அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

5. இராமலிங்கம் பிறந்தான்

பத்துமாதம் அன்னை வயிற்றிற் கோயில்கொண்ட பொன்னம்பலக் குழந்தை உலகொளியைக் காணப்போகிற தருணம்……கலி 4925, சுபானு வருஷம், தட்சிணாயனம், மாரிகாலம், புரட்டாசி மாதம், 21-ம் நாள், ஞாயிற்றுக் கிழமை (5-10-1823), உதயாதி நாழிகை 293/4, மீனலக்னம், சித்திரை நட்சத்திரம் உச்சியினின்று புன்னகை பூத்தது. உலகை இடர்ப்படுத்தி வேற்றுமைக் கந்தலாக்கிய இருட்சாதி மதங்கள் தலைசுழன்றன. மனிதனின் ஆத்ம சுதந்தரத்தை அடிமைப்படுத்திய சாத்திரக் குப்பைகளும், கோத்திரப் பொய்களும், கலைக் கற்பனைகளும், விலையொழுக் கங்களும், அகங் கறுத்து முகமினுக்கும் போலியாசாரங்களும் ஆடிக் காற்றில் தூசிபோலப் பறந்து தவித்தன; நிலமகள் சுதந்தரப் புன்னகை புரிந்தாள். உலகெலாம் ஓர் இன்பச் சிலிர்ப்பெடுத்தது. பாரததேவி புதுயுக வாயிலில் அருட் செங்கோல் ஏந்தி நின்றனள். அக்காலமே தயானந்தர், பரமஹம்ஸர் போன்ற அருளாளர் எழுந்து விளங்கினர். அப்போதே நமது அருந் தமிழ் செய்த பெருந்தவப் பயனாக அருள்வழி காட்டி மனிதமரபையே உய்விக்க, வள்ளற் பெருமான் திருவவதரித்தார். ஈன்ற பொழுதே சான்றோனைக் கண்ட தாயுந் தந்தையும் மகிழ்ந்தனர்; அடியார்க் கமுதிட்டனர்; திருவிழாக் கொழித்தனர். பெரியோர்கள் இவ்வரும் புதல்வனை வாழ்த்தினர்; குருவருள் கொடுத்த திருவருள் மைந்தனுக்கு இறைவனைப் போற்றி “இராமலிங்கம்” என்னும் இன்பப் பேரைச் சூட்டினர். ஜாதகத்தை ஓர் அன்பர் கணித்து அடியில் வருமாறு பலன் குறித்துள்ளார்:

உதயம் மீனலக்னம்; நாலில் குரு; எட்டாவது வீட்டில் புதனும் சந்திரனும்; செவ்வாய், துலாத்தில்; சுக்ரனும் சூரியனும் ஏழாமிடத்தில். இந்த ஜாதகமுடையோன் சிரஞ்சீவி; இவன் உயிர் போவதில்லை; உலகனைத்தும் வள்ளலாய் வாழுவான்; தைரியவான்; கனதனங் கருதான், சுழுத்தி நாட்டமுடையான்; உலகுயிரின்பால் பேரிரக்கங் கொண்டவன்; பத்தாவது ஆண்டில் ஒன்றிற் காதலனாவான்; கற்பமும், உலகத்தைத் திருத்தும் குணமும் சக்தியாலுணர்வான். முப்பதாம் ஆண்டில் பிறப்பிறப்பற்ற நிலை யடைவான், 40-ம் ஆண்டிற் கைவல்ய ஞானம் பெறுவான்; ஞான சித்தியால் 50-ல் பொன்னுடலாகிப் பொலிவான், இவன் ஞான வுடலெடுத்த பெரியோன்; மந்திரம், யோகம், வைத்தியம், வாதம், நூல் நுணுக்கம்—சிந்தையில் எண்ணியவுடனே எய்துவான்.

இவ்வாறு கணிகன் ஐயனின் நாளையுங் கோளையுங் குறித்துத் “தெய்வப் புதல்வன் திருவவதரித்தான்” என்றனர். மருதூர் முழுதும் இக்குழந்தையின் பேச்சே! ஏன்? அன்று முதல் ஊர் செழித்தது! பயிர் செழித்தது; இன்பஞ் செழித்தது; மக்கள் உள்ளஞ் செழித்தது; ஒற்றுமை செழித்தது; இக் குழந்தையின் பெருமையே செழுந்திரு விளைத்ததென மகிழ்ந்து ஊராரெல்லாரும் பேரன்புற்று இராமலிங்கத்தைப் பாராட்டிச் சீராட்டி வந்தனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !