
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
17. தெய்வப் பிறப்பு
இப்போது சபாபதியார் முத்தியாலுப்பேட்டையில் சனிக் கிழமைதோறும் செல்வரொருவர் வீட்டில் பெரிய புராணப் பிரசங்கம் செய்து வந்தார். ஒரு நாள் அவர் பித்தக் காய்ச்சலாற் படுத்த படுக்கையோடிருந்தார். அன்று புராணத்தை நிறுத்தி வைக்க மனமில்லை. மனைவியிடம் தம்பியை அழைக்கச் சொல்லி, “இராமலிங்கம், நீ இரண்டொரு பாடல் படித்து வா!” என்றார். சென்றார் இராமலிங்கம்.
விளக்குகள் பகலிட்டன. நடராஜர் படம் வெகு அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. முன்னே, காய் கனி கடலை கற்கண்டு தட்டுத் தட்டாக வைக்கப்பட்டிருந்தன. அனைவரும் உற்சாகமாகப் புராணிகரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வந்தார் எம்பிரான். அண்ணல் உடல்நலமின்மையை அறிவித்தார். சபையோர் இராம லிங்கரையே பிரசங்கஞ் செய்யும்படி வற்புறுத்தினர். திருவருட் டுணையை நம்பிப் பிள்ளையார் இசைந்தார். அன்று சொல்ல வேண்டிய பொருளென்ன? தம் அருட் குருவான ஞான சம்பந்தப் பெருமானின் சரிதமன்றோ! தொடங்கும் போதே அருட்பால் ஒழுகியது! உள்ளிருந்து ஏதோ ஒரு கடவுளருள் அமுத வெள்ளமாகக் கொட்டுகிறது! அதை அள்ளியள்ளிச் செவிமன விருந்திடுகின்றனர் அவையோர்! ஒன்பது மணிக்கு முடிவுறும் விரிவுரை 10, 11, 12 மணிக்கு இரண்டு வரிகளின் பொருள் விரிவைக் கண்டது. சபை இமை கொட்டவில்லை. குரல் கண்ணன் குழலோ, கலைமகள் யாழோ! வசந்தச் சோலையின் அணியழகைக் கோடி குயில்கள் குரலொன்றி வர்ணிப்பது போல, கடவுள் மணங்கமழும் சேக்கிழார் வாக்கை, பாலறாவாயரின் பைந்தமிழ்ப் புகழை, அருட் பாலருவி ஊறிவரும் கடவுட் புலவரின் கனிந்த மொழிகள் அணி யணியாக எடுத்தோதியபோது சபையின் உள்ளம் அன்பு பூத்தது, அருள் பழுத்தது, இன்பரசம் பெருகியது. அச்சொல்லினிமை ஊனையும், உயிரையும், உள்ளத்தையுங் கவர்ந்து காலத்தையும் விழுங்கியது. எங்கும் அதே பேச்சு. செட்டியாரும் இனி எம்பிரானே புராணம் சொல்ல வேண்டுமென்றார். சபையோரும் அவ்வாறே மன்றாடினர்; சபாபதி பிள்ளையை வேண்டினர். இருவர் பொருளீட்டினால் குடும்பத்திற்கு நலமென்று அவர் இசைந்தார். இராமலிங்கர் புராணமாரி பொழிந்து வருகிறார். “படிப்பில் கருத்திலாது திரிந்த இவன் எப்படிப் பிரசங்கம் செய்வான்!” என்று வியப்பும் ஐயமுமுற்று ஒரு நாள் மறைவா யிருந்து தம்பியார் பிரசங்கத்தைக் கேட்டார் சபாபதியார்! செவியை நம்ப முடியவில்லை. “இது தம்பிதானோ! ஆம்! இல்லை, இவர் தெய்வப் பிறப்பு! தணிகாசலப் பெருமான் அருள் வடிவு!” என்று பேருவகை விம்மி வியந்து போற்றி மனை சேர்ந்து இல்லாளிடம் “தம்பி தணிகைக் குமரனே! இராமலிங்கத்தின் அருட்புலமை அறியாது, அந்தோ, என்ன பிழை செய்தேன்! உடையுணவும் மறுத்தேனே ! என்ன பேதமை ! இராமலிங்கம் ஓதாதுணர்ந்த கடவுட் புலவன் ! என்ன அருள் வாக்கு ! பொருள் நிறைவு ! இன்றே அவனுடைய தெய்வத்தன்மை யறிந்தேன். என் பிழைகளும் ஐயுறவும் என்னையே சுடுகின்றன!” என்று பலவாறு புகழ்ந்து வருந்தித் தம்பியிடம் பயபக்தியுடன் நடந்து கொண்டார்.
அம்மையாரும் எம்பிரானிடம் அன்பும் வணக்கமும் செலுத்தினார். ஆனால் நம்பிரான் இவ்விசையை ஏதும் பாராட்டினாரா? தாம் உள்ளவிடம் உள்ளபடி இயல் நிலையிலேயே இருந்தார். புராணங் கேட்கும் செல்வர் உதவும் பணத்தை வரும் வழியில் கண்டவிடம் வீசி யெறிந்தார். பணப்பற்று சிறிதுமில்லாத இப்பக்குவக் கனியின் செயலைக் கண்ட செல்வர், இவர் கையில் பணந்தராது வீட்டிற்கே நேராக அனுப்பி வந்தனர். இப்போது நம்பிரானுக்குப் பதினாறாண்டுகள் நிரம்பின.



