
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
2. குழந்தை நகைத்தது
அன்பர் குழாம் தேவார திருவாசகம் முழங்குகின்றனர்:
அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே! யென்றுன் னருள்நோக்கி,
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்;
கரைசே ரடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் னடியேன்பாற்
பிரைசேர் பாலில் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ!
என்று முறையிடும் அன்பரிடையே ஒரு மெய்யன்பர் உள்ளுருகி நிற்கிறார். உடலரும்பி விதிர்விதிர்த்து, கண்ணீர் ததும்பி, உள்ளம் வெதும்பி அம்பலவாணனை, அடியார்க் கெளியனை, ஆனந்தத் தேனை, அருட் சுடர் வடிவை, ஐந்தொழிற்கரசை எண்ணி யெண்ணித் தன்னைமறந்து, அதோ நிற்கும் அன்பரே நம் இராமைய பிள்ளை. அவர் கையில் அமுதக்கனி யொன்று மின்னுகிறது ! பொற்றளிர் மேனி ! கருணை வடிவம் ! அருள்மண மலரிற் கனிந்த அற்புதக் கற்பகக் கனியாகிய அச்சேயின் அழகு, எழில், முல்லை போன்ற முறுவல், செஞ்சுடர் முகம், பிஞ்சிளந் திரு, காந்த மலர் விழி ஆகிய இவை நம் கண்ணையுங் கருத்தையுங் கவர்கின்றன. இராமைய பிள்ளை தம் மனைவி சின்னம்மையாருடனும், சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமுலை ஆகிய நான்கு மக்களுடனும் இன்று நடராஜ தரிசனத்திற்கு வந்திருக்கிறார். அவர் கரத்தில் விளங்கும் அன்புப் புதல்வனே சிவனருளாற் சின்னம்மைக்கு வாய்ந்து, உலகுய்ய வந்த நம் இராமலிங்கப் பெருமான். பெரியார் அப்பைய தீட்சிதர் நடராஜப் பெருமானுக்கு அருச்சனை செய்து கற்பூரங் காட்டுகிறார்.
“ஹரஹர மஹாதேவ! சிற்சபேசா! சிவ சிதம்பரம்!” என்று அன்பர் போற்றி செய்கின்றனர். அந்த ஆனந்தக் காட்சிக்கிடையே, அப்பொன்னம்பலத்தில் மிளிரும் மாணிக்கம் போன்ற நம் இராமலிங்கம் என்ன செய்கிறான்? சிவகாமி மணாளன், கனகசபேசன், ஆனந்த நடன சிகாமணி யான இறைவனைத் தனது காந்த விழியால் இமையாது குறித்து அவன் அருள்முகத்தின்முன் ஆடும் கற்பூரச்சுடரைக் கண்டு ளானந்தம் பொங்கி நகை கொப்புளிக்கிறான் தனது உடலப்பன் கரத்திலிருந்துகொண்டு, தனது உயிரப்பனுடன் உள்ளுறவு பேணுகிறான்! அந் நாட்டம் அருள் ஞானசம்பந்தக் குறிப்பேயன்றோ!
தந்தையைக் கண்டேனான்; சாகா வரம்பெற்றேன்;
சிந்தை களித்தேனென் றுந்தீபற;
சித்தெல்லாம் வல்லேனென் றுந்தீபற!
என்று தன் ஆன்மத் தந்தையுடன் ஞான வுறவாடி, அறிவுத் தேனுண்டு களிபொங்குகிறானோ நம் அருட் சேய்!
அன்பருளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே,
அம்பலத்தி லாடுகின்ற ஆனந்த நிதியே !
வன்பருளத் தேமறைந்து வழங்குமொளி மணியே,
மறைமுடியா கமமுடியின் வயங்குகின்ற மதியே!
என்பருவங் குறியாம லென்னைவலிந் தாட்கொண்(டு)
இன்பநிலை தனையளித்த என்னறிவுக் கறிவே!
முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யு
முறைமைநின தருணெறிக்கு மொழிதலறிந்திலனே.
அந்தோவி ததிசயம் ததிசயமென் புகல்வேன்-
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே,
இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி,
இதுகாட்டி யதுகாட்டி யென்னிலையுங் காட்டிச் சந்தோட
சித்தர்கடந் தனிச்சூதுங் காட்டி,
சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி,
வந்தோடு நிகர் மனம்போய்க் கரைந்தவிடங் காட்டி
மகிழ்வித்தாய் நின்னருளின் வண்மையெவர்க்குளதே!
என்று மழலைப் பருவத்திற்றானே தனது தனிக் கருணைத் தந்தையை உள்ளெண்ணி உருகுகின்றானோ! அந்த ஞானசம்பந்தக் களிப்பால் அருணகை பூத்தானோ! கற்பூர தீபாராதனை செய்யும் அப்பைய தீட்சிதருக்கே அத்திருவருட்குறிப்பு குறிப்பாயது; அவர் வியந்தார்; “இக்குழந்தை அம்பலவாணரின் அருட் குழந்தையே” என்று போற்றி வாழ்த்தினார்; பிள்ளை யவர்களைக் குடும்பத்துடன் தமது மனைக்கு அழைத்துச் சென்று இருத்தி அருத்தி விடை கொடுத்தனுப்பினார்.



