அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

49. அற்புதச் சித்து

அருட்கருணைப் பெருந்தந்தை தமக்களித்த அருள் வல்லபத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட வள்ளலார் உலகிற்குக் காட்டவில்லை. சூரியனுக்குக் கதிர் இயல்பு போல வள்ளலாருக்கு அருள் வாக்கும் அருட்சித்தும் இயல்பா யிருந்தன. ஆனால், அருட் பாவினும் அற்புதமான சித்து எது? அவர் உலகிற்குக் காட்டியுள்ள ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையினும் அரிய சித்து எது? இவ் விரண்டு சித்துக்களே உலகெலாம் உய்தற்குப் போதியனவாகும். உலகிற்குத் தமது வாழ்வாலும், உண்மை நிறை மொழிகளாலும் நல்வழி காட்டுவதே தீர்க்கதரிசிகளின் முதன்மையான கடமை. மற்றைச் சித்தாடலெல்லாம் ஆண்டவன் அருட்பெருமை விளங்குதற்கு அவ்வப்போது அரிதாக மகான்களால் “நான் செய்கிறேன்” என்ற ஆணவமின்றி இயல்பாக இயங்கும். ஏசுநாதர் செத்தோரை யெழுப்பினார்; குஷ்டரோகியின் நோயைத் தீர்த்தார்; பேய்களை ஓட்டினார். நம் வள்ளலாரும் அதனினும் அற்புதச் சித்துக்களை வெகு சாதாரணமாகச் செய்தார். ஒரு ஜான், மத்தாய், லூக்கா, பார்தலோமியோ, ஒரு விவேகானந்தர், அக்காலத்தில் இருந்திருந்தால், வள்ளலார் பெயரால் ஒரு அற்புதமான பைபிள் செய்திருப்பர். உலகெங்கும் அவர் அருளாட்சி நிலவியிருக்கும். ஆனால் வள்ளலார் சிற்சபையப்பனுக்கு அருட்பணியாகவே அனைத்தும் செய்தாரே யொழிய எதிலும் சிறிதும் தற்பெருமை வேண்டவில்லை. வள்ளலார் தமது அற்புதச் சித்தை எப்படிப் பெற்றாரென்பது அவர் வாக்கினின்றே அறியத் தக்கது:-

கடல் கடந்தேன் கரை கடந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாங் கண்டேன்;
அடர் கடந்த திருவமுதுண் டருளொளியால் அனைத்தும்

அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை யடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர் குளிர்ந்தேன்,
உள்ள மெல்லாந்
தழைத்தேன்;
உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன்!
இடர் தவிர்க்குஞ் சித்தியெலாம் என்வசமோங் கினவே

இத்தனையும் பொதுநடஞ்செய் யிறைவனருட் செயலே
!

இதுதான் சித்தின் இரகசியம் !

“கடையேன் புரிந்த குற்றமெல்லாம் கருதாது என்னுட் கலந்து ஞானவமுதளித்து, அருட்சித்திப் பூவையைப் புணர்த்தி அருட்கொடை கொடுத்தாய்; நினக்குக் கைமாறென்ன கொடுப்பேன்!” என்று உருகும் அருள் வாக்குகளை நோக்கின் வள்ளலார் தம் உடல், உயிர், உள்ளம், கண், கருத்து, எழுத்து, சொல், செயல் அனைத்திலும் திருவருளை உணர்ந்து அதன் செயலே தம் செயலாகி நின்றமை புலப்படும். இனி, வள்ளலாருக்கு எல்லாம் செய்யவல்ல சித்து ஈந்ததெது என்று ஆராய்வாம்; ஏனெனில் அதுவே அவர் பெருஞ்செயல்களின் ஆவியும் உடலுமாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !