அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

47. சித்தாடல்

ஓரிரவு,ஒரு சிறு விளக்கேற்றி வைத்துவிட்டு கருங்குழி ரெட்டியார் வீட்டினரெல்லாம் வேறோரூர் சென்றிருந்தனர். விளக்குச் சிறிது எரிந்து எண்ணெயின்றி அமரும்போது வள்ளலார் அருகே ஒரு பானையிலிருந்த தண்ணீரை எடுத்து ஊற்றினார். தமது அருட்சுடர்க் கரத்தால் ஊற்றிய தண்ணீரை உண்டு விளக்கும் இரவு முழுதும் எரிந்தது. பெருமானார் தம்மை மறந்து அருட் பாக்களை எழுதிக்கொண்டிருந்தார். விடிந்ததும் வீட்டன்னை வந்து விளக்கைப் பார்த்தாள். நீர் நிறைந்திருந்தது; ஆனால் விளக்கோ நெய் வார்த்தது போல எரிந்து கொண்டிருந்தது. இவர் அதிசய சித்தரென்று அன்று முதல் அனைவரும் வணங்குவாராயினர்.

மற்றொருகால் பாலு ரெட்டி யென்பாரின் தொழுநோயைத் திருநீறளித்துத் தீர்த்தருளினார். அவ்வாறே முத்துநாராயண ரெட்டி யெனுஞ் செல்வருக்குக் கண் மறைவினைப் போக்கினார்; ரெட்டியார் தமது செல்வ முழுதையும் எம்பெருமானையே யேற்றுக்கொள்ள வேண்டினார். ஓடும் பொன்னும் ஒக்க நோக்கும் வள்ளலார் இளமையிலேயே காசு பணத்தைக் கூரையிலும் பாழுங் கிணறுகளிலும் எறிந்து வந்த நிராசைப் பெருமானன்றோ! பரம ஹம்ஸர், துவாரகநாதர் தந்த செல்வத்தை மறுத்தது போலவே மறுத்து, ‘வேண்டுமானால் சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு எழுதிவையுங்கள்’ என்றார். அவ்வாறே ரெட்டியார் செய்தார்.

பின்னொரு நாள் இயல்வனப்பை நுகர அன்பருடன் உலாவும்போது பெருமழை பொழிந்து அனைவர் ஆடையும் நனைந்தது; ஆனால், வள்ளலார் ஆடை மட்டும் நனைய வில்லையாம்.

ஒருநாள் அன்பர் வேண்டுகோட்கிணங்கிக் கூடலூர் சென்று அருணெறியைப் பற்றி உபதேசித்தார். அவ்வூரில் தேவநாயகம் பிள்ளை என்பார் வள்ளலாரைத் தம் வீட்டிற்கு அழைத்தார். வள்ளலார் “இதுதானோ உன் தகப்பன் வியோக ஸ்தானம்?” என்று கையிலிருந்த பிரம்பால் தட்டிக் கேட்டார். தேவநாயகம் திடுக்கிட்டார். “ஆ! நம் தந்தை இப்படித் தலையில் முக்காடிட்ட ஒருவர் பிரம்பினால் தட்டிக் கேட்பார். அவரே உன் குரு” என்று சொல்லிச் சென்றாரே! அடையாளங்கள் மிகப் பொருத்த மாயிருக்கின்றனவே!” என்று தாள் பணிந்து வள்ளற் பெருமானைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்.

இவ்வன்பர் இரசவாதத்திற் பெரும் பொருள் இழந்திருந்ததை ஐயா அறிந்து, அக்கணமே ஓர் இரும்பைச் சொக்கத் தங்கமாக மாற்றிக் காட்டி “அன்பனே, இது இச்சை யற்ற வனுக்கே இயலும். நீ இவ்வித்தையில் மயங்காதே!” என்று அதை மறைத்துவிட்டார்.

மற்றொருமுறை செஞ்சிமலை மீதிருக்கையில் தேவநாயகம் பிள்ளை பசியினால் தவிக்கவே, திடீரென்று, ஒரு செம்பு நீரும் இலட்டுவும் வரவழைத் தீந்து பசி தீர்த்தார்.

ஒரு நாள் வள்ளலார் ஒரு வாழைத் தோட்டத்தூடு சென்றார். ஒரு கொடிய பாம்பு தலையில் தீண்டிற்று. அன்பர் பதறிப் பாம்பைக் கொல்ல முயன்றனர். அருணெறிப் பெருமானோ, “உயிரைக் கொல்லற்க! அதன் நஞ்சு நம்மை நலிக்காது; அதையே நலிக்கும்” எனவே பாம்பு சிறிது நேரத்திற்கெல்லாம் இறந்து விழுந்தது.

கூடலூரில் அடிகள் நிகழ்த்திவந்த அருட்பொழிவுகளுக்கு மஞ்சக்குப்பத்தினின்று இராதாகிருஷ்ண பிள்ளை என்னும் அன்பர் சிரத்தையுடன் வந்து இரவிலேயே ஊருக்குத் திரும்புவார். வழியில் அச்சம் ஏற்படின் உடனே ஒரு மனிதன் தீவட்டி யேந்தி ஒளி காட்டி அச்சந் தவிர்த்து மறைவதை அவர் நாடோறும் கண்டார்; ஆனால் ஆளைக் காணமுடிவதில்லை. வள்ளலாரிடம் இதைக் குறித்துச் சொன்னபோது, எல்லாம் திருவருட் செயலே என்று கூறினார். இருளில் தனிவழிச் செல்லும் அன்பர்க்கு அருளொளி காட்டி அச்சந் தீர்க்கும் கருணை வள்ளலன்றோ அருட் பிரகாசருட் புகுந்துள்ளார்! இச் சமயந்தான் முன்னே நாம் சொன்ன பிரம்ம சமாஜிகளுடன் உருவழிபாட்டு வாதம் நிகழ்ந்தது.

ஒருநாள் அப்பாசாமி ரெட்டியார் வீட்டில் நிஷ்டையி லிருக்கையில் ஒரு சித்தர் வந்தார்; அனைவரும் யாரென்று தொடரவே உடனே மறைந்து விட்டார். வள்ளலார் “இவர் சித்தர்; காண வந்தார்; இதோ அவர் கொடுத்த இலட்டு” என்று காட்டி இந்நேரம் காசியில் இருப்பார் என்று சொன்னார்.

உண்ணாக்கு வளர்ந்து துன்புற்ற ஓரன்பருக்கு ஒருநாள் திருநீறீந்து நோய் தீர்த்தார். மற்றொருநாள் ஒரு வாழைக்கனி தந்து வைத்துக் கட்டச்சொல்லி ஓரன்பருக்கு கண்ணோய் தீர்த்தார்.

வேட்டலம் ஜமீன்தார் மனவிையார் இருவர்; ஒருவருக்கு பிரம்மராக்ஷசு; மற்றொருவருக்கு மகோதரம். ஜமீன்தார் கணக்கற்ற பணம் செலவழித்துக் குறி, கோடாங்கி, மந்திரம், தந்திரம், மணி, மருந்து…எல்லாம் பார்த்தார். போலிச் சிறுதெய்வங்களுக்கு, அந்தோ பாவம்! ஆடு கோழிகளைப் பலி யிட்டுப் பொங்கலிட்டார். இவ்வாயில்லா உயிர்களின் முறையீடுகளினாலோ, ஜமீன்தார் செய்த முன் வினைப் பயனாலோ, முடிவில் அவர் அழைப்பிற் கிணங்கி அருட் பெருமான் அவர் மாளிகைக்கு வர இசைந்தார். ஜமீன்தார், மகான் வரவை நோக்கி நகர் அலங்கரித்து, மனையலங்கரித்து வள்ளலாருக்காக இரண்டு அலங்கார நாற்காலிகள் போட்டிருந்தார்; தம் மனத்தில் நினைத்த நாற்காலியில் அமர்ந்தால் வள்ளலார் பெரியாரே யென்றெண்ணியிருந்தார். வந்தார் பெருமான். அரண்மனை வாயிலில் அடிவைத்தவுடனே, மாளிகையிலிருந்து பிரம்மராக்ஷசு கொண்ட மனைவி அலறியடித்து ‘போகிறேன், போகிறேன்’ என்று திருநீறு வாங்கி யணிந்து வணங்கினாள். பிரம்ம ராக்ஷசு மாயமாய்ப் போயிற்று. பிறகு அரண்மனைக்குட் சென்று ஜமீன்தார் நினைத்த நாற்காலியிலேயே அமர்ந்தார். மற்றோர் மனைவியின் மகோதரத்தையும் திருநீறீந்து மூன்று வேளையில் தீர்த்தார்! இவ்வியத்தகு செயல்களைக் கண்டு ஜமீன்தார் அருட் பெருமானைச் சரண்புகுந்து அடியாராகி, அருள்வழி நின்று, ஐயாவின் உபதேசப்படி சிறு தெய்வங்களுக்கு உயிர்ப்பலியிடும் பெருங் கொலைப் பாதகத்தை அறவே நிறுத்தினார். தேள் பாம்பு முதலிய விஷ ஜந்துக்களைக் கூடக் கொல்லாது ஊருக்கப்பால் எடுத்து விடும்படி உத்தரவிட்டார்.

அங்கிருந்து ஐயா அவர்கள் தொழுவூர் வேலாயுத முதலியார் முதலிய சீடருடன் விருத்தாசலம் சென்று அத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவனுக்குத் தமது அருட்பாமாலையைச் சூட்டினார்.

பொற்சபைச் சித்தனின் அருட் கனியான நம் வள்ளலார் தமது சித்தியால் ஈயம் இரும்பு முதலியவற்றை உயர்ந்த பொன் வெள்ளியாகச் செய்து காட்டி உடனே அவற்றைக் குளங்களிலும் கிணறுகளிலும் எறிந்து விடுவார். வேம்பையர் என்று ஒருவர் ஒரு நாள் நம் சித்தர் சிங்கத்தின் இரசவாத அற்புதங்களைக் கண்டு தாமும் அவ்வாறே பொன்னாசையால் செய்யத் துணிந்து அதற் கேற்ற பொருள்களை நுட்பமாக அறிந்து சேர்த்துத் தனியிடத்தில் தொடங்கவே, இரு கண்களும் பொட்டையாகிக் கெட்டன. பலவகையாக வைத்தியம் செய்தும் பயனில்லை; முடிவில் தம் பிழைக்கு வருந்தி அடிகள் காலில் விழுந்தார். வள்ளற் பெருமானும் தண்ணீர் கொண்டு அவர் கண்களைத் திறந்தார்!

ஒருகால், நெடுநாளாகப் பிள்ளைப்பேறின்றி வருந்திய சிவராமையர் என்பாருக்கு ஆண்மகவு பிறக்க அருளினார்; ஐயரும் பெருமானின் அற்புதங்களை வியந்து உத்தரவுப்படி கோட்டைப் புலவனூரில் ஒரு சத்திரம் கட்டுவித்தார்.

வடலூரில் ஐயா பிரசங்கம் நடக்கையில், ஒருநாள், நான்கு சாமவேத சாஸ்திரிகள் சாம வேதத்தில் கேள்வி கேட்க வேண்டு மென்றெண்ணி வந்தனர். அவர்கள் கருத்தை முன்பே யறிந்த நம் பெருமான் அவர் வருந் தருணம் சாம வேதத்தைப் பற்றிச் சரமாரியாகப் பொழிந்து அவர்கள் கேட்க நினைத்திருந்த கேள்விகட் கெல்லாம் விடையிறுத்துக் கொண்டிருந்தார். இத் திருவருட் செல்வரின் பேரறிவுத் திறனைக் கண்ட சாஸ்திரிகளும் வாழ்த்தி வணங்கிச் சென்றனர்.

பிறகு ஓரடியார் மனைவியின் சங்கை தோஷத்தைத் திருநீறீந்து தீர்த்தார். இரசவாதப் பித்துக்கொண்ட அவ்வடியாரை, நீரும் மணலும் கலந்த ஒரு குவளை தண்ணீர் தரச் சொல்லிக் கையால் மூடி யெடுக்கவே மணலெல்லாம் பொன்னாயிருந்தது.

மற்றொருகால் திரு ஆதிரைத் தரிசனத்திற்காகத் தில்லை செல்லும்போது ஒரு குன்ம நோயாளரை அக்கணமே குணப்படுத்தினார்.

மழை வறண்டு வடலூரைச் சுற்றியுள்ள குடிகள் வருந்தவே, தமது திருவருள் வல்லபத்தால் நான்கு செவி மழை பொழிவித்தார்.

புதுப்பேட்டையில் இரண்டு உவர்நீர்க் கிணறுகளை நன்னீர்க் கிணறுகளாக்கி யருளினார். இன்றும் அவை பால் போன்ற நீரளிக்கின்றன.

அவ்வூரில் ஒரு வீடு பற்றிக் கொழுந்து விட்டெரியும் போது தம் ஆடையால் வீசி யணைத்து அனைவரையும் காத்தருளினார்.

ஓரிரவு, கச்சேரி சிரஸ்ததார் இராமச்சந்திர முதலியாருடன் மாட்டு வண்டியில் மஞ்சக்குப்பம் சென்று கொண்டிருந்த போது, கள்வர் மறித்து முதலியாரின் வைர மோதிரத்தைத் தர அதட்டினர். ஐயா “அவசரமோ?” என்றார். கள்வர் ஐயாவையும் அடிக்கத் தடியோங்கினர். ஆ! ஓங்கிய கைகள் அப்படியே நின்றுவிட்டன! கண்களும் மூடுண்டன! உடனே கள்வர் தங்கள் அறியாமைக்கு வருந்தி விழுந்து வணங்கி இரக்கங் கேட்கவே, ‘பிச்’ என்றார் ஐயர். அவர்கள் மீண்டும் கண் பெற்றுக் கை பெற்றுச் சென்றனர்.

குறிஞ்சிப்பாடி அன்பர் ஒருவர் காலை ஒரு புதர் முன் உட்காரவே புற்றரவொன்று தீண்டியது. உடனே ‘இராமலிங்கம்மே லாணை’ என்றார். அரவு வாயைத் திறந்தவாறே அசைவற்றது. அதன் கடியும் அவரை எதுவும் செய்யவில்லை. ஐயா அதனைத் தம் ஞான விழியால் அறிந்து, ஓர் உயிர் பட்டினி கிடக்கிறதே என்று இரங்கி, அவ்வாணையை விடுதலை செய்ய அன்பரைப் பணிக்கவே, அவர் அங்ஙனம் செய்யப் பாம்பு புற்றினுட் சென்றது.

ஒருநாள் வள்ளலார் வடலூரில் தருமசாலையில் அன்பர் களுடன் இருந்தவாறே, கூடலூரில் தம் அன்பர் தேவநாயகம் பிள்ளையின் புதல்வரான ஐயாசாமி பிள்ளைக்கு இருந்த ஒரு தீராப் பெருநோயைத் தாமே தோன்றித் தீர்த்தார்.

ஒருநாள் ஆறுமுக முதலியார் என்பார் ஒரு குளிகை பெற விரும்பினார். இஃதறிந்த வள்ளலார் அவர் கரத்தில் இரு சிறு குளிகை வைத்தலும், தாங்க முடியாது கீழே விட்டுவிட்டார். “குளிகை தாங்க வலிமை போதாது உமக்கு. உண்மைநெறி அறியும்!” என்று உரைத்தருளினார்.

மற்றொரு நாள் குருக்களொருவர் குளிகை வேண்டவே இருப்புப் பெட்டகத்தின் மீது வைத்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். குருக்கள் எடுக்க முயலவும் கை பிடித்துக் கொண்டது. அது முதல் அவர் குளிகைப் பித்தை விடுத்தார்.

தம் அருமை யன்பர் தொழுவூர் வேலாயுத முதலியாருக்கு உடம்பு முழுதும் பரவித் தடித்த சிரங்குகளைத் திருநீறீந்து அக்கணமே குணப்படுத்தினார்.

ஒரு நாள் தம்மைக் காண மேட்டுக்குப்பம் வரும் ஓரன்பர் வழி தடுமாறி அலையவே, முன்னே தோன்றி நேர் வழி காட்டி மறைந்தார்.

தம் வழிப்படி பசுக்களை அன்புடன் காத்து வந்த திருவொற்றியூர் இராஜகோபால பிள்ளை யென்பாரை ஒரு நாள் மாடு முட்டி வருத்தவே, ஐயா கனவில் தோன்றி “அஞ்சற்க! நாளை இருவர் வந்து உன்னைக் குணப்படுத்துவர்” என்று கூறி மறைந்தார். அவ்வாறே மறுநாள் இருவர் வந்து குணப்படுத்தினர்.

கொங்கண தேயத்தன்பர் இருவருக்கு ஐயா, வெண் குட்டமும் கருங் குட்டமும் தீர்த்தருளினார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !