அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

14. ஆளுடைய பிள்ளையார் அன்பு

திருவருட் பிள்ளையார் காமம் வெகுளி மயக்க மற்று, முருகனை வழிபடு கடவுளாகக் கொண்டு குறையிரந்து, ஆத்ம சுத்தியும் ஞானமும் முற்றியதுடன் ஆளுடைய பிள்ளையாரைக் குருவாகக் கொண்டு மேம்பாடடைந்தார்.

நம் அருளுடைப் பிள்ளையார், அன்பு கொண்டுருகிய அடியார் நேயம் நான்காவது திருமுறையிற் காணப்படும் ஆளுடைய பிள்ளையார் மாலை முழுதும் அறிவுச் சுடர் மாலையே. “என்னுயிர்த் துணையே! காழி ஞான சம்பந்தச் செல்வமே! சுத்த சற்குருவே! மூன்று வயதினில் சிவையின் ஞானப் பாலுண்டு அருள் பெற்ற மணியே! உலகியல் ஓர் அணுவும் அறியாச் சிறு பருவத்தில் எனக்குள்ளிருந்து அருணெறியில் ஏற விடுத்து, அளவற்ற உணர்ச்சி யளித்தனை. உயிரனுபவமுற்றால் அருளனுபவ முறும்; அதில் சுத்த சிவானுபவமாகும்; தத்துவ நிலை யேறிப் பரநாதத் தலத்தில், தன் மயமாக நானற்றிருத்தலே உயிரனுபவம்; பரநாத வெளியின் மேல் தன்மயனாகிப் பரம்பரத் துட்புறமாகி, மோனமாயிருத்தலே அருளனுபவம். உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளி மேல், எனது, நான், தான் என்று சொல்ல முடியாது தானதுவாக, விள்ள வொணாத அப்பாலுக் கப்பாலான வெறு வெளியே சிவானுபவம், என்றருளினை. கற்ப காலம் முயன்றாலும் எய்தற்கரிய திறனெலாம் ஒரு பகலில் எனக்கு அறிவித் தருளினை. சிவயோக நிலையருளும் மலையே! உனது செயல் எனது செயல், உனதுடைமை எனதுடைமை. ‘உணர்’ என உணர்த்தும் நிறைவே! உன்னலற வுன்னு நிலை யின்னதென என்னுள்ளுணர உணர்த்தி, உன்னிலையும் என்னிலையும் அன்னிய மில்லை யென்ற பொருளே! எல்லா மறைகளும் ஒரு பொருளின் முடிபென, என்னகம் தெளிவித்த தெருளே! நீ ஐம்பூதமாதியில்லை; தத்துவாதீத அறிவு; ஆறு அத்துவாவையுங் கடந்தது அதீத நிலை; அது நீ. அன்பே சிவம். துவித நிலை நின்ற பின்பே அத்துவித நிலை அடைந்திட முடியும்; சச்சிதானந்தமே அந்நிலை. அதை அடைந்தால் அட்டசித்திகளும் உனக்கு ஏவல் செய்யும். அவற்றை நீ அவாவாதே! அண்டமெல்லாம் பரிபூரணத்தின் விலாசமே. இரவு பகலற்றவிடம் சகல கேவல நிலை, கண்டன வெல்லாம் மன மாயையே. யான் பிறர் என்ற பேதம் விடுத்து என்னோடிரு !

இலகுபரி பூரண விலாசமல திலை; யண்ட
மெங்கணுமெ னச்சொல் பதியே!
இரவுபக லற்றவிட மதுசகல கேவலம்
இரண்டினடு வென்ற பரமே !
இச்சைமன மாயைநீ கண்டவை யெலாம்வெளி
யிருந்துகா ணென்ற தவமே !
யான்பிற ரெனும் பேத நடை விடுத் தென்னோ
டிருத்தியென வுரைசெய் யரசே !
என்களைக ணேயெனது கண்ணே யெனிருகண்
இலங்குமணியேயெ னுயிரே
என்னுயிர்த் துணையேயெ னறிவே யெனறிவூ
டிருந்தசிவ மேயெ னன்பே !
என்றெய்வ மேயெனது தந்தையே யெனையீன்
றெடுத்ததா யேயெ னுறவே !
என் செல்வமே யெனது வாழ்வே யெனின்பமே
என்னருட் குரு வடிவமே !

என்று தம் குரு சம்பந்தவள்ளலை அருள்வள்ளல் போற்றி அவரிடம் தாம் உள்ளே பெற்ற மிகப் பெரிய உபதேசத்தையும் தெளிவாக விளக்கி அதையே தமது வாழ்வின் நிறைவேற்ற மாக்குகிறார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !