
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
59. சன்மார்க்க சங்கம்
திருவருளடைவே சன்மார்க்கக் குறிப்பு. அதற்கே வள்ளலார் உரையாலும் செயலாலும் உழைத்தார். இறைவன் தனிப்பெருங் கருணையன். கருணையே அவனை அடையும் வழி. கருணை விளக்கத்திற்கே சத்திய ஞான சபை ஏற்பட்டது. இது சாதி சமயம் நாடு மொழி நிறம் முதலிய வேறுபாடெதுவுமின்றி எல்லாருக்கும் சுத்த சமரச சன்மார்க்கமான சோதிக்கடவுளை நாடி அருணெறியைப் போதிப்பதற் கேற்பட்டது.
1867-வது ஆண்டு சமரச சன்மார்க்க சங்கம் ஏற்பட்டு ஆறு ஆண்டுகள் தீவிர வேலை செய்தது. அதன் வேகம் இப்போது நாடெங்கும் அதிகரிக்கிறது. பிணி, மூப்பு, சாக்காடற்று நித்திய தேகம் பெறவும் தன் அன்பரான இச்சங்கத்தினருக்கு வள்ளலார் வழிகாட்டினார். ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையே (Spiritual Communism) வள்ளலாரின் சுருதி வாக்கியம். சுத்தான்மா ஒவ்வோ ரிதயத்திலும் ஒளிரும். அதில் ஒன்றி அனைவரும் ஒரே அருட் குலமாக இறைவனைத் தலைக்கொண்டு வாழ்தலே ஆன்மநேய வாழ்வாம். சாகாக்கலையே ஆன்மநேயர் கல்வி. அருட்பாவே இவர்கள் ஓதுந் திருமுறை. வள்ளலார் தம் அன்பர்க்கு வாரிச் சொரிந்த அருட்சோதி மழையினின்று சில மின்றுளிகளை ஈண்டுத் தருவாம்.



