாயி னேனைச்
சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே!

எந்தை நீ யிருக்க இனி என்ன குறை! உலகிற் பிறரை ஒரு காசுக்கும் மதியாது, நின்னடியே மதிக்கின்றேன். அல்லும் பகலும் நின்னையே துதிக்கின்றேன்.

விண்ணுறு சுடரே யென்னுள்
விளங்கிய விளக்கே போற்றி !
கண்ணுறு மணியே யென்னைக்
கலந்தநற் களிப்பே போற்றி !
பண்ணுறு பயனே யென்னைப்
பணிவித்த மணியே போற்றி !
எண்ணுறு மடியார் தங்கட்
கினியதெள் ளமுதே போற்றி !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !